பெரும்பாணாற்றுப்படை – அறிமுகம்
பெரும்பாணாற்றுப்படை – அறிமுகம்
தமிழ் மொழியின் தொன்மை
இன்று வழக்கில் இருக்கும் மிகப் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று
என்பது மொழியியல் அறிஞர்களின் கருத்து. தமிழில் நமக்குக்
கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல். தொல்காப்பியம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியரால் எழுதப்பட்ட நூல்[1]. அந்த நூலில்,
இருநூறுக்கும் மேலான இடங்களில், தொல்காப்பியர்,
“என்ப”, “மொழிப”, ”கூறுப”,
“என்மனார் புலவர்” என்று மற்ற இலக்கண
நூல்களைச் சுட்டிக் காட்டுகிறார். இதிலிருந்து,
தொல்காப்பியத்துக்கு முன்னரே பல இலக்கண நூல்கள்
இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. எள்ளிலிருந்து
எடுக்கப்படுவதுதான் எண்ணெய். அதுபோல், இலக்கியம் இருந்தால்தான் இலக்கணம் இருக்க முடியும். ஆகவே,
கி.
மு.
மூன்றாம் நூற்றண்டுக்குமுன் தமிழில் இலக்கியம் இருந்திருக்க
வேண்டும்.
அந்தக் காலத்தில் தமிழில் உரைநடை நூல்கள் இல்லை. தமிழில் இருந்த இலக்கியம் எல்லாம் செய்யுள் வடிவத்தில்தான் இருந்தன. அந்தச் செய்யுள்கள் அனைத்தும் யாப்பிலக்கணத்துக்கேற்ப இயற்றப்பட்ட தனிப்பாடல்கள்.
தொல்காப்பியம்
பாடல்களை அகத்திணைப் பாடல்கள் புறத்திணைப் பாடல்கள் என்று இருவகையாகத்
தொல்காப்பியம் பிரிக்கிறது.
திணை என்ற சொல் ‘நிலம்’, ‘இடம்’,
’குடி’, ‘ஒழுக்கம்’, ‘பொருள்’
என்ற பல பொருள்களையுடைய ஒருசொல். தமிழ் இலக்கியத்தில் திணை என்ற சொல் ‘பொருள்’ என்பதைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. மனித வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை அகம், புறம் என்று பிரிப்பது தமிழ் இலக்கண மரபு. ஓர் ஆணும் பெண்ணும்
ஒருவரை ஒருவர் காதலிக்கும் பொழுதும், அவர்களின்
திருமணத்திற்குப் பிறகும்,
தங்கள் வாழ்க்கையில் அவர்கள் அனுபவிக்கும் இன்பமும்
துன்பமும் பற்றிய செய்திகள் வெளிப்படையாகப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள
முடியாதவையாகையால்,
அவை அகப்பொருள் எனப்படும். அகப்பொருளை பற்றிப் பாடும் பாடல்கள் அகத்திணையில் அடங்கும். காதலைத் தவிர வாழ்க்கையின் மற்ற கூறுபாடுகள் புறப்பொருள் எனப்படும். போர்,
வீரம், வெற்றி, புகழ்,
கொடை, நிலையாமை முதலிய
பொருள்களை மையப்பொருளாகக் கொண்ட பாடல்கள் புறத்திணையில் அடங்கும்.
சங்க இலக்கியம்
சங்க காலம் என்பது கி.மு.
300 முதல் கி.பி. 300 வரை என்பதைப் பொதுவாகப் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்கின்றனர். சங்க காலத்தில் இருந்த இலக்கியம் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் இயற்றப்பட்ட பாடல்களை நூல்களாகத் தொகுக்குமாறு பிற்கால
மன்னர்கள் புலவர்களுக்கு ஆணையிட்டனர். தொல்காப்பியம் வகுக்கும் இலக்கணத்துகேற்ப புலவர்கள் அந்தப் பாடல்களைப்
பதினெட்டு நூல்களாகத் தொகுத்தார்கள். சிறிய பாடல்களில்
சிறந்தவற்றை,
எட்டு நூல்களாகத் தொகுத்தார்கள். அந்த எட்டு நூல்கள்:
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு,
பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை,
அகநானூறு மற்றும் புறநானூறு. எட்டுத்தொகை என்ற சொல் இந்த எட்டு நூல்களையும் குறிக்கிறது. சங்க காலத்தில் இருந்த பாடல்களில் நீண்ட பாடல்களாக இருந்த, சிறந்த பத்துப்
பாடல்களைத் தேர்ந்தெடுத்து,
புலவர்கள் பத்துப்பாட்டு என்று அழைக்கப்படும் பத்து
நூல்களாக்கினார்கள்.
பத்துப்பாட்டில் உள்ள நூல்கள்:
1.
திருமுருகாற்றுப்படை,
2.
பொருநராற்றுப்படை,
3.
சிறுபாணாற்றுப்படை,
4.
பெரும்பாணாற்றுப்படை,
5.
