பெரும்பாணாற்றுப்படை – பொருட்சுருக்கம்

 பெரும்பாணாற்றுப்படை பொருட்சுருக்கம்

பரிசுபெற்று வரும் பாணன் பெரும்பாணனை ஆற்றுப்படுத்து -கிறான்

கச்சி நகரத்தைத் தலைநகராகக்கொண்டு, தமிழகத்தின் வடபகுதியில் இருந்த தொண்டை நாட்டை இளந்திரையன் என்ற மன்னன் ஆட்சிபுரிந்தான். அவனிடம் பரிசுபெற்ற பாணன் ஒருவன் தன் ஊர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். அவன் செல்லும் வழியில், ஒரு பாணன் பேரியாழ் ஒன்றைத் தழுவிக்கொண்டு, தன் சுற்றத்தாரோடு இளைப்பாறிக் கொண்டிருந்தான். பரிசுபெற்ற பாணன், “பாணரே, நீங்களும் உங்கள் சுற்றத்தாரும் வறுமையோடு, பரிசளிக்கும் வள்ளல்களைத் தேடி, கால்போனபோக்கில் சென்று கொண்டிருப்பதைப் போல் தோன்றுகிறது. உங்களைப்போல் நானும் என்னுடைய சுற்றத்தாரும், நீண்டநாட்கள் பசியால் வாடினோம்; பரிசளிக்கும் வள்ளல்களைத் தேடி அலைந்தோம். அவ்வாறு தேடியபொழுது கச்சி நகரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆளும் தொண்டைமான் இளந்திரையனைச் சந்தித்தோம். பிறர்க்குக் கொடுத்தும் குறையாத அளவுக்குப் பெரும் செல்வத்தையும், குதிரைகளையும், யானைகளையும் அவன் எங்களுக்குப் பரிசாக அளித்தான். அவன் அளித்த பொருட்களைப் பெற்றுக்கொண்டு நாங்கள் இப்பொழுது அவனிடமிருந்து வருகின்றோம். அவனிடம் சென்றால் நீங்களும் பரிசு பெறுவது உறுதி. அவன் இருக்கும் இடத்திற்குச் செல்லும் வழியை நான் உங்களுக்குச் சொல்கிறேன். நீங்களும் அவனிடம் சென்று பரிசுபெற்றுச்செழிப்போடு வாழுங்கள்!” என்று கூறி, தொண்டைமான் இளந்திரையனைப் பற்றியும், கச்சி நகரத்திற்குச் செல்லும் வழியையும், வழியில் உள்ள நிலப் பகுதிகளைப் பற்றியும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை, அவர்களின் உணவு, அவர்களின் விருந்தோம்பல் ஆகியவற்றைப் பற்றியும், வறுமையில் இருக்கும் பாணனுக்கு விளக்கமாகவும் விரிவாகவும் கூறத் தொடங்குகிறான்.

இளந்திரையன் திருமாலின் மரபில் தோன்றியவன்; அவனுடைய முன்னோர்களில் ஒருவன் கடலலைகளால் கரைசேர்க்கப்பட்டவன்; சோழர் குலத்தில் பிறந்தவன்; சங்குகளிலெல்லாம் வலம்புரிச் சங்கு சிறந்ததாகக் கருதப்படுவதைப்போல், சேர, சோழ, பாண்டிய மன்னர்களுள் சிறந்தவன்; அறமல்லாதவற்றை நீக்கி, அறத்தை விரும்பிச் செங்கோன்மை புரிபவன்; பல வேற்படைகளைக் கொண்டவன். நீங்கள் அத்தகைய இளந்திரையனிடம் செல்ல நினைப்பீர்களாயின், அவனுடைய தன்மையைக் கூறுகிறேன், கேள்! உன் துன்பம் கெட்டு ஒழிவதாக! இளந்திரையனின் காவலுடைய பெரிய நாட்டில், வழிப்போக்கர்களைத் தாக்கி, அவர்களின் உடைமைகளைக் கைப்பற்றும் கொடிய கள்வர்கள் இல்லை; பாம்புகள் கொல்லமாட்டா; காட்டு விலங்குகளும் தீங்கு செய்யமாட்டா; நீ விரும்பியபடியே, இளைப்பாற வேண்டியபொழுது இளைப்பாறி, விரும்பியவிடத்தே தங்கிச்செல்வாயாக!

உப்பு வாணிகர் செல்லும் நெடிய வழி

முதலில் நீங்கள் பாலை நிலப்பகுதியில் செல்வீர்கள். நீங்கள் செல்லும் வழியில் உப்பு வணிகர்கள் உப்பு மூட்டைகளை வண்டியில் ஏற்றிச் செல்வர். அந்த வண்டிகள் பனையோலைப் பாய்களால் வேய்ந்த கூரையால் மூடப்பட்டிருக்கும்அந்தக் கூரையின் மேல் ஒரு கோழிக்கூடு இருக்கும். அந்தக் கோழிக்கூட்டின் வாயிலில் ஒரு சிறிய உரல் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். வண்டியின் முன்பக்கத்தில் ஒரு ஊறுகாய்ப்பானை வைக்கப்பட்டிருக்கும். உமணப் பெண் வண்டியின் முன்புறத்தே இருந்து, எருதுகளை அடித்து ஓட்டுவாள். அவள் ஒரு கையில் தன் பிள்ளையை வைத்திருப்பாள். உப்பு வண்டிகளை இடையூறு இன்றிக் காப்பாற்றுவதற்காகத் திரண்ட தோளும், வலிமையும், முறுக்கேறிய உடலும் உள்ள ஆடவர் சிலரை உமணர்கள் உடன் அழைத்துச் செல்வர். அவர்கள் உமணர்களுக்கு மட்டுமல்லாமல் அவ் வழியில் செல்லும் அனைவருக்கும் இரவிலும் பகலிலும் காவலாக இருப்பர்.

உப்பு வணிகர்கள் மட்டுமல்லாமல் வேறு வணிகர்களும் நீங்கள் செல்லும் வழியில் செல்வர். குறிப்பாக, மலையிலும் கடலிலும் கிடைக்கும், சிறந்த பயனைத் தருகின்ற, பெறுதற்கரிய பொருள்களை (அகில், சந்தனம், மிளகு, பொன், முத்து, பவளம், போன்ற பொருள்களை) ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வணிகர்கள் இருப்பார்கள். அவர்களுக்குப் பாதுகாவலாகச் சில வீரர்களும் உடன் செல்வர். அவ்வீரர்கள் குற்றமற்ற நற்செயல்களையே மேற்கொள்வர். அவர்கள் தங்கள் காலில் செருப்பும், உடலில் சட்டையும் அணிந்திருப்பர்; ஆறலைக்கள்வர்களோடு போரிட்டு, அவர்களின் வில்லாற்றலை முறியடித்தபொழுது தோன்றிய புண்களால் ஏற்பட்ட வடுக்கள் அவர்களின் மார்பில் காணப்படும்; தங்கள் மார்பின் குறுக்கே கச்சு அணிந்திருப்பார்கள். அவர்கள் அணிந்திருக்கும் கச்சு, மலையின் குறுக்கே ஊர்ந்து செல்லும் மலைப்பாம்புபோல் தோற்றம் அளிக்கும். அந்தக் கச்சில், இடப்பக்கத்தில், வெண்மையான கைப்பிடியையுடைய வாள் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். அவர்கள் தங்கள் இடையில் உடுத்தியிருக்கும் ஆடையை இறுகக் கட்டியிருப்பர்; அந்த ஆடைக்குள் ஒரு வாளைச் செருகியிருப்பர். அவர்கள் பகைவர்களின் வில்லாற்றலை அழித்த, பரந்து அகன்ற வலிமையான தோள்களோடு, முருகனைப்போல், தம்மை அண்டினவர்களை இடுக்கண்களிலிருந்து மீட்கும் ஆற்றல் கொண்டவர்கள்; போரில் புறமுதுகு காட்டி ஓடாதவர்கள்; வேலேந்திய பெரிய கைகளையுடையவர்கள். அதே வழியில் வேறு சில வணிகர்கள் மிளகு மூட்டைகளைக் கழுதைகளின் முதுகில் ஏற்றிக் கொண்டுசெல்வர். இவ்வாறு வணிகர்கள் பலரும் செல்லும் வழியில் அரசு நிறுவிய சுங்கச் சாவடிகள் இருக்கும். அந்தச் சுங்கச் சாவடிகளை அரசின் விற்படை வீரர்கள் காவல் காப்பர்.

பாலை நிலமக்களின் குடிசைகளும் அவர்கள் அளிக்கும் உணவும்

நீங்கள் செல்லும் வழியில் தொடர்ந்து சென்றால், அங்கு பாலை நிலமக்களின் குடியிருப்புகள் இருக்கும். அந்தக் குடியிருப்புகளில் வாழும் பாலை நிலமக்கள், அணிலும் எலியும் நுழையாதவாறு, ஈச்ச மரத்தின் மட்டைகளையும், ஈச்ச மரத்தின் இலைகளையும் பயன்படுத்தித் தங்கள் குடிசைகளின் கூரைகளை அமைத்திருப்பர். தொலைவிலிருந்து பார்ப்பவர் -களுக்கு அந்த குடிசைகளின் கூரைகள் முள்ளம்பன்றியின் முதுகுபோல் தோன்றும். ந்தக் குடிசைகளில், அண்மையில் பிள்ளையைப் பெற்ற பெண்கள், மானின் தோலாலாகிய படுக்கையில் படுத்திருப்பர். அவர்களைத் தவிர மற்ற மகளிர், கடப்பாரையால் கீழ்மேலாகும்படிக் கரிய தரிசு நிலத்தைக் குத்தி, அதில் எழுந்த புழுதியைத் துழாவி, மெல்லிய புல்லரிசியை எடுப்பர். அவர்கள் தங்கள் குடிசைகளின் முற்றத்தில் உள்ள விளா மரத்தின் நிழலில் பதித்த உரலில் புல்லரிசியை இட்டு, வயிரம் பாய்ந்த உலக்கையால் குற்றி, ஆழமான கிணற்றிலிருந்து உப்புத்தன்மையுடைய நீரை முகந்துகொண்டு வந்து, விளிம்பு உடைந்த வாயையுடைய பானையில் வார்த்த உலையை, முரிந்த அடுப்பிலே ஏற்றிக் கஞ்சியை வடிக்காமல் பொங்கிய (மான் கறியின்) உப்புக்கண்டம் சேர்ந்த ஊன் சோற்றைச் சமைப்பர். ‘போரில் வல்ல மறவருடைய தலைவனாகிய புறமுதுகிடாத படையினையுடைய, வீரக்கழல் அணிந்த, மலைநாட்டையுடைய இளந்திரையனின் பாணர் யாம்' என்று நீங்கள் கூறுவீராயின், தேக்கின் இலையில் உணவைக் குவித்து, அவர்கள் தர, வறுமையில் உள்ள உம் சுற்றத்தோடு அவ்வுணவினை நீங்கள் மிகுதியாகப் பெறுவீர்.

பாலை நிலமக்களின் வேட்டை  

பாலை நிலத்தில் மழை பெய்வது அரிது. அவ்வாறு வானம் வறண்டு போகும் காலத்தில், அங்கு வாழ்பவர்களின் குடிநீர் தேவைக்காக ஆங்காங்கே சில குழிகள் வெட்டப்பட்டிருக்கும். அந்தக் குழிகள் சரியான பாதையின் இரு பக்கங்களிலும் இருக்கும். அவற்றைக்கொண்டு மக்கள் எது சரியான வழி என்று அறிந்துகொள்வார்கள்.

பாலை நிலமக்கள் தங்கள் உணவுக்காகக் காட்டுப் பன்றியை வேட்டை ஆடுவர். காட்டுப் பன்றி நடமாடும் காலம் இராக்காலம். காட்டுப் பன்றி, நீர் வேட்கையைப் போக்கிக் கொள்வதற்காகக் காட்டு வழியில் நீர் இருக்கும் குழிகளுக்கு வரும் என்று எதிர்பார்த்து, அவர்கள் நீருள்ள குழிகளுக்கு அருகே வேறு சில குழிகளைத் தோண்டி, அவற்றின்மேல் தழைகளை இட்டு மூடியிருப்பர். நீர் அருந்தும் காட்டுப் பன்றி தழைகளால் மூடப்பட்ட குழிகளுக்கு வந்து விழுந்தால், அவற்றை எளிதாகப் பிடித்துவிடலாம் என்று எதிர்பார்த்து, வேட்டையாடுபவர்கள் மறைந்திருந்து காத்திருப்பர்.