முல்லைப்பாட்டு,
6.
மதுரைக் காஞ்சி,
7.
நெடுநெல்வாடை,
8.
குறிஞ்சிப்பாட்டு,
9.
பட்டினப்பாலை,
10.
மலைபடுகடாம்.
பத்துப்பாட்டில் அடங்கிய பத்து நூல்களும் எட்டுத்தொகையில் அடங்கிய எட்டு
நூல்களும் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகின்றன.
பெரும்பாணாற்றுப்படையின் ஆசிரியர்
பெரும்பாணாற்றுப்படை
500 அடிகளைக்கொண்ட அகவற்பா என்னும் வகையைச் சார்ந்த பாட்டு. இந்த
நூலை இயற்றிய புலவரின்
பெயர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
கடியலூர் என்பது இன்றைய
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள
ஓரூர் என்று சிலர்
கருதுகின்றனர். வேறு சிலர்,
இக்காலத்தில், தமிழ்நாட்டில், இராணிப்பேட்டை
மாவட்டத்தில் உள்ள சோளிங்கர்
என்னும் ஊர் சங்க
காலத்தில் திருக்கடிகை அல்லது
கடிகை என்று அழைக்கப்பட்டதாகவும்,
அதுவே கடியலூர் என்னும்
ஊர் என்றும் கருதுகிறார்கள்.
எவ்வாறாயினும், இவர் கடியலூரைச்
சார்ந்தவர் என்பதில் ஐயமில்லை.
இவருடைய ஊர்ப்பெயரில் கருத்து
வேறுபாடுகள் இருப்பதைப்போலவே இவர்
பெயருக்கும் பல விளக்கங்கள்
கூறப்படுகின்றன. ஒரு சிலர்
இவர் பெயர் ருத்ரக்ருஷ்ண என்ற வடமொழிப் பெயரின் தமிழாக்கம் என்றும், வேறு சிலர், இவர் தந்தையார் பெயர் உருத்திரன் என்றும் இவரது பெயர் கண்ணனார் என்றும் கூறுவர். ஆனால், உரையாசிரியர்கள் இவரைக் கடியலூர்
உருத்திரங்கண்ணனார் என்றே
தங்கள் நூல்களில் குறிப்பிடுகிறார்கள்.
இவர் கரிகால் சோழனைப்
பாட்டுடைத் தலைவனாகக்கொண்ட பட்டினப்பாலை என்ற நூலையும் இயற்றியுள்ளார். இவர்
பட்டினப்பாலை இயற்றியதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்த கரிகால் சோழன் இவருக்குப் பதினாறு நூறாயிரம் பொன் கொடுத்தான் என்று கலிங்கத்துபரணி[2] கூறுகிறது. ஆகவே, இவர் கரிகால் சோழன் காலத்தில் வாழ்ந்தவர் என்று தெரிகிறது. இவர் கரிகால் சோழன் காலத்தில்
வாழ்ந்ததால், இவர் இயற்றிய இந்த நூல் கரிகால் சோழனின் காலத்தைச் (கி.பி. 75 – 115)
சார்ந்தது என்று வரலாற்று ஆசிரியர் மா. இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார்[3].
பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன்
இப்பாட்டுடைத் தலைவன்
கச்சி நகரத்தைத் (இன்றைய
காஞ்சிபுரத்தைத்) தலைநகராகக்கொண்டு தமிழ்
நாட்டின் வடபகுதியில் இருந்த
தொண்டை நாட்டை ஆண்ட
குறுநில மன்னன் தொண்டைமான்
இளந்திரையன். இவன் சோழர்
குலத்தில் பிறந்தவன் என்று
கருதப்படுகிறது. இவன் “திரைதரு
மரபின் உரவோன் உம்பல்”
என்று இப் பாட்டில்
(பெரும்பாணாற்றுப்படை-31) குறிப்பிடப்படுகிறான். அந்த
அடிக்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம்[4] இவனுடைய
முன்னோன் ஒருவனைப் பற்றிய
செய்தி ஒன்றைக் கூறுகிறது.
அவர் கூறும் விளக்கம்:
“நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால்
(பிலத்துவாரம் என்பது கீழுலகம்
செல்லும் வழி என்று
கருதப்படுகிறது) நாகலோகத்தே சென்று,
நாககன்னிகை ஒருத்தியைப் புணர்ந்த
காலத்து, அவள் யான்
பெற்ற புதல்வனை என்செய்வேன்
என்றபொழுது. தொண்டையை (தொண்டை
என்பது ஒரு கொடி)
அடையாளமாகக் கட்டிக் கடலிலே
விட,
அவன் வந்து கரையேறின்,
அவற்கு யான் அரசுரிமையை
எய்துவித்து நாடாட்சி கொடுப்பலென்று
அவன் கூற, அவளும்
அவள் புதல்வனை அங்ஙனம்
வரவிடத், திரை தருதலின்,
திரையன் என்று பெயர்பெற்ற
கதை“
என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார். இந்தக்
கதையின் அடிப்படையில் பார்த்தால்,
திரையர்,தொண்டையர் என்னும்
பெயர்களால் அழைக்கப்படும் அரசர்கள்
சோழனாகிய தந்தைக்கும் நாககன்னி
ஒருத்திக்கும் பிறந்தவனின் வழித்தோன்றல்கள் என்பது புலனாகிறது.