இரவெல்லாம் காத்திருந்தாலும், காட்டுப் பன்றியை வேட்டையாடுபவர்களுக்குச் சில நாட்களில் காட்டுப் பன்றி கிடைப்பதில்லை. காட்டுப் பன்றி கிடைக்கவில்லையென்றால், அவர்கள் மறுநாள், முயல் வேட்டையை மேற்கொள்வர். முயல் வேட்டைக்குச் செல்லும்பொழுது, அவர்கள் நாயோடு செல்வர். முயல் கிடைத்தால் கவ்வலாம் என்று எதிர்பார்த்து வேட்டைக்குச் செல்லும் நாய், பிளந்த வாயோடு செல்லும். முயல்கள் புதர்களில் மறைந்திருக்கும் என்று எதிர்பார்த்து, அவர்கள், அந்தப் புதர்களைச் சுற்றி வேலியும் அந்த வேலியில் வலைகளையும் மாட்டியிருப்பார்கள். புதர்களைக் கோலால் அடித்து, முயல்களைப் புதர்களிலிருந்து வெளியேற்றுவர்கள். வெளியேறிய முயல்கள் தப்பியோடுவதற்கு முயற்சி செய்யும் பொழுது வலையில் சிக்கிக்கொள்ளும். சிக்கிக்கொண்ட முயல்களைப் பிடித்துச் சமைத்து அவர்கள் தம் சுற்றத்தாரோடு கூடியுண்பர். இத்தகைய காட்சிகள் நடைபெறும் பாலை நிலத்தைக் கடந்து காட்டு வழியே செல்லுங்கள்.

பலை நிலத்தில் உள்ள அரண்மனைகளில் பெறும் பொருள்கள்

காட்டு வழியே சென்றால் ஓர் அரண்மனையைக் காணலாம். அந்த அரண்மனைக்கு அருகே ஒரு படைக்கலக் கொட்டில் இருக்கும். அந்தக் கொட்டிலின் ஒரு பக்கத்தில், வேற்படை வரிசையாகச் சார்த்தி வைக்கப்பட்டிருக்கும். அந்த வேல்கள் போரில் பயன்படுத்தப்பட்டதால், அவை புலால் நாற்றம் உடையதாகவும், கூரிய முனைகள் மழுங்கியும் வளைந்தும் காணப்படும். அங்குள்ள வேற்படைக்கு அருகில் கேடயங்கள் வரிசையாக சார்த்தி வைக்கப்பட்டிருக்கும். அடுத்து, அங்கே நெடிய பெரிய விற்படையைக் காணலாம். அதற்கு அருகே, பல வகையான அம்புகள் குவியல் குவிலாகக் கொட்டிக் கிடக்கும்.

அந்தப் படைக்கலக் கொட்டிலுக்கு அருகே, பருத்து உயர்ந்த கால்களை நட்டுப் போடப்பட்ட பெரிய பந்தலைக் காணலாம். உயரமான அந்தப் பந்தலின் கால்களில் அம்புறாத்தூணிகளும், கடிய ஓசை எழுப்பும் துடிப்பறையும் மாறி மாறிக் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். அந்த அம்புறாத்தூணிகள் மலையுச்சியில் இருக்கும் தேனடைகளைப் போல் காட்சியளிக்கும். அந்தப் பந்தலின் மற்றொரு பக்கத்தில் குறுநில மன்னன் வாழும் அரண்மனை இருக்கும்

அந்த அரண்மனையின் உள்ளே எவரும் அணுக முடியாதவாறு, வேட்டை நாய்கள் காவல் காக்கும். அந்த அரண்மனையைச் சூழ்ந்துள்ள மதிலில் உள்ள வாயில், பலகைகள் பலவற்றைச் சேர்த்துச் செய்யப்பட்ட கதவால் மூடப்பட்டிருக்கும். அந்தக் கதவை எவரும் எளிதில் திறக்காமல் இருப்பதற்காக, அதில் உருண்டு திரண்ட கணையமரம் பொருத்தப்பட்டிருக்கும். அங்குள்ள அரண்மனைக்கு வெளியே, பகைவர்களைக் கொல்வதற்காகக் கழுமரங்கள் வரிசையாக நடப்பட்டிருக்கும். பகைவர்கள் எளிதில் நுழைய முடியாதவாறு அந்த அரண்மனையைச் சுற்றிப் பருத்து உயர்ந்த மரங்கள் உள்ள காவற்காடு இருக்கும். அந்தக் காவற்காட்டைச் சூழ முள்நிறைந்த மரங்கள் முளைத்து வேலியாக அமைந்திருக்கும்.

நீங்கள் செல்லும் காட்டு வழியில் இதுபோல் வேறுசில அரண்மனைகளையும் காண்பீர்கள். அங்குள்ள அரண்மனை -களில் நீங்கள் தங்கினால், மேட்டு நிலத்தில் விளைந்த செந்நெல் அரிசிச் சோற்றைப் பாலை நிலமக்கள் உங்களுக்கு உண்ணக் கொடுப்பார்கள். அந்தச் செந்நெல் அரிசிச் சோற்றிலுள்ள பருக்கைகள், களர் நிலத்தில் வளர்ந்த ஈச்ச மரத்தின் கொட்டைகளைப்போல் இருக்கும். அந்தச் சோற்றுடன், உடும்புப் பொரியலும் அவர்கள் அளிப்பார்கள்அந்தப் பொரியல் அவர்கள் அளிக்கும் சோற்றை மூடி மறைக்கும் அளவுக்கு இருக்கும். அத்தகைய உணவை, அங்குள்ள வீடுகள்தோறும் நீங்கள் பெறுவீர்கள்.

குறிஞ்சி நில மக்களின் இயல்பும் தொழிலும்

பாலை நிலத்தைக் கடந்த பிறகு, அடுத்து நீங்கள் செல்லவிருப்பது குறிஞ்சி நிலப்பகுதி. அங்குள்ள ஆண்கள் மிகுந்த வீரமுடையவர்கள். ஆண்கள் மட்டுமல்ல, மகளிரும் வீரத்தில் சிறந்தவர்களே. பொதுவாக, மகளிர் அச்ச உணர்வுடன் இருப்பர் என்று கூறுவார்கள். கருவுற்றிருக்கும் மகளிர் சற்றும் அச்ச உணர்வுக்கு ஆளாகக் கூடாது என்றும் சொல்வர். ஆனால், குறிஞ்சி நிலத்தில், கருவுற்ற மகளிர் தம்மைத் தாக்க வரும் யானையைக் கண்டு அஞ்சமாட்டார்கள். பாம்பு தம்மேல் ஊர்ந்து சென்றாலும், வலிய இடி இடித்தாலும், அவர்கள் அஞ்சாத வீரம் உடையவர்களாக இருப்பர். குறிஞ்சி நிலத் தலைவன் ஆண்புலி போன்றவன்; குறுந்தாடி -யுடையவன்; தன் வலிமையால் கொள்ளை அடித்து உண்ணும் குடியில் பிறந்தவன். அவனுடைய படைவீரர்கள், குறித்த விலங்கின் மீது குறி தவறாது பாயும் வேட்டை நாயைப் போல், தலைவன் ஏவிய பணியைச் செவ்வனே செய்து முடிக்க வல்ல கொடிய வில்லையுடையவர்கள்.

தன் சொல் கேளாத மன்னருடைய காவல் மிகுந்த நிலத்திற்குக் குறிஞ்சி நிலத் தலைவன் தன் வீரர்களுடன் விடியற்காலத்தில் சென்று, அவர்களின் ஆனிரைகளைக் கவர்ந்து வருவான். அவர்கள் அந்த ஆனிரைகளில் சிலவற்றை விலை பேசி விற்றுவிட்டு, தம் வீட்டில் சமைத்த கள்வகைகளில் நெல்லால் செய்த சிறந்த கள்ளை உண்டு மகிழ்வர். பின்னர், ஆரவாரம் மிகுந்த மன்றத்தில் கொழுத்த ஆட்டுக்கிடாயை அறுத்து ஊராருடன் கூடி உண்பர். பிறகு, தோலால் போர்த்தப்பட்ட வாயையுடைய மத்தளம் நடுவில் முழங்க, வில்லைத் தாங்கும் இடத்தோளை வலப்பக்கம் சாய்த்து, பகலெல்லாம் சோம்பல் இல்லாமல் வீரர்கள் ஆடுவர். அத்தகைய வீரர்கள் வாழும் கரடுமுரடான இடத்தைக் கடந்து செல்லுங்கள்.

முல்லை நிலமக்களின் குடியிருப்பு

குறிஞ்சி நிலத்தைக் கடந்து சென்றால், முல்லை நிலத்தை அடைவீர்கள். அங்குள்ள சிறுசிறு குடிசைகளின் குறுகிய கம்பங்களில், ஆடுகள் நின்று தின்னக்கூடிய உயரத்தில் தழைகள் கட்டப்பட்டிருக்கும். வீட்டின் வாயில்களில் சிறிய புதர்கள் காணப்படும். அந்தக் குடிசைகளின் கதவுகள் மூங்கில் படல்களால் ஆனவை. ஆட்டுக்குட்டிகளை வைத்து மூடுவதற்காக, வைக்கோலால் வேயப்பட்ட, சிறு குடிசை போன்ற தோற்றமுள்ள கூண்டு ஒரு பக்கம் இருக்கும். ஆடுகளையும் அங்குள்ள பொருள்களையும் பாதுகாக்கும் ஒருவருக்காக, தோலாலான படுக்கை இருக்கும். அங்குள்ள வீடுகளில், ஆட்டுக்கிடாய்களின் நீண்ட தாம்புகள் கட்டப்பட்ட சிறிய கட்டுத்தறிகளையுடைய முற்றத்தில், செம்மறி ஆடுகளோடு வெள்ளாடுகளும் அடைபட்டுக் கிடப்பதைக் காணலாம்.

முல்லை நில மகளிர், விடியற்காலத்தில் பறவைகளின் ஒலி கேட்டுத் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து, உறைந்த தயிர் இருக்கும் பானையில் மத்தை இட்டு, நன்கு உறைந்து இறுகிய இனிய தயிரைக் கடைவார்கள். அவர்கள் தயிர் கடையும்போது எழும் ஒலி, புலியின் முழக்கத்தைப் போல் இருக்கும். அவ்வாறு அவர்கள் கடைந்து வெண்ணெயையும் மோரையும் பிரிப்பார்கள். தயிர் கடையும்போது மோர்த்துளிகள் புள்ளிப் புள்ளியாக அந்தப் பானையில் தோன்றும். 

தலையில் மெத்தென்ற சும்மாட்டின் மீது அந்தப் பானையை வைத்துக்கொண்டு, அவர்கள் மோர் விற்கச் செல்வார்கள். அந்த ஆயர் மகளிரின் மேனியின் நிறம் கறுப்பு; தோள்கள் மூங்கிலைப் போன்றவை. அவர்கள் காதுகளில் அசையக்கூடிய குழைகளை அணிந்திருப்பார்கள்; சிறுசிறு சுருள்களைக் கொண்ட மயிரை வாரி முடிந்திருப்பார்கள். மோரை விற்றுத் தொகுத்த பணத்தால் வாங்கிய உணவுப் பொருள்களைத் தம் சுற்றத்தார் அனைவருக்கும் வழங்குவார்கள். நெய்விலைக்குக் கட்டியாகப் பசும் பொன்னை வாங்காமல், எருமைகளையும் நல்ல பசுக்களையும், அவற்றின் கன்றுகளையும் வாங்குவார்கள். அத்தகைய முல்லை நில மக்கள் வாழும் குடியிருப்பில் நீங்கள் தங்கினால், நண்டின் சிறிய குஞ்சுகள் போன்ற தினையரிசியிலான சோற்றைப் பாலோடு பெறுவீர்கள்.

முல்லை நில மக்களின் குழலிசை

முல்லை நிலத்தில் வாழும் ஆயர்கள், காட்டு வழிகளில் செல்ல வேண்டியிருப்பதால், எப்பொழுதும் தங்கள் கால்களில் தோலாலான செருப்பு அணிந்திருப்பார்கள். எப்பொழுதும் செருப்பு அணிந்திருப்பதனால், அவர்களது கால்களில் செருப்புத் தழும்பேறியிருக்கும். ஆனிரைகளை அடித்து ஓட்டுகின்ற கோலையும், செடிகொடிகளை வெட்டுவதற்குக் கோடரியையும் பயன்படுத்துவதால், அவர்களது கைகளில் தழும்புகள் ஏற்பட்டிருக்கும். அவர்களுக்குத் தேவைப்படும் பொருள்கள் உள்ள உறிகளை இருபுறமும் தொங்கும் காவடியாகச் சுமந்து செல்வதால், அவர்களது தோள்களில் தழும்பேறியிருக்கும். அவர்கள் தங்கள் தலையில் பசுப்பாலைத் தடவி வாரி முடிந்திருப்பார்கள்; கொம்புகளிலும், கொடிகளிலும் மலர்ந்திருக்கும் மலர்களையும், காட்டில் உள்ள பல்வேறு மலர்களையும் சேர்த்து நெருக்கமாகக் கட்டிய மாலையைச் சூடிக்கொள்வார்கள். அவர்கள் ஒரே ஆடையைத் தங்கள் உடையாகவும், கூழைத் தங்கள் உணவாகவும் கொண்டு, கன்றுகளை விரும்பும் ஆனிரைகளோடு காட்டில் தங்கியிருப்பார்கள்.

நெருப்புக் கொள்ளியால் துளையிட்ட குழல்களில், ஆயர்கள் பாலைப்பண்ணை வெறுக்கும்வரை பாடுவார்கள். பின்னர், அவர்கள் குமிழ மரத்திலிருந்து வெட்டிய உள்ளீடற்ற கொம்பை வளைத்துக் கட்டி, மரல் செடியின் நாரை நரம்பாகக் கொண்ட வில்யாழை விரலால் தெறித்துக் குறிஞ்சிப்பண் பாடுவார்கள்.
அவர்கள் குறிஞ்சிப்பண் பாடும்போது தோன்றும் ஓசை, தம்முடைய இனம் எழுப்பும் ஓசையோ என்று கேட்டு, வண்டுகள் மயங்கும். இத்தகைய புல்வளம் நிறைந்த அகன்ற முல்லை நிலத்தில் தொடர்ந்து செல்லுங்கள்.

முல்லை நிலத்து உழவர்களின் ஊர்களில் கிடைப்பன

முல்லை நிலத்தில் தொடர்ந்து சென்றால், சிற்றூர்களை அடையலாம். அந்தச் சிற்றூர்களில் முள் நிறைந்த மரங்கள் காடுபோல் வளர்ந்திருக்கும். அந்த மரங்களுக்கு நடுவே மாட்டுக் கொட்டில்கள் இருக்கும். அங்குள்ள வீடுகளின் முற்றங்களில் தானியங்களைச் சேமித்து வைக்கும் குதிர்களைக் காணலாம். அந்தக் குதிர்கள் பெண்யானையின் கூட்டம்போல் காட்சியளிக்கும். அந்த வீடுகளில் பந்தல் இருக்கும். அந்தப் பந்தலில் தானியங்களை அரைக்க உதவும் திரிமரம் என்ற கருவி வைக்கப்பட்டிருக்கும். வீடுகளின் நெடுஞ்சுவர்களில் வண்டிச் சக்கரங்களும் கலப்பைகளும் சார்த்தி வைக்கப்பட்டிருப்பதால், அந்தச் சுவர்கள் தேய்ந்திருக்கும். வீடுகளுக்குள் உள்ள அடுக்களைகளில் மூட்டிய தீயிலிருந்து எழும் புகை, கொட்டில்களில் படிந்திருக்கும். அங்குக் கரிய வரகுத்தாள் வைக்கோல்களால் கூரைகள் வேயப்பட்டிருப்பதைக் காணலாம். அங்குள்ள வீடுகளில், பூளைப் பூவைப் போன்ற வரகுச் சோற்றையும், செந்நிறமான வேங்கைப் பூவைப் போன்ற அவரைப் பருப்பையும் வேகவைத்துத் துழாவிச் சமைத்த இனிய பருப்புச்சோற்றைப் பெறுவீர்கள்.

மருத நிலத்தைச் சேர்ந்த புன்செய் நிலம்

முல்லை நிலத்தைக் கடந்து சென்றால், மிகுந்த அளவு உணவுப் பொருள்களுடைய உழவர்களின் வீடுகளைக் காண்பீர்கள். அந்த உழவர்கள் நன்றாக உழப் பழகியவர்கள். அவர்கள் நன்கு நடை பயின்ற எருதுகளை முற்றத்திலேயே நுகத்தடியில் பூட்டிச் சென்று, கலப்பையின் கொழு, நிலத்தில் மறையுமாறு அமுக்கிப் களைபோகப் பலசால் உழுவார்கள். அவ்வாறு உழுத பின்னர், விதை விதைப்பார்கள். பின்னர், விளைநிலத்தில் வளர்ந்த களைகளைக் களைக்கொட்டால் களைந்து எறிவார்கள். பிறகு, அறுவடை செய்யும்பொழுது, ஆட்களின் ஆரவாரத்தால், அஞ்சி, நிலைகெட்டு, அழகிய வெண்கடம்ப மரத்தின் நறுமணமுள்ள மலரைப் போன்ற, பறக்க முடியாத தம் சிறிய குஞ்சுகளைத் தழுவிக்கொண்டு, சிறிய கால்களையும் கரிய கழுத்தையும் உடைய காடைப்பறவை காட்டில் சென்று தங்கும். இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறும் மருத நிலத்தின் புன்செய் நிலங்களைக் கடந்து செல்லுங்கள்.

மருத நிலதில் உள்ள நன்செய் நிலங்களில் காணும் காட்சிகள்

மருத நிலத்தின் புன்செய் நிலங்களைக் கடந்து சென்ற பிறகு, மருத நிலத்தின் நன்செய் நிலங்கள் இருக்கும் பகுதிக்குச் செல்வீர்கள். அங்குள்ள வயல்களில் நண்டுகள் இருக்கும். அந்த நண்டுகளின் கால்கள் கொல்லன் பயன்படுத்தும் கொறடைப் போல் பிளவுபட்டிருக்கும். அந்த வயல்களில் எருதுகள் போரிடும்பொழுது, தம் கொம்புகளால் பசிய கோரைப்புல்லைக் குத்தி அழிக்கும்; சேற்றில் உள்ள நண்டுகளின் வளைகள் அழியும். அவ்வாறு எருதுகள் போரிட்ட நிலத்தில் உள்ள மேடு பள்ளங்களைச் சமன்செய்து, உழவர்கள் நாற்றுகளை நடுவர்.

நன்செய் நிலத்தில் பயிர் நன்றாக விளைந்திருந்தாலும், அவற்றோடு நெய்தலும் கொடிவிட்டு மலர்ந்திருக்கும். களைபறிக்கும் மகளிர் களைந்து எறிந்த பருத்த தாளினையுடைய நெய்தல் மலர்களைத் தம் மக்களிடம் கொடுப்பர். அச்சிறுவர்கள் அவற்றை வெறுத்து, முள்ளுடைய கொம்புகளில், அரும்புகள் சூழ்ந்த இதழுடைய முள்ளிப் பூவைப் பறித்து, அங்கிருந்த பஞ்சாய்க் கோரையைப் பிடுங்கி, அதை பல்லால் கடித்து நாராக்கி, முள்ளி மலர்களை மாலையாகத் தொடுத்துத் தங்கள் தலையில் சூடிக்கொள்வர். அவர்கள், சம்பங்கோரையின் காயில் உள்ள தாதைத் தம் மார்பில் பொன்னை உரைத்து மாற்று காணப் பயன்படும் உரைகல்போல் தோன்றும்படிப் பூசிக்கொள்வர். அச்சிறுவர்கள் தம் வீட்டில் உள்ள பழைய சோற்றுருண்டையை வெறுத்து, வரம்பில், புதிய வைக்கோலால் வேய்ந்த குடிசையின் முற்றத்தில் இருக்கும் உரலில், அவித்த நெல் இட்டு, அவலாக இடித்து உண்பர். அவர்கள் அவல் இடிக்கும்பொழுது உலக்கையின் ஓசை மிகுந்ததால், அந்தக் குடிசைக்கு அருகில் வாழும் கிளிகள் தமக்குப் பகை நேர்ந்தது என்று கருதி அஞ்சும். அத்தகைய குறையாத புதுவருவாய் உடைய, நிறைய நெற்கதிர் விளையும் வயல்கள் சூழ்ந்த மருதநிலப் பகுதி அது.

நெல் அரிந்து கடா விடுதல்

கொட்டினால் கடுக்கும் குளவிக் கூட்டத்தை ஒத்த முற்றிய பெரிய செந்நெல்லின் தாளை அறுத்த உழவர்கள், அவற்றைப் பாம்புகள் வாழும் மருத மரத்தின் கிளைகளின் நிழலில் உள்ள நெற்களத்தில் கொண்டு வந்து போட்டுப் போராகக் குவிப்பார்கள். தங்களுடைய பெரிய சுற்றத்துடன் கைகோர்த்து ஆடுகின்ற துணங்கைக் கூத்தில், அழகிய பூதங்கள் வெண்ணிற ஆடை உடுத்தி நிற்பதுபோல், குவித்துள்ள நெற்போரின்மேல் படிந்திருக்கும் சிலந்தி பின்னிய வலையை உழவர்கள் நீக்குவார்கள். பிறகு, உழவர்கள் போர்களைப் பிரித்து எடுத்துப் பரப்பி, கடாவிட்டுப் போரடித்து, நெல்லையும் பதரையும், கூளத்தையும் வைக்கோலையும் தனித்தனியாகப் பிரித்து, மேல்காற்றில் தூற்றி எடுத்த நெற்குவியல், வடதிசையில் உள்ள மேரு மலைபோல் குவிந்திருக்கும். நெற்களத்துக்கு வரும் பொருநர்களுக்கும் இரவலர்களுக்கும் உழவர்கள் நெல்லைப் பரிசாக அளிப்பர். இத்தகைய வளமான மருத நிலம் சூழ்ந்த குடியிருப்புகளில் வாழும் மக்கள், அங்கிருந்து வேறு இடங்களுக்குச் செல்ல விரும்பமாட்டார்கள்.

மருத நிலத்து ஊர்களில் பெறும் உணவுகள்

அந்த மருத நிலத்தில் காளையோடு கூடிய பசு ஈன்ற கன்றுகளைக் கட்டுவதற்கான முளைகள் மருத நில வீட்டின் ஒரு பக்கம் இருக்கும்அந்த வீட்டில் ஒரு குதிர் இருக்கும். அந்தக் குதிர் ஏணிவைத்து ஏறினாலும் எட்ட முடியாத உயரமுடையது. அதன் தலையைத் திறந்து, பழைய நெல் கொட்டப்பட்டு நிறைந்திருக்கும். சிறப்பாகச் செய்யப்பட்ட சிறிய தேரை உருட்டி விளையாடும் பிள்ளைகள், தங்கள் தளர்ந்த நடையால் தோன்றிய வருத்தம் தீர, செவிலித் தாயாரிடம் பால் அருந்துவர். பால் உண்டு தமது படுக்கையில் படுத்து உறங்குவர். இத்தகைய காட்சிகள் நடைபெறும் வீடுகளையுடைய, பசி அறியாத குடியிருப்புகள் நிறைந்த, வளம் மிக்க பெரிய ஊர்களில் தங்கினால், சோம்பல் இல்லாத உழவர்கள் விளைத்துத் தந்த வெண்ணெல் சோற்றைக், கோழிப் பொரியலோடு பெறுவீர்கள்.

நெய்தல் நில மக்களின் குடியிருப்பு

பாலை, முல்லை, குறிஞ்சி, மருதம் ஆகிய நிலப்பரப்புகளைக் கடந்துசென்ற பிறகு, நெய்தல் நிலம் உள்ள பகுதிக்குச் செல்வீர்கள். அங்கு மீன்களை வளர்ப்பதற்கு ஒரு குளமும், குடி நீருக்காக ஒரு குளமும், குளிப்பதற்காக ஒரு குளமும் இருக்கும். அந்தக் குளங்களில், கோடைக் காலத்திலும் ஓர் ஆளின் தோள் உயரத்திற்குமேல் நீர் இருக்கும். அங்கு, மூங்கிற் கழிகளை வரிசையாக நட்டு, வெண்மையான மரக்கொம்புகளைக் குறுக்காகப் பரப்பிவைத்து, தாழைநாரால் இரண்டையும் முடித்துத் தருப்பைப்புல்லை, அதன் மேல் வேய்ந்து நெய்தல் நில மக்களின் குடிசைகள் கட்டப்பட்டிருக்கும். அந்தக் குடிசைகளின் முற்றத்தில் மீன்பிடிக்கும் பறி என்னும் கருவி இருக்கும். அந்த முற்றத்தில், புன்னை மரத்தின் கொம்புகளை வெட்டி நட்டு, மணல் பரப்பப்பட்ட பந்தலில் பசுமையான காய்கள் தொங்கும். அந்தப் பந்தலில் இளையவரும் முதியவர்களும் திரண்ட பிறகு, அனைவரும் கயல் மீனும் இறால் மீனும் புரளும் ஆழமான குளத்திற்குச் சென்று மீன் பிடிப்பர். குடிநீர்க் குளத்தில் எவரும் இறங்காதவாறு, சிலர் காவல் காப்பர்.

நெய்தல் நிலமக்களின் குடியிருப்புகளில் பெறும் உணவு

நெய்தல் நிலமக்கள் நன்றாகக் குத்தித் தீட்டப்படாத அரிசியைக் கூழாகத் துழாவிச் சமைப்பார்கள்; சமைத்த கூழை அகன்ற வாயையுடைய தட்டில் உலரும்படி ஆற்றுவார்கள். அத்தோடு நெல்முளையை இடித்து அதில் கலந்து, இரண்டு இரவும் இரண்டு பகலும் கழித்துக் கெட்டியான வாயையுடைய சாடியில் வைத்து இளங்கள்ளின் நாற்றம் அறும்படி முற்றிய பிறகு, வெந்நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி, விரல்களால் அலைத்துப் பிழிந்தெடுத்த மணமுள்ள கள்ளை, மீன் சூட்டோடு, நீங்கள் பசியால் தளர்ந்தபொழுது பெறுவீர்கள்.