தொண்டைமான் இளந்திரையன் தமிழ்
வேந்தர் மூவருள்ளும் சிறந்த
மன்னனாகவும் கொடைவள்ளலாகவும் விளங்கியதோடு
மட்டுமல்லாமல், அவன் ஒரு
சிறந்த புலவனாகவும் இருந்தான்
என்பதற்குச் சான்றாக, நற்றிணையில்
அவன் இயற்றிய மூன்று
செய்யுள்களும், புறநானூற்றில் ஒரு
பாடலும் உள்ளன.
பெரும்பாணாற்றுப்படை
பாண் என்ற சொல்லுக்குப் பாட்டு என்று பொருள். பாடுபவர்கள் பாணர் என்று அழைக்கப்பட்டார்கள். வாய் வழியே பாடுபவர்கள் இசைப்பாணர் என்றும், யாழ் என்னும் இசைக்கருவியைப் பயன்படுத்திப் பாடுபாவர்கள் யாழ்ப்பாணர் என்றும், சீறியாழ் என்னும் சிறிய யாழை இசைத்துப் பாடுவோர் சிறுபாணர் என்றும், பேரியாழ் என்னும் பெரிய யாழை இசைத்துப் பாடுவோர் பெரும்பாணர் என்றும்
அழைக்கப்பட்டனர்.
பரிசு பெற்ற பாணர் முதலியோர் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தைப் பற்றித் தம்
இனத்தைச் சார்ந்தவர்க்குக் கூறித் தம்மைப் போல் அவர்களும் பயன்பெற, தாம் பரிசுபெற்ற வள்ளல் அல்லது அரசனிடம் ஆற்றுப்படுத்துவது
பாணாற்றுப்படையாகும். இப்பாட்டில்,
பேரியாழைப் பயன் படுத்தும் பெரும்பாணனை ஆற்றுபடுத்துவதைப்
பற்றிப் புலவர் கூறியிருப்பதால், இப் பாட்டு
பெரும்பாணாற்றுப்படை என்று அழைக்கப்படுவதாகச் சிலர் கருதுகின்றனர். பத்துப்பாட்டில் பாணாற்றுப்படையைச்
சார்ந்த இரண்டு பாட்டுகள் உள்ளன. ஒன்று 269 அடிகளைக்கொண்டது;
மற்றொன்று 500 அடிகளைக்கொண்டது. குறைவான அடிகளைக் கொண்ட பாணாற்றுப்படைப் பாட்டை சிறுபாணாற்றுப்படை என்றும்
அதிக அடிகளைக்கொண்ட பாணாற்றுப்படைப் பாட்டை பெரும்பாணாற்றுப்படை என்றும் அழைப்பது
பொருத்த -மானதாகத் தோன்றுகிறது.
இப் பாட்டில்,
யாழின் வருணனை, இளந்திரையன்
ஆட்சிச் சிறப்பு, உப்பு
வாணிகர் இயல்பு, நாட்டு
வழிகளைக் காப்பவர் தன்மை,
எயிற்றியர் செயல்கள், கானவர்
செயல்கள், வீரக்குடி மக்கள்
இயல்பு, முல்லை நில
மக்களின் செயல்கள், உழவர்
செயல்கள், பாலை நிலத்தார்
இயல்புகள், அந்தணர் ஒழுக்கமுறை, நீர்ப்பெயற்று என்னும் ஊரின்
சிறப்பு, திருவெஃகா
என்னும் ஊரில் இருந்த
திருமாலின் திருவுருவம், கச்சி
நகரின் சிறப்பு, இளந்திரையனுடைய வீரம், கொடை
முதலிய பண்புகள், பாணரும்
விறலியரும் மன்னனிடம் சிறப்புப்
பெறுதல் முதலியன மிகவும்
விரிவாகவும் விளக்கமாகவும் கூறப்பட்டுள்ளன.
இந்நூலில், பரிசுபெற்ற பாணன்
புரவலரைத் தேடி அலையும்
பாணனுக்குக் கச்சி நகரத்துக்குச்
செல்வதற்கு வழிகாட்டுவதைப் படிக்கும்பொழுது,
நாமும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழ்நாட்டின் பாலை,
குறிஞ்சி, முல்லை, மருதம்,
நெய்தல் ஆகிய நிலப்பகுதிகள்
வழியாக கச்சி நகருக்குச் சென்றதைப்போல்
தோன்றுகிறது. அது மட்டுமல்லாமல்,
அந்தப் பயணத்தைப் பற்றிய
நினைவுகள் நம் மனத்திரையிலிருந்து நீங்காத இடம்
பெறுகின்றன.
Comments
Post a Comment