காலையில் நீர்ப்பூக்களைச் சூடிச் செல்லுதல்

பச்சை இறைச்சித் துண்டுகள் அடங்கிய தோல்பை தோளில் தொங்க, மீன் பிடிப்பதில் வல்லமைபெற்ற, பாணர்குடியில் பிறந்தவன், அங்குள்ள குளத்துக்கு மீன் பிடிக்கச் செல்வான். அவன் கையில் ஒரு மூங்கில் கோல் இருக்கும். அந்தக் கோலின் நுனியில் ஒரு கயிற்றை இறுக்கிக் கட்டியிருப்பான். அந்தக் கயிற்றின் மற்றொரு முனையில், இரும்பாலான, வளைந்த தூண்டில் முள் கட்டப்பட்டிருக்கும். அந்தத் தூண்டில் முள் இறைச்சியால் மூடப்பட்டிருக்கும்பெரிய பிளந்த வாயையுடைய வாளைமீன், அந்தத் தூண்டில் முள்ளில் சிக்கிகொள்ளாமல், இறைச்சியைக் கவ்விச் செல்லும். அந்தக் குளத்தில் உள்ள பிரம்புக் கொடி காற்றில் ஆடும்பொழுது, அதன் நிழல் அசைவதைக் கண்டு, அதையும் தூண்டில் என்று நினத்து, வாளைமீன் அஞ்சும். நீர் நிறைந்த அந்தக் குளத்தில், தண்ணீரே தீப்பற்றிக்கொண்டதோ என்று நினைக்கும்படி, கடவுள் விரும்பும் செந்தாமரை மலர்கள் மலர்ந்திருக்கும். அந்த மலரைச் சூடிக்கொள்ளாதீர்கள். மழைபொழியும்பொழுது வானத்தில் தோன்றும் வானவில்லின் பல நிறங்களைப் போல் செங்குவளை மலரும், நீல மலரும் வேறு நிறமுடைய மற்ற மலர்களும் அந்தக் குளத்தில் இருக்கும். பூப்பறிப்பவர்கள் அந்த மலர்களைப் பறித்து உங்களுக்குத் தருவார்கள். நீங்கள் அவற்றைச் சூடிக்கொண்டு அங்கிருந்து செல்வீர்களாக.

அந்தணர்களின் உறைவிடங்களில் பெறுவன

நெய்தல் நிலத்திலிருந்து கச்சியை நோக்கிச் செல்லும் வழியில், அந்தணர் குடியிருப்பைக் கடந்து செல்ல வேண்டும். அந்தணர் குடியிருப்பில் உள்ள வீடுகளின் வாயிலில் சிறிய கால்களை -யுடைய பந்தலில் கொழுத்த கன்றுகள் கட்டப்பட்டிருக்கும். அந்த வீடுகள் பசும் சாணத்தால் மெழுகப்பட்டிருக்கும்அந்த வீடுகளில் உள்ளவர்கள் தாம் வழிபடும் தெய்வங்களின் உருவங்களைத் தம் வீடுகளில் வைத்திருப்பார்கள். அந்த வீடுகளுக்கு அருகே, நாய்களையும் கோழிகளையும் காண முடியாது. அந்த வீடுகளில் வாழும் கிளிகள் வேதத்தைப் பலமுறை கேட்டுப் பழகியதால், அவையும் வேதம் ஓதும். அங்கு வாழும் அந்தணர்கள் வேதத்தைப் பாதுகாக்கின்றவர்கள். அங்கு வாழும் பார்ப்பனப் பெண்கள், வானத்தின் வடதிசையில் காணப்படும் விண்மீனாகிய அருந்ததியை ஒத்த கற்புடையவர்கள்; நல்ல மணம் வீசும் நெற்றியையும் வளையல் அணிந்த கைகளையும் உடையவர்கள்நீங்கள் அங்குச் சென்றால், அந்தப் பெண்கள், பறவையினது பெயரைப் பெற்ற கருடன் சம்பா என்னும் நெல்லின் சோற்றையும் சிவந்த பசுவின் மணம் மிக்க மோரைக் கடைந்து எடுத்த வெண்ணையில் மாதுளையின் சிறுதுண்டுகளை வேக வைத்து, மிளகுப்பொடியையும் மணமுள்ள கறிவேப்பிலை இலைளையும் கலந்து வகைவகையாகச் சமைத்த உணவை மாவடு ஊறுகாயோடு, நீங்கள் பெறுவீர்கள். அங்கிருந்து தொடர்ந்து சென்றால், அருகில் இருக்கும் நீர்ப்பாயல் துறைக்குச் செல்வீர்கள்

நீர்ப்பாயல் துறையின் சிறப்பு

நீர்ப்பாயல் துறையில் தோழியருடன் கூடி நீராடுகின்ற மகளிர் விட்டுச்சென்ற பொன்னால் செய்த மகரக்குழையை, நீலமணி போன்ற மீன்கொத்திப் பறவை இரையென்று எடுத்துக்கொண்டு போகும். அப்படிப் போகும் பறவை, மற்ற பறவைகள் நிறைந்திருக்கின்ற பனைமரத்தின் தனித்த மடலில் சென்று தங்காமல், அந்தணர் யாகசாலையில் நட்ட கம்பத்தின் மீது சென்று தங்கும். அவ்வாறு, அந்த மீன்கொத்திப் பறவை அந்தக் கம்பத்தின் மீது இருப்பது, யவனரின் மரக்கலத்துக் கூம்பின் மேல் ஏற்றிய அன்னத்தைப் போன்ற விளக்கைப்போலவும், உயர்ந்த வானில் இடங்கொண்ட வைகறைப்பொழுதில் தோன்றும் வெள்ளிமீன் போலவும் விட்டுவிட்டு ஒளிவிட்டு விளங்கும். நீர்ப்பாயல் துறையிலிருந்து நீர்ப்பாயல் துறைமுகப் பட்டினத்துக்குச் செல்லுங்கள்

நீர்ப்பாயல் பட்டினத்தின் பெருமை

நீர்ப்பாயல் பட்டினத்தின் துறைமுகத்தில், பால் போன்ற வெண்மையான பிடரிமயிரையுடைய குதிரைகளையும், வடதிசையின் வளங்களைக் கொண்டுவரும் பொருள்களையும் ஏற்றிவரும் மரக்கலங்கள் சூழ்ந்திருக்கும். அங்கு, உயர்ந்து நிற்கும் மாடமாளிகைகளையும், மணல் நிறைந்த தெருக்களையும், வணிகர் மிகுதியாக வாழும் பல்வேறு தெருக்களையும், தொழில் செய்வோர் காக்கும் மிகவும் உயர்ந்த பண்டசாலைகளையும் காணலாம். வயலில் உழும் காளைகளையும் கறவை மாடுகளையும் அங்கு காண முடியாது. காவல் காக்கும் நாய்களும், உணவுக்காக வளர்க்கப்படும் ஆட்டுக்கிடாய்களும் அங்குச் சுற்றித் திரியும். சோற்று வளம் மிக்க நல்ல இல்லங்களும் அங்கு இருக்கும்.

அங்கு, வளைந்த அணிகலன்களை அணிந்த மகளிர், கொன்றையின் மெல்லிய கிளைகளில் பனிப்படலம் படிந்திருப்பதுபோல், பசிய மணிகளைக் கோர்த்த வடங்களையுடைய, அல்குலில் கிடக்கின்ற மெல்லிய ஆடை அசைய, மலையில் மகிழ்ச்சி மிகுந்து ஆரவாரிக்கும் மயில்போலக் காலில் அணிந்த பொன் சிலம்பு ஒலிக்கும்படி ஆரவாரிப்பர்; விண்ணை முட்டும் மாடத்தில், நூலால் வரிந்து செய்யப்பட்ட பந்தையடித்து விளையாடுவர்; கையில் அணிந்த மெல்லிய வளையல்கள் அசையும்படி, முத்துப்போல் பரப்பிய வெண்மணலில் பொன்னால் செய்த கழற்சிக்காயைக்கொண்டு கழங்காடுவர். இந்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறும் பட்டினத்தில் தங்கி இளைப்பாறுங்கள்.

நீர்ப்பாயல் பட்டினத்து மக்களின் விருந்தோம்பல்

நீர்ப்பாயல் பட்டினத்தில், பலரும் புகுகின்ற கள்ளுக்கடையின் வாயிலில் அழகிய கொடி பறக்கும். கடையின் முற்றத்தில், புல்லைச் செதுக்கி நீக்கி, சிவந்த பூக்கள் தூவப்பட்டிருக்கும்அங்குக் கள்ளைக் காய்ச்சுகின்ற மகளிர் வட்டில்களைக் கழுவிக் கவிழ்த்ததால் சிந்திய நீர் வழிந்து நிலம் சேறாக இருக்கும். அச் சேற்றில், பல குட்டிகளை ஈன்ற பெண் பன்றி புரளும். அச் சேற்றில் புரளும் பெண் பன்றியோடு   புணர்ச்சி விரும்பிக் கூடாதவாறு, குழியிலே வைத்து, இடித்த மாவை உணவாகக் கொடுத்து, ஆண் பன்றி பலநாட்கள் பாதுகாக்கப்படும். அவ்வாறு, குழியிலே வைத்துப் பாதுகாத்த குறுகிய கால்களையுடைய ஆண் பன்றியின் கொழுத்த தசைத் துண்டுகளோடு, களிப்பு மிக்க கள்ளையும் நீங்கள் நீர்ப்பாயல் பட்டினத்தில் பெறுவீர்கள்.

ஓடும் கலங்களை அழைக்கும் கலங்கரை விளக்கம்

நீர்ப்பாயல் பட்டினத்தில் உள்ள கலங்கரை விளக்கம் மிக உயரமானது. அது பார்ப்பதற்கு, வானம் விழாதபடி ஊன்றிவைத்த பற்றுக்கோல்போல் இருக்கும். கழியும் கற்றையும்கோண்டு வேயாது, அந்தக் கலங்கரை விளக்கம் கல்லும் சாந்தும் கொண்டு கட்டப்பட்டது. அதன் உச்சிக்குச் சென்று விளக்கை ஏற்றுவதற்கு ஏதுவாக ஏணி சார்த்தப்பட்டிருக்கும். ஏணி சார்த்தப்பட்டிருந்தாலும், அதில் ஏறிக் கலங்கரை விளக்கத்தின் உச்சியை அடைவது அரிது. அந்தக் கலங்கரை விளக்கத்தில், இரவில் கொளுத்திய விளக்கு, பெருநீர்ப்பரப்பாகிய கடலில் ஓடும் மரக்கலங்களை, ”வருக!, வருக! நீங்கள் சேர வேண்டிய கரை இதுதான்.” என்று அழைப்பதுபோல் இருக்கும். நீர்ப்பாயல் பட்டினத்தைக் கடந்து செல்லுங்கள்.

தோப்புக் குடிகளில் நிகழும் விருந்தோம்பல்

நீங்கள் செல்லும் வழியில், மணம் கமழும் சுற்றுப்புறங்களை -யுடைய தோப்புகளில், தனித்னியாக அமைந்த வீடுகளில் உழவர்கள் வசிப்பர். தென்னையின் வற்றிய மடல்களால் அவர்களது வீடுகளின் கூரைகள் வேயப்பட்டிருக்கும், அவர்கள் வீட்டின் முற்றத்தில் மஞ்சள் செடிகள் இருக்கும். நீங்கள் அவர்களின் வீடுகளில் தங்கினால், சுளைகளையுடைய பெரிய பலாப்பழத்தையும், தென்னையின் இனிய இளநீரையும், வாழைப்பழத்தையும், பனையின் நுங்கையும், இனிய பல பண்டங்களையும் உண்பீர்கள். அவற்றை உண்பதை நீங்கள் வெறுத்தால், முளை முற்றிய சேப்பங்கிழங்கை உண்பீர்கள். பிறகு, திருவெஃகா என்னும் ஊரை நோக்கி உங்கள் பயணத்தைத் தொடருங்கள்.

திருவெஃகாவின் சிறப்பும் திருமால் வழிபாடும்

திருவெஃகாவில், நீண்ட பூங்கொத்துகளையுடைய காந்தள் வளர்கின்ற மலையில், யானை படுத்திருந்தாற்போலப் பாம்பணையில் திருமால் பள்ளிகொண்டிருக்கும் காட்சியைக் காண்பீர்கள்அங்குள்ள சோலையில் குயில்கள் வாழும்; ஆனால், வெயில் நுழைய முடியாது. அந்தச் சோலையில் உள்ள குறுகிய காலையுடைய காஞ்சி மரத்தைக் குருக்கத்திக் கொடிகள் சூழந்திருக்கும். அங்கு, மணலிடத்தே உள்ள குழிகளில் தேங்கி நிற்கும் நீரில், குருக்கத்தியின் வரிகளையுடைய பூக்கள் விழுந்து கிடப்பது, கரிய சட்டியில் அப்ப வாணிகர் சுட்ட அப்பம் பாலிலே கிடந்தாற்போல் தோன்றும். வெள்ளநீர் தூய்மைப்படுத்திய பொழில்கள்தோறும், திரண்ட தண்டினையுடைய சோலையிடத்து நிற்கும் பாக்கு மரத்தின் சூல்கொண்ட வயிற்றைப்போல் இருக்கும் நீலநிறமுள்ள தோல்பையில் உள்ள கள்ளைக் குடித்து மகிழுங்கள். பின்னர், பெரிய மகிழ்ச்சியையுடைய இருக்கைகளில் தங்கி, சிறிய கோடு போன்ற இளைய திங்களைப் பாம்பு தீண்டினாற்போல மகரவாய் என்னும் தலைக்கோலத்தைச் சூடிய அழகிய நெற்றியையும், தேனை உருப்பெயர்த்து அமைத்ததைப் போன்ற நல்ல அழகிய குளிர்ச்சியுடைய கண்களையும் கொண்ட மடப்பம் மிக்க மகளிரோடு பகற்பொழுதில் விளையாடி, சுவர்க்கத்தைப் போன்ற நீர்த்துறையில் இன்பத்தை நுகர்வாரோடு இளைப்பாறுங்கள். பின்னர், அவ்விடத்தில் உள்ள         அரிய வல்லமைபெற்ற கடவுளை வாழ்த்தி, சிறிதே உம்முடைய கரிய தண்டினையுடைய இனிய இசைக்கருவியை இயக்கியவராய், அவ்விடத்தைவிட்டுச் செல்லுங்கள்.

கச்சி மூதூரின் சிறப்பு

தொடர்ந்து சென்றால், அங்குசத்தையுடைய பாகன் அயர்ந்த சமயம் பார்த்து, நீண்டு தொங்கும் துதிக்கையை உடைய யானைக்கு இடும் நெய்யிட்டுக் கலந்த சோற்றுருண்டையை நிறைசூல் கொண்ட மந்தி கவர்ந்து சென்று தங்கும் சோலைகளையும், யானைகளின் சினம் அடங்க, அவைகளைக் கட்டும் கட்டுத்தறி நடப்பட்ட இடங்களையும் காண்பீர்கள். அங்கு, வலிமையான தேர்கள் ஓடியதால் பள்ளங்களுள்ள நெடிய தெருக்களும், பகைவரின் படையின்முன் தோல்வியடையாத வலிமை மிகுந்த, பெரிய புகழையுடைய மறவர்களின் குடியிருப்புகளும் இருக்கும். அங்குப் பொருள்களை விற்பவர்களும் வாங்குபவர்களும் நிறைந்து இருப்பர். அதைக் கடந்து சென்றால், காவற் காட்டையும், அதை அடுத்து அரண்மனை வாயிலையும் அடையலாம். பரிசிலரின் வருகைக்காக அந்த வாயில் எப்பொழுதுமே திறந்தே இருக்கும். வாயிலைக் கடந்தால், அரசனின் அரண்மனை இருக்கும்பல வீதிகளுக்கு நடுவே, செங்கல்லால் கட்டப்பட்டு வானளாவ உயர்ந்ததாக இருக்கும் அந்த அரண்மனை, இதழ்கள் விரிந்திருக்க இடையே கொட்டை புடைத்திருக்கும் தாமரை மலரை நினைவூட்டும். அந்த அரண்மனை உள்ள கச்சி மாநகரம், புலால் நாற்றமுடைய கடல் சூழ்ந்த இவ்வுலகில், பூவாவாமல் காய்க்கின்ற மரங்களுள் சிறந்த பலாவைப் போன்று, இவ்வுலகில் உள்ள நகரங்கள் அனைத்தையும்விட மிகுந்த சிறப்புடையது; பல சமயத்தாரும் தொழும்படி எடுக்கப்படும் விழாக்களால் சிறந்தது.

அரசனது முற்றச் சிறப்பு

கச்சி மூதூரில் இருக்கும் இளந்திரையன் வள்ளன்மையில் சிறந்தவன்; தன்னை நாடி வந்தவர்களுக்குப் பாதுகாவலாக இருப்பவன். அருள்செய்தலும், தன்னைப் பகைத்தவர்களை அழித்தலும் அவனுக்கு எளிய செயல்கள். அதனால், அவனை எதிர்ப்பவர்களின் ஊர்களிலுள்ள மக்கள் கூடும் பொதுவிடங்கள் பாழடையும். அவனை விரும்பியவர்களின் நாட்டில் நல்ல பொன் பூத்துத் திகழும். நட்புக் கொள்ளுதலை வேண்டி விரும்பினவர்களும், அவன் வலிமையைத் துணையாகக்கொள்ளக் கருதிய வேறோர் உதவியில்லாதவர் -களும், மலையினின்றும் விழுகின்ற அருவி கடலில் கலப்பதுபோல் அவனை நோக்கி வருவர்இவ்வாறு பல்வேறு வகைகளிலும் அவனுக்குக் கீழ்ப்படிந்த அரசர்கள் வந்து அவனைக் காண்பதற்காகக் காத்திருப்பார்கள்.

இளந்திரையன் அமைச்சர்களோடு வீற்றிருக்கும் காட்சி

இளந்திரையனின் அரண்மனையில் பயன்படுத்தப்படாமல் செல்வம் குவிந்து கிடக்கும். இளந்திரையன் கடலின் நடுவே ஞாயிறு தோன்றி ஒளி செய்தாற்போன்று மயக்கமில்லாத அறிவுடையவன். அவன், நீதி கேட்டு வந்தவர்க்கும், வறுமையோடு வந்து இரப்பவர்க்கும் அவர்கள் கேட்காமலேயே குறிப்பால் உணர்ந்து அவர்கள் விரும்பியதை வழங்கும் சிறந்த அறிவுடையவன். இவ்வாறு கொடை என்னும் கடமையைச் செய்துமுடித்த பரந்த உள்ளத்துடன், குடிமக்கட்குக் கொடுமை செய்ய நினைக்காத அமைச்சர் சுற்றத்தோடு உள்ள இளந்திரையனை அணுகுவீராக!

பாணன் அரசனைப் போற்றும் வகை

இளந்திரையனை அணுகி, ”மதநீர் ஒழுகுவதால் வண்டுகள் மொய்க்கும் யானையின் முகத்தைத் தாக்கிய சிங்கம், புலிக்குட்டியைப் பாய்ந்து கொல்ல விரும்பியதுபோல், புலவர்களுக்குப் பொன்னாலான அனிகலன்களைச் சூட்டுவது போன்ற கடமைகளைச் செய்து முடித்துப் பகைவருடைய காவலமைந்த மதில்களை அழித்து, அந்த மன்னர்களின் மணிமுடி (கிரீடம்) முதலியவற்றைக் கைப்பற்றிக்கொண்டு, போரில் வெற்றி பெறுவதைத் தவிர, சந்துசெய்வதை நோக்கமாகக் கொள்ளாத வேந்தனே! வலிய வாளினையுடைய பெரிய கையினையும் பகைவர் நாடுகளை வென்று, கொண்ட கொள்ளைப் பொருளாகிய உணவையும் உடைய தொண்டையோர் குடியிற் பிறந்தவனே! வீரர்க்கு வீரனே! கொடியவர்க்குக் கொடியவனே! செல்வர்க்குச் செல்வனே! போர்த்தொழிலில் மிக்கவனே! பெருமானே, உன் பெரும் புகழைப் பாராட்டி வந்தேன். நீ நெடுங்காலம் வாழ்வாயாகஎன்று சொல்லிப் பேரியாழை முறைப்படி இயக்கி, மன்னர்களை வாழ்த்தும் முறைப்படி, கையால் தொழுது நாவால் புகழ்ந்து வாழ்த்துவாயாக! உனது நிலையை இளந்திரையன் தெரிந்துகொள்வதற்கு முன்னரே, இளந்திரையன் உனக்குப் பரிசளிக்க விரும்புவான்.

பாணர்க்கு விருப்புடன் உணவளித்தல்

நிலையில்லாத இவ்வுலகில் நிலையானது எது என்று ஆராய்ந்து, புகழ் ஒன்றே என்று ஆறிந்து, அந்தப் புகழை அடையும் பொருட்டு, உன்னை அழைத்து, உன் இடுப்பில் உள்ள பாசியின் வேரைப்போல் சிதைந்து அழிந்த கந்தையை அகற்றிப் பாலாவியைப் போன்ற ஒளிரும் நூலால் செய்த ஆடைகளை உனக்கும் உன் சுற்றத்தார் அனைவருக்கும் கொடுத்து உடுக்கச் செய்வான். வளைந்த அரிவாளை அடிக்கடிப் பயன்படுத்துவதால் காழ்ப்பேறிய கையையுடைய சமையல்காரன் சமைத்த பலவகை இறைச்சியின் கொழுத்த தசைத்துண்டுகளை, அரியப்பட்ட கதிர்க்குவியல்கள் ஈரமற்றுப் போக உலரவிட்ட செந்நெல்லின் பெரிய கல்லும் பிறவும் போகப் பொறுக்கி எடுத்த அரிசியால் ஆக்கின சோற்றையும், இனிய சுவையுடைய பிற உணவுகளையும் வெள்ளிக்கலங்களில் இட்டு, தாய் பிள்ளைக்கு ஊட்டுவதுபோல் கொடுத்து உங்களை உண்ணச் செய்வான்

பரிசு வழங்குதல்

பொற்றாமரை மலர்களை உங்கள் நீண்ட கரிய தலைமுடியில் அழகுபெற அணிவிப்பான். கடலிலிருந்து நீரை முகந்து கொண்டுவந்து, பருவ கால வானத்தில் பகலில் பெய்கின்ற மழையில் மின்னல் தோன்றினாற்போல், அலங்கரித்த கரிய மயிரில் அழகு பெறும்படி, பொன்னால் செய்து தொடுத்த மாலையை விறலியர் சூடிக்கொள்ளக் கொடுப்பான். குதிரை இலக்கணநூல் கற்றோர் பாராட்டும் வெண்மையான பிடரி மயிரையுடைய நான்கு குதிரைகள் பூட்டிய, பொன்னால் செய்த தேரைத் தருவான். அதைக் கொடுத்தும் மனநிறைவு கொள்ளாமல், போர்களில் பகைவரை அழித்தபொழுது, அவர்கள் விட்டுச் சென்ற, விண்ணில் பறப்பதுபோல் பாய்ந்து செல்லும் குதிரைகளையும் சேணங்களையும் தருவான். இத்தகைய பரிசில்களை, நீ சென்ற அன்றே, உங்களுக்குக் கொடுத்து, உங்களை வழி அனுப்புவான்.

பெரும்பாணாற்றுப்படை பொருட்சுருக்கம்

பரிசுபெற்று வரும் பாணன் பெரும்பாணனை ஆற்றுப்படுத்து -கிறான்

கச்சி நகரத்தைத் தலைநகராகக்கொண்டு, தமிழகத்தின் வடபகுதியில் இருந்த தொண்டை நாட்டை இளந்திரையன் என்ற மன்னன் ஆட்சிபுரிந்தான். அவனிடம் பரிசுபெற்ற பாணன் ஒருவன் தன் ஊர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். அவன் செல்லும் வழியில், ஒரு பாணன் பேரியாழ் ஒன்றைத் தழுவிக்கொண்டு, தன் சுற்றத்தாரோடு இளைப்பாறிக் கொண்டிருந்தான். பரிசுபெற்ற பாணன், “பாணரே, நீங்களும் உங்கள் சுற்றத்தாரும் வறுமையோடு, பரிசளிக்கும் வள்ளல்களைத் தேடி, கால்போனபோக்கில் சென்று கொண்டிருப்பதைப் போல் தோன்றுகிறது. உங்களைப்போல் நானும் என்னுடைய சுற்றத்தாரும், நீண்டநாட்கள் பசியால் வாடினோம்; பரிசளிக்கும் வள்ளல்களைத் தேடி அலைந்தோம். அவ்வாறு தேடியபொழுது கச்சி நகரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆளும் தொண்டைமான் இளந்திரையனைச் சந்தித்தோம். பிறர்க்குக் கொடுத்தும் குறையாத அளவுக்குப் பெரும் செல்வத்தையும், குதிரைகளையும், யானைகளையும் அவன் எங்களுக்குப் பரிசாக அளித்தான். அவன் அளித்த பொருட்களைப் பெற்றுக்கொண்டு நாங்கள் இப்பொழுது அவனிடமிருந்து வருகின்றோம். அவனிடம் சென்றால் நீங்களும் பரிசு பெறுவது உறுதி. அவன் இருக்கும் இடத்திற்குச் செல்லும் வழியை நான் உங்களுக்குச் சொல்கிறேன். நீங்களும் அவனிடம் சென்று பரிசுபெற்றுச்செழிப்போடு வாழுங்கள்!” என்று கூறி, தொண்டைமான் இளந்திரையனைப் பற்றியும், கச்சி நகரத்திற்குச் செல்லும் வழியையும், வழியில் உள்ள நிலப் பகுதிகளைப் பற்றியும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை, அவர்களின் உணவு, அவர்களின் விருந்தோம்பல் ஆகியவற்றைப் பற்றியும், வறுமையில் இருக்கும் பாணனுக்கு விளக்கமாகவும் விரிவாகவும் கூறத் தொடங்குகிறான்.

இளந்திரையன் திருமாலின் மரபில் தோன்றியவன்; அவனுடைய முன்னோர்களில் ஒருவன் கடலலைகளால் கரைசேர்க்கப்பட்டவன்; சோழர் குலத்தில் பிறந்தவன்; சங்குகளிலெல்லாம் வலம்புரிச் சங்கு சிறந்ததாகக் கருதப்படுவதைப்போல், சேர, சோழ, பாண்டிய மன்னர்களுள் சிறந்தவன்; அறமல்லாதவற்றை நீக்கி, அறத்தை விரும்பிச் செங்கோன்மை புரிபவன்; பல வேற்படைகளைக் கொண்டவன். நீங்கள் அத்தகைய இளந்திரையனிடம் செல்ல நினைப்பீர்களாயின், அவனுடைய தன்மையைக் கூறுகிறேன், கேள்! உன் துன்பம் கெட்டு ஒழிவதாக! இளந்திரையனின் காவலுடைய பெரிய நாட்டில், வழிப்போக்கர்களைத் தாக்கி, அவர்களின் உடைமைகளைக் கைப்பற்றும் கொடிய கள்வர்கள் இல்லை; பாம்புகள் கொல்லமாட்டா; காட்டு விலங்குகளும் தீங்கு செய்யமாட்டா; நீ விரும்பியபடியே, இளைப்பாற வேண்டியபொழுது இளைப்பாறி, விரும்பியவிடத்தே தங்கிச்செல்வாயாக!

உப்பு வாணிகர் செல்லும் நெடிய வழி

முதலில் நீங்கள் பாலை நிலப்பகுதியில் செல்வீர்கள். நீங்கள் செல்லும் வழியில் உப்பு வணிகர்கள் உப்பு மூட்டைகளை வண்டியில் ஏற்றிச் செல்வர். அந்த வண்டிகள் பனையோலைப் பாய்களால் வேய்ந்த கூரையால் மூடப்பட்டிருக்கும்.  அந்தக் கூரையின் மேல் ஒரு கோழிக்கூடு இருக்கும். அந்தக் கோழிக்கூட்டின் வாயிலில் ஒரு சிறிய உரல் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். வண்டியின் முன்பக்கத்தில் ஒரு ஊறுகாய்ப்பானை வைக்கப்பட்டிருக்கும். உமணப் பெண் வண்டியின் முன்புறத்தே இருந்து, எருதுகளை அடித்து ஓட்டுவாள். அவள் ஒரு கையில் தன் பிள்ளையை வைத்திருப்பாள். உப்பு வண்டிகளை இடையூறு இன்றிக் காப்பாற்றுவதற்காகத் திரண்ட தோளும், வலிமையும், முறுக்கேறிய உடலும் உள்ள ஆடவர் சிலரை உமணர்கள் உடன் அழைத்துச் செல்வர். அவர்கள் உமணர்களுக்கு மட்டுமல்லாமல் அவ் வழியில் செல்லும் அனைவருக்கும் இரவிலும் பகலிலும் காவலாக இருப்பர்.

உப்பு வணிகர்கள் மட்டுமல்லாமல் வேறு வணிகர்களும் நீங்கள் செல்லும் வழியில் செல்வர். குறிப்பாக, மலையிலும் கடலிலும் கிடைக்கும், சிறந்த பயனைத் தருகின்ற, பெறுதற்கரிய பொருள்களை (அகில், சந்தனம், மிளகு, பொன், முத்து, பவளம், போன்ற பொருள்களை) ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வணிகர்கள் இருப்பார்கள். அவர்களுக்குப் பாதுகாவலாகச் சில வீரர்களும் உடன் செல்வர். அவ்வீரர்கள் குற்றமற்ற நற்செயல்களையே மேற்கொள்வர். அவர்கள் தங்கள் காலில் செருப்பும், உடலில் சட்டையும் அணிந்திருப்பர்; ஆறலைக்கள்வர்களோடு போரிட்டு, அவர்களின் வில்லாற்றலை முறியடித்தபொழுது தோன்றிய புண்களால் ஏற்பட்ட வடுக்கள் அவர்களின் மார்பில் காணப்படும்; தங்கள் மார்பின் குறுக்கே கச்சு அணிந்திருப்பார்கள். அவர்கள் அணிந்திருக்கும் கச்சு, மலையின் குறுக்கே ஊர்ந்து செல்லும் மலைப்பாம்புபோல் தோற்றம் அளிக்கும். அந்தக் கச்சில், இடப்பக்கத்தில், வெண்மையான கைப்பிடியையுடைய வாள் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். அவர்கள் தங்கள் இடையில் உடுத்தியிருக்கும் ஆடையை இறுகக் கட்டியிருப்பர்; அந்த ஆடைக்குள் ஒரு வாளைச் செருகியிருப்பர். அவர்கள் பகைவர்களின் வில்லாற்றலை அழித்த, பரந்து அகன்ற வலிமையான தோள்களோடு, முருகனைப்போல், தம்மை அண்டினவர்களை இடுக்கண்களிலிருந்து மீட்கும் ஆற்றல் கொண்டவர்கள்; போரில் புறமுதுகு காட்டி ஓடாதவர்கள்; வேலேந்திய பெரிய கைகளையுடையவர்கள். அதே வழியில் வேறு சில வணிகர்கள் மிளகு மூட்டைகளைக் கழுதைகளின் முதுகில் ஏற்றிக் கொண்டுசெல்வர். இவ்வாறு வணிகர்கள் பலரும் செல்லும் வழியில் அரசு நிறுவிய சுங்கச் சாவடிகள் இருக்கும். அந்தச் சுங்கச் சாவடிகளை அரசின் விற்படை வீரர்கள் காவல் காப்பர்.

பாலை நிலமக்களின் குடிசைகளும் அவர்கள் அளிக்கும் உணவும்

நீங்கள் செல்லும் வழியில் தொடர்ந்து சென்றால், அங்கு பாலை நிலமக்களின் குடியிருப்புகள் இருக்கும். அந்தக் குடியிருப்புகளில் வாழும் பாலை நிலமக்கள், அணிலும் எலியும் நுழையாதவாறு, ஈச்ச மரத்தின் மட்டைகளையும், ஈச்ச மரத்தின் இலைகளையும் பயன்படுத்தித் தங்கள் குடிசைகளின் கூரைகளை அமைத்திருப்பர். தொலைவிலிருந்து பார்ப்பவர் -களுக்கு அந்த குடிசைகளின் கூரைகள் முள்ளம்பன்றியின் முதுகுபோல் தோன்றும். ந்தக் குடிசைகளில், அண்மையில் பிள்ளையைப் பெற்ற பெண்கள், மானின் தோலாலாகிய படுக்கையில் படுத்திருப்பர். அவர்களைத் தவிர மற்ற மகளிர், கடப்பாரையால் கீழ்மேலாகும்படிக் கரிய தரிசு நிலத்தைக் குத்தி, அதில் எழுந்த புழுதியைத் துழாவி, மெல்லிய புல்லரிசியை எடுப்பர். அவர்கள் தங்கள் குடிசைகளின் முற்றத்தில் உள்ள விளா மரத்தின் நிழலில் பதித்த உரலில் புல்லரிசியை இட்டு, வயிரம் பாய்ந்த உலக்கையால் குற்றி, ஆழமான கிணற்றிலிருந்து உப்புத்தன்மையுடைய நீரை முகந்துகொண்டு வந்து, விளிம்பு உடைந்த வாயையுடைய பானையில் வார்த்த உலையை, முரிந்த அடுப்பிலே ஏற்றிக் கஞ்சியை வடிக்காமல் பொங்கிய (மான் கறியின்) உப்புக்கண்டம் சேர்ந்த ஊன் சோற்றைச் சமைப்பர். ‘போரில் வல்ல மறவருடைய தலைவனாகிய புறமுதுகிடாத படையினையுடைய, வீரக்கழல் அணிந்த, மலைநாட்டையுடைய இளந்திரையனின் பாணர் யாம்' என்று நீங்கள் கூறுவீராயின், தேக்கின் இலையில் உணவைக் குவித்து, அவர்கள் தர, வறுமையில் உள்ள உம் சுற்றத்தோடு அவ்வுணவினை நீங்கள் மிகுதியாகப் பெறுவீர்.

பாலை நிலமக்களின் வேட்டை  

பாலை நிலத்தில் மழை பெய்வது அரிது. அவ்வாறு வானம் வறண்டு போகும் காலத்தில், அங்கு வாழ்பவர்களின் குடிநீர் தேவைக்காக ஆங்காங்கே சில குழிகள் வெட்டப்பட்டிருக்கும். அந்தக் குழிகள் சரியான பாதையின் இரு பக்கங்களிலும் இருக்கும். அவற்றைக்கொண்டு மக்கள் எது சரியான வழி என்று அறிந்துகொள்வார்கள்.

பாலை நிலமக்கள் தங்கள் உணவுக்காகக் காட்டுப் பன்றியை வேட்டை ஆடுவர். காட்டுப் பன்றி நடமாடும் காலம் இராக்காலம். காட்டுப் பன்றி, நீர் வேட்கையைப் போக்கிக் கொள்வதற்காகக் காட்டு வழியில் நீர் இருக்கும் குழிகளுக்கு வரும் என்று எதிர்பார்த்து, அவர்கள் நீருள்ள குழிகளுக்கு அருகே வேறு சில குழிகளைத் தோண்டி, அவற்றின்மேல் தழைகளை இட்டு மூடியிருப்பர். நீர் அருந்தும் காட்டுப் பன்றி தழைகளால் மூடப்பட்ட குழிகளுக்கு வந்து விழுந்தால், அவற்றை எளிதாகப் பிடித்துவிடலாம் என்று எதிர்பார்த்து, வேட்டையாடுபவர்கள் மறைந்திருந்து காத்திருப்பர்.

இரவெல்லாம் காத்திருந்தாலும், காட்டுப் பன்றியை வேட்டையாடுபவர்களுக்குச் சில நாட்களில் காட்டுப் பன்றி கிடைப்பதில்லை. காட்டுப் பன்றி கிடைக்கவில்லையென்றால், அவர்கள் மறுநாள், முயல் வேட்டையை மேற்கொள்வர். முயல் வேட்டைக்குச் செல்லும்பொழுது, அவர்கள் நாயோடு செல்வர். முயல் கிடைத்தால் கவ்வலாம் என்று எதிர்பார்த்து வேட்டைக்குச் செல்லும் நாய், பிளந்த வாயோடு செல்லும். முயல்கள் புதர்களில் மறைந்திருக்கும் என்று எதிர்பார்த்து, அவர்கள், அந்தப் புதர்களைச் சுற்றி வேலியும் அந்த வேலியில் வலைகளையும் மாட்டியிருப்பார்கள். புதர்களைக் கோலால் அடித்து, முயல்களைப் புதர்களிலிருந்து வெளியேற்றுவர்கள். வெளியேறிய முயல்கள் தப்பியோடுவதற்கு முயற்சி செய்யும் பொழுது வலையில் சிக்கிக்கொள்ளும். சிக்கிக்கொண்ட முயல்களைப் பிடித்துச் சமைத்து அவர்கள் தம் சுற்றத்தாரோடு கூடியுண்பர். இத்தகைய காட்சிகள் நடைபெறும் பாலை நிலத்தைக் கடந்து காட்டு வழியே செல்லுங்கள்.

பலை நிலத்தில் உள்ள அரண்மனைகளில் பெறும் பொருள்கள்

காட்டு வழியே சென்றால் ஓர் அரண்மனையைக் காணலாம். அந்த அரண்மனைக்கு அருகே ஒரு படைக்கலக் கொட்டில் இருக்கும். அந்தக் கொட்டிலின் ஒரு பக்கத்தில், வேற்படை வரிசையாகச் சார்த்தி வைக்கப்பட்டிருக்கும். அந்த வேல்கள் போரில் பயன்படுத்தப்பட்டதால், அவை புலால் நாற்றம் உடையதாகவும், கூரிய முனைகள் மழுங்கியும் வளைந்தும் காணப்படும். அங்குள்ள வேற்படைக்கு அருகில் கேடயங்கள் வரிசையாக சார்த்தி வைக்கப்பட்டிருக்கும். அடுத்து, அங்கே நெடிய பெரிய விற்படையைக் காணலாம். அதற்கு அருகே, பல வகையான அம்புகள் குவியல் குவிலாகக் கொட்டிக் கிடக்கும்.

அந்தப் படைக்கலக் கொட்டிலுக்கு அருகே, பருத்து உயர்ந்த கால்களை நட்டுப் போடப்பட்ட பெரிய பந்தலைக் காணலாம். உயரமான அந்தப் பந்தலின் கால்களில் அம்புறாத்தூணிகளும், கடிய ஓசை எழுப்பும் துடிப்பறையும் மாறி மாறிக் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். அந்த அம்புறாத்தூணிகள் மலையுச்சியில் இருக்கும் தேனடைகளைப் போல் காட்சியளிக்கும். அந்தப் பந்தலின் மற்றொரு பக்கத்தில் குறுநில மன்னன் வாழும் அரண்மனை இருக்கும். 

அந்த அரண்மனையின் உள்ளே எவரும் அணுக முடியாதவாறு, வேட்டை நாய்கள் காவல் காக்கும். அந்த அரண்மனையைச் சூழ்ந்துள்ள மதிலில் உள்ள வாயில், பலகைகள் பலவற்றைச் சேர்த்துச் செய்யப்பட்ட கதவால் மூடப்பட்டிருக்கும். அந்தக் கதவை எவரும் எளிதில் திறக்காமல் இருப்பதற்காக, அதில் உருண்டு திரண்ட கணையமரம் பொருத்தப்பட்டிருக்கும். அங்குள்ள அரண்மனைக்கு வெளியே, பகைவர்களைக் கொல்வதற்காகக் கழுமரங்கள் வரிசையாக நடப்பட்டிருக்கும். பகைவர்கள் எளிதில் நுழைய முடியாதவாறு அந்த அரண்மனையைச் சுற்றிப் பருத்து உயர்ந்த மரங்கள் உள்ள காவற்காடு இருக்கும். அந்தக் காவற்காட்டைச் சூழ முள்நிறைந்த மரங்கள் முளைத்து வேலியாக அமைந்திருக்கும்.

நீங்கள் செல்லும் காட்டு வழியில் இதுபோல் வேறுசில அரண்மனைகளையும் காண்பீர்கள். அங்குள்ள அரண்மனை -களில் நீங்கள் தங்கினால், மேட்டு நிலத்தில் விளைந்த செந்நெல் அரிசிச் சோற்றைப் பாலை நிலமக்கள் உங்களுக்கு உண்ணக் கொடுப்பார்கள். அந்தச் செந்நெல் அரிசிச் சோற்றிலுள்ள பருக்கைகள், களர் நிலத்தில் வளர்ந்த ஈச்ச மரத்தின் கொட்டைகளைப்போல் இருக்கும். அந்தச் சோற்றுடன், உடும்புப் பொரியலும் அவர்கள் அளிப்பார்கள்.  அந்தப் பொரியல் அவர்கள் அளிக்கும் சோற்றை மூடி மறைக்கும் அளவுக்கு இருக்கும். அத்தகைய உணவை, அங்குள்ள வீடுகள்தோறும் நீங்கள் பெறுவீர்கள்.

குறிஞ்சி நில மக்களின் இயல்பும் தொழிலும்

பாலை நிலத்தைக் கடந்த பிறகு, அடுத்து நீங்கள் செல்லவிருப்பது குறிஞ்சி நிலப்பகுதி. அங்குள்ள ஆண்கள் மிகுந்த வீரமுடையவர்கள். ஆண்கள் மட்டுமல்ல, மகளிரும் வீரத்தில் சிறந்தவர்களே. பொதுவாக, மகளிர் அச்ச உணர்வுடன் இருப்பர் என்று கூறுவார்கள். கருவுற்றிருக்கும் மகளிர் சற்றும் அச்ச உணர்வுக்கு ஆளாகக் கூடாது என்றும் சொல்வர். ஆனால், குறிஞ்சி நிலத்தில், கருவுற்ற மகளிர் தம்மைத் தாக்க வரும் யானையைக் கண்டு அஞ்சமாட்டார்கள். பாம்பு தம்மேல் ஊர்ந்து சென்றாலும், வலிய இடி இடித்தாலும், அவர்கள் அஞ்சாத வீரம் உடையவர்களாக இருப்பர். குறிஞ்சி நிலத் தலைவன் ஆண்புலி போன்றவன்; குறுந்தாடி -யுடையவன்; தன் வலிமையால் கொள்ளை அடித்து உண்ணும் குடியில் பிறந்தவன். அவனுடைய படைவீரர்கள், குறித்த விலங்கின் மீது குறி தவறாது பாயும் வேட்டை நாயைப் போல், தலைவன் ஏவிய பணியைச் செவ்வனே செய்து முடிக்க வல்ல கொடிய வில்லையுடையவர்கள்.

தன் சொல் கேளாத மன்னருடைய காவல் மிகுந்த நிலத்திற்குக் குறிஞ்சி நிலத் தலைவன் தன் வீரர்களுடன் விடியற்காலத்தில் சென்று, அவர்களின் ஆனிரைகளைக் கவர்ந்து வருவான். அவர்கள் அந்த ஆனிரைகளில் சிலவற்றை விலை பேசி விற்றுவிட்டு, தம் வீட்டில் சமைத்த கள்வகைகளில் நெல்லால் செய்த சிறந்த கள்ளை உண்டு மகிழ்வர். பின்னர், ஆரவாரம் மிகுந்த மன்றத்தில் கொழுத்த ஆட்டுக்கிடாயை அறுத்து ஊராருடன் கூடி உண்பர். பிறகு, தோலால் போர்த்தப்பட்ட வாயையுடைய மத்தளம் நடுவில் முழங்க, வில்லைத் தாங்கும் இடத்தோளை வலப்பக்கம் சாய்த்து, பகலெல்லாம் சோம்பல் இல்லாமல் வீரர்கள் ஆடுவர். அத்தகைய வீரர்கள் வாழும் கரடுமுரடான இடத்தைக் கடந்து செல்லுங்கள்.

முல்லை நிலமக்களின் குடியிருப்பு

குறிஞ்சி நிலத்தைக் கடந்து சென்றால், முல்லை நிலத்தை அடைவீர்கள். அங்குள்ள சிறுசிறு குடிசைகளின் குறுகிய கம்பங்களில், ஆடுகள் நின்று தின்னக்கூடிய உயரத்தில் தழைகள் கட்டப்பட்டிருக்கும். வீட்டின் வாயில்களில் சிறிய புதர்கள் காணப்படும். அந்தக் குடிசைகளின் கதவுகள் மூங்கில் படல்களால் ஆனவை. ஆட்டுக்குட்டிகளை வைத்து மூடுவதற்காக, வைக்கோலால் வேயப்பட்ட, சிறு குடிசை போன்ற தோற்றமுள்ள கூண்டு ஒரு பக்கம் இருக்கும். ஆடுகளையும் அங்குள்ள பொருள்களையும் பாதுகாக்கும் ஒருவருக்காக, தோலாலான படுக்கை இருக்கும். அங்குள்ள வீடுகளில், ஆட்டுக்கிடாய்களின் நீண்ட தாம்புகள் கட்டப்பட்ட சிறிய கட்டுத்தறிகளையுடைய முற்றத்தில், செம்மறி ஆடுகளோடு வெள்ளாடுகளும் அடைபட்டுக் கிடப்பதைக் காணலாம்.

முல்லை நில மகளிர், விடியற்காலத்தில் பறவைகளின் ஒலி கேட்டுத் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து, உறைந்த தயிர் இருக்கும் பானையில் மத்தை இட்டு, நன்கு உறைந்து இறுகிய இனிய தயிரைக் கடைவார்கள். அவர்கள் தயிர் கடையும்போது எழும் ஒலி, புலியின் முழக்கத்தைப் போல் இருக்கும். அவ்வாறு அவர்கள் கடைந்து வெண்ணெயையும் மோரையும் பிரிப்பார்கள். தயிர் கடையும்போது மோர்த்துளிகள் புள்ளிப் புள்ளியாக அந்தப் பானையில் தோன்றும். 

தலையில் மெத்தென்ற சும்மாட்டின் மீது அந்தப் பானையை வைத்துக்கொண்டு, அவர்கள் மோர் விற்கச் செல்வார்கள். அந்த ஆயர் மகளிரின் மேனியின் நிறம் கறுப்பு; தோள்கள் மூங்கிலைப் போன்றவை. அவர்கள் காதுகளில் அசையக்கூடிய குழைகளை அணிந்திருப்பார்கள்; சிறுசிறு சுருள்களைக் கொண்ட மயிரை வாரி முடிந்திருப்பார்கள். மோரை விற்றுத் தொகுத்த பணத்தால் வாங்கிய உணவுப் பொருள்களைத் தம் சுற்றத்தார் அனைவருக்கும் வழங்குவார்கள். நெய்விலைக்குக் கட்டியாகப் பசும் பொன்னை வாங்காமல், எருமைகளையும் நல்ல பசுக்களையும், அவற்றின் கன்றுகளையும் வாங்குவார்கள். அத்தகைய முல்லை நில மக்கள் வாழும் குடியிருப்பில் நீங்கள் தங்கினால், நண்டின் சிறிய குஞ்சுகள் போன்ற தினையரிசியிலான சோற்றைப் பாலோடு பெறுவீர்கள்.

முல்லை நில மக்களின் குழலிசை

முல்லை நிலத்தில் வாழும் ஆயர்கள், காட்டு வழிகளில் செல்ல வேண்டியிருப்பதால், எப்பொழுதும் தங்கள் கால்களில் தோலாலான செருப்பு அணிந்திருப்பார்கள். எப்பொழுதும் செருப்பு அணிந்திருப்பதனால், அவர்களது கால்களில் செருப்புத் தழும்பேறியிருக்கும். ஆனிரைகளை அடித்து ஓட்டுகின்ற கோலையும், செடிகொடிகளை வெட்டுவதற்குக் கோடரியையும் பயன்படுத்துவதால், அவர்களது கைகளில் தழும்புகள் ஏற்பட்டிருக்கும். அவர்களுக்குத் தேவைப்படும் பொருள்கள் உள்ள உறிகளை இருபுறமும் தொங்கும் காவடியாகச் சுமந்து செல்வதால், அவர்களது தோள்களில் தழும்பேறியிருக்கும். அவர்கள் தங்கள் தலையில் பசுப்பாலைத் தடவி வாரி முடிந்திருப்பார்கள்; கொம்புகளிலும், கொடிகளிலும் மலர்ந்திருக்கும் மலர்களையும், காட்டில் உள்ள பல்வேறு மலர்களையும் சேர்த்து நெருக்கமாகக் கட்டிய மாலையைச் சூடிக்கொள்வார்கள். அவர்கள் ஒரே ஆடையைத் தங்கள் உடையாகவும், கூழைத் தங்கள் உணவாகவும் கொண்டு, கன்றுகளை விரும்பும் ஆனிரைகளோடு காட்டில் தங்கியிருப்பார்கள்.

நெருப்புக் கொள்ளியால் துளையிட்ட குழல்களில், ஆயர்கள் பாலைப்பண்ணை வெறுக்கும்வரை பாடுவார்கள். பின்னர், அவர்கள் குமிழ மரத்திலிருந்து வெட்டிய உள்ளீடற்ற கொம்பை வளைத்துக் கட்டி, மரல் செடியின் நாரை நரம்பாகக் கொண்ட வில்யாழை விரலால் தெறித்துக் குறிஞ்சிப்பண் பாடுவார்கள்.
அவர்கள் குறிஞ்சிப்பண் பாடும்போது தோன்றும் ஓசை, தம்முடைய இனம் எழுப்பும் ஓசையோ என்று கேட்டு, வண்டுகள் மயங்கும். இத்தகைய புல்வளம் நிறைந்த அகன்ற முல்லை நிலத்தில் தொடர்ந்து செல்லுங்கள்.

முல்லை நிலத்து உழவர்களின் ஊர்களில் கிடைப்பன

முல்லை நிலத்தில் தொடர்ந்து சென்றால், சிற்றூர்களை அடையலாம். அந்தச் சிற்றூர்களில் முள் நிறைந்த மரங்கள் காடுபோல் வளர்ந்திருக்கும். அந்த மரங்களுக்கு நடுவே மாட்டுக் கொட்டில்கள் இருக்கும். அங்குள்ள வீடுகளின் முற்றங்களில் தானியங்களைச் சேமித்து வைக்கும் குதிர்களைக் காணலாம். அந்தக் குதிர்கள் பெண்யானையின் கூட்டம்போல் காட்சியளிக்கும். அந்த வீடுகளில் பந்தல் இருக்கும். அந்தப் பந்தலில் தானியங்களை அரைக்க உதவும் திரிமரம் என்ற கருவி வைக்கப்பட்டிருக்கும். வீடுகளின் நெடுஞ்சுவர்களில் வண்டிச் சக்கரங்களும் கலப்பைகளும் சார்த்தி வைக்கப்பட்டிருப்பதால், அந்தச் சுவர்கள் தேய்ந்திருக்கும். வீடுகளுக்குள் உள்ள அடுக்களைகளில் மூட்டிய தீயிலிருந்து எழும் புகை, கொட்டில்களில் படிந்திருக்கும். அங்குக் கரிய வரகுத்தாள் வைக்கோல்களால் கூரைகள் வேயப்பட்டிருப்பதைக் காணலாம். அங்குள்ள வீடுகளில், பூளைப் பூவைப் போன்ற வரகுச் சோற்றையும், செந்நிறமான வேங்கைப் பூவைப் போன்ற அவரைப் பருப்பையும் வேகவைத்துத் துழாவிச் சமைத்த இனிய பருப்புச்சோற்றைப் பெறுவீர்கள்.

மருத நிலத்தைச் சேர்ந்த புன்செய் நிலம்

முல்லை நிலத்தைக் கடந்து சென்றால், மிகுந்த அளவு உணவுப் பொருள்களுடைய உழவர்களின் வீடுகளைக் காண்பீர்கள். அந்த உழவர்கள் நன்றாக உழப் பழகியவர்கள். அவர்கள் நன்கு நடை பயின்ற எருதுகளை முற்றத்திலேயே நுகத்தடியில் பூட்டிச் சென்று, கலப்பையின் கொழு, நிலத்தில் மறையுமாறு அமுக்கிப் களைபோகப் பலசால் உழுவார்கள். அவ்வாறு உழுத பின்னர், விதை விதைப்பார்கள். பின்னர், விளைநிலத்தில் வளர்ந்த களைகளைக் களைக்கொட்டால் களைந்து எறிவார்கள். பிறகு, அறுவடை செய்யும்பொழுது, ஆட்களின் ஆரவாரத்தால், அஞ்சி, நிலைகெட்டு, அழகிய வெண்கடம்ப மரத்தின் நறுமணமுள்ள மலரைப் போன்ற, பறக்க முடியாத தம் சிறிய குஞ்சுகளைத் தழுவிக்கொண்டு, சிறிய கால்களையும் கரிய கழுத்தையும் உடைய காடைப்பறவை காட்டில் சென்று தங்கும். இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறும் மருத நிலத்தின் புன்செய் நிலங்களைக் கடந்து செல்லுங்கள்.

மருத நிலதில் உள்ள நன்செய் நிலங்களில் காணும் காட்சிகள்

மருத நிலத்தின் புன்செய் நிலங்களைக் கடந்து சென்ற பிறகு, மருத நிலத்தின் நன்செய் நிலங்கள் இருக்கும் பகுதிக்குச் செல்வீர்கள். அங்குள்ள வயல்களில் நண்டுகள் இருக்கும். அந்த நண்டுகளின் கால்கள் கொல்லன் பயன்படுத்தும் கொறடைப் போல் பிளவுபட்டிருக்கும். அந்த வயல்களில் எருதுகள் போரிடும்பொழுது, தம் கொம்புகளால் பசிய கோரைப்புல்லைக் குத்தி அழிக்கும்; சேற்றில் உள்ள நண்டுகளின் வளைகள் அழியும். அவ்வாறு எருதுகள் போரிட்ட நிலத்தில் உள்ள மேடு பள்ளங்களைச் சமன்செய்து, உழவர்கள் நாற்றுகளை நடுவர்.

நன்செய் நிலத்தில் பயிர் நன்றாக விளைந்திருந்தாலும், அவற்றோடு நெய்தலும் கொடிவிட்டு மலர்ந்திருக்கும். களைபறிக்கும் மகளிர் களைந்து எறிந்த பருத்த தாளினையுடைய நெய்தல் மலர்களைத் தம் மக்களிடம் கொடுப்பர். அச்சிறுவர்கள் அவற்றை வெறுத்து, முள்ளுடைய கொம்புகளில், அரும்புகள் சூழ்ந்த இதழுடைய முள்ளிப் பூவைப் பறித்து, அங்கிருந்த பஞ்சாய்க் கோரையைப் பிடுங்கி, அதை பல்லால் கடித்து நாராக்கி, முள்ளி மலர்களை மாலையாகத் தொடுத்துத் தங்கள் தலையில் சூடிக்கொள்வர். அவர்கள், சம்பங்கோரையின் காயில் உள்ள தாதைத் தம் மார்பில் பொன்னை உரைத்து மாற்று காணப் பயன்படும் உரைகல்போல் தோன்றும்படிப் பூசிக்கொள்வர். அச்சிறுவர்கள் தம் வீட்டில் உள்ள பழைய சோற்றுருண்டையை வெறுத்து, வரம்பில், புதிய வைக்கோலால் வேய்ந்த குடிசையின் முற்றத்தில் இருக்கும் உரலில், அவித்த நெல் இட்டு, அவலாக இடித்து உண்பர். அவர்கள் அவல் இடிக்கும்பொழுது உலக்கையின் ஓசை மிகுந்ததால், அந்தக் குடிசைக்கு அருகில் வாழும் கிளிகள் தமக்குப் பகை நேர்ந்தது என்று கருதி அஞ்சும். அத்தகைய குறையாத புதுவருவாய் உடைய, நிறைய நெற்கதிர் விளையும் வயல்கள் சூழ்ந்த மருதநிலப் பகுதி அது.

நெல் அரிந்து கடா விடுதல்

கொட்டினால் கடுக்கும் குளவிக் கூட்டத்தை ஒத்த முற்றிய பெரிய செந்நெல்லின் தாளை அறுத்த உழவர்கள், அவற்றைப் பாம்புகள் வாழும் மருத மரத்தின் கிளைகளின் நிழலில் உள்ள நெற்களத்தில் கொண்டு வந்து போட்டுப் போராகக் குவிப்பார்கள். தங்களுடைய பெரிய சுற்றத்துடன் கைகோர்த்து ஆடுகின்ற துணங்கைக் கூத்தில், அழகிய பூதங்கள் வெண்ணிற ஆடை உடுத்தி நிற்பதுபோல், குவித்துள்ள நெற்போரின்மேல் படிந்திருக்கும் சிலந்தி பின்னிய வலையை உழவர்கள் நீக்குவார்கள். பிறகு, உழவர்கள் போர்களைப் பிரித்து எடுத்துப் பரப்பி, கடாவிட்டுப் போரடித்து, நெல்லையும் பதரையும், கூளத்தையும் வைக்கோலையும் தனித்தனியாகப் பிரித்து, மேல்காற்றில் தூற்றி எடுத்த நெற்குவியல், வடதிசையில் உள்ள மேரு மலைபோல் குவிந்திருக்கும். நெற்களத்துக்கு வரும் பொருநர்களுக்கும் இரவலர்களுக்கும் உழவர்கள் நெல்லைப் பரிசாக அளிப்பர். இத்தகைய வளமான மருத நிலம் சூழ்ந்த குடியிருப்புகளில் வாழும் மக்கள், அங்கிருந்து வேறு இடங்களுக்குச் செல்ல விரும்பமாட்டார்கள்.

மருத நிலத்து ஊர்களில் பெறும் உணவுகள்

அந்த மருத நிலத்தில் காளையோடு கூடிய பசு ஈன்ற கன்றுகளைக் கட்டுவதற்கான முளைகள் மருத நில வீட்டின் ஒரு பக்கம் இருக்கும்.  அந்த வீட்டில் ஒரு குதிர் இருக்கும். அந்தக் குதிர் ஏணிவைத்து ஏறினாலும் எட்ட முடியாத உயரமுடையது. அதன் தலையைத் திறந்து, பழைய நெல் கொட்டப்பட்டு நிறைந்திருக்கும். சிறப்பாகச் செய்யப்பட்ட சிறிய தேரை உருட்டி விளையாடும் பிள்ளைகள், தங்கள் தளர்ந்த நடையால் தோன்றிய வருத்தம் தீர, செவிலித் தாயாரிடம் பால் அருந்துவர். பால் உண்டு தமது படுக்கையில் படுத்து உறங்குவர். இத்தகைய காட்சிகள் நடைபெறும் வீடுகளையுடைய, பசி அறியாத குடியிருப்புகள் நிறைந்த, வளம் மிக்க பெரிய ஊர்களில் தங்கினால், சோம்பல் இல்லாத உழவர்கள் விளைத்துத் தந்த வெண்ணெல் சோற்றைக், கோழிப் பொரியலோடு பெறுவீர்கள்.

நெய்தல் நில மக்களின் குடியிருப்பு

பாலை, முல்லை, குறிஞ்சி, மருதம் ஆகிய நிலப்பரப்புகளைக் கடந்துசென்ற பிறகு, நெய்தல் நிலம் உள்ள பகுதிக்குச் செல்வீர்கள். அங்கு மீன்களை வளர்ப்பதற்கு ஒரு குளமும், குடி நீருக்காக ஒரு குளமும், குளிப்பதற்காக ஒரு குளமும் இருக்கும். அந்தக் குளங்களில், கோடைக் காலத்திலும் ஓர் ஆளின் தோள் உயரத்திற்குமேல் நீர் இருக்கும். அங்கு, மூங்கிற் கழிகளை வரிசையாக நட்டு, வெண்மையான மரக்கொம்புகளைக் குறுக்காகப் பரப்பிவைத்து, தாழைநாரால் இரண்டையும் முடித்துத் தருப்பைப்புல்லை, அதன் மேல் வேய்ந்து நெய்தல் நில மக்களின் குடிசைகள் கட்டப்பட்டிருக்கும். அந்தக் குடிசைகளின் முற்றத்தில் மீன்பிடிக்கும் பறி என்னும் கருவி இருக்கும். அந்த முற்றத்தில், புன்னை மரத்தின் கொம்புகளை வெட்டி நட்டு, மணல் பரப்பப்பட்ட பந்தலில் பசுமையான காய்கள் தொங்கும். அந்தப் பந்தலில் இளையவரும் முதியவர்களும் திரண்ட பிறகு, அனைவரும் கயல் மீனும் இறால் மீனும் புரளும் ஆழமான குளத்திற்குச் சென்று மீன் பிடிப்பர். குடிநீர்க் குளத்தில் எவரும் இறங்காதவாறு, சிலர் காவல் காப்பர்.

நெய்தல் நிலமக்களின் குடியிருப்புகளில் பெறும் உணவு

நெய்தல் நிலமக்கள் நன்றாகக் குத்தித் தீட்டப்படாத அரிசியைக் கூழாகத் துழாவிச் சமைப்பார்கள்; சமைத்த கூழை அகன்ற வாயையுடைய தட்டில் உலரும்படி ஆற்றுவார்கள். அத்தோடு நெல்முளையை இடித்து அதில் கலந்து, இரண்டு இரவும் இரண்டு பகலும் கழித்துக் கெட்டியான வாயையுடைய சாடியில் வைத்து இளங்கள்ளின் நாற்றம் அறும்படி முற்றிய பிறகு, வெந்நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி, விரல்களால் அலைத்துப் பிழிந்தெடுத்த மணமுள்ள கள்ளை, மீன் சூட்டோடு, நீங்கள் பசியால் தளர்ந்தபொழுது பெறுவீர்கள்.

காலையில் நீர்ப்பூக்களைச் சூடிச் செல்லுதல்

பச்சை இறைச்சித் துண்டுகள் அடங்கிய தோல்பை தோளில் தொங்க, மீன் பிடிப்பதில் வல்லமைபெற்ற, பாணர்குடியில் பிறந்தவன், அங்குள்ள குளத்துக்கு மீன் பிடிக்கச் செல்வான். அவன் கையில் ஒரு மூங்கில் கோல் இருக்கும். அந்தக் கோலின் நுனியில் ஒரு கயிற்றை இறுக்கிக் கட்டியிருப்பான். அந்தக் கயிற்றின் மற்றொரு முனையில், இரும்பாலான, வளைந்த தூண்டில் முள் கட்டப்பட்டிருக்கும். அந்தத் தூண்டில் முள் இறைச்சியால் மூடப்பட்டிருக்கும்.  பெரிய பிளந்த வாயையுடைய வாளைமீன், அந்தத் தூண்டில் முள்ளில் சிக்கிகொள்ளாமல், இறைச்சியைக் கவ்விச் செல்லும். அந்தக் குளத்தில் உள்ள பிரம்புக் கொடி காற்றில் ஆடும்பொழுது, அதன் நிழல் அசைவதைக் கண்டு, அதையும் தூண்டில் என்று நினத்து, வாளைமீன் அஞ்சும். நீர் நிறைந்த அந்தக் குளத்தில், தண்ணீரே தீப்பற்றிக்கொண்டதோ என்று நினைக்கும்படி, கடவுள் விரும்பும் செந்தாமரை மலர்கள் மலர்ந்திருக்கும். அந்த மலரைச் சூடிக்கொள்ளாதீர்கள். மழைபொழியும்பொழுது வானத்தில் தோன்றும் வானவில்லின் பல நிறங்களைப் போல் செங்குவளை மலரும், நீல மலரும் வேறு நிறமுடைய மற்ற மலர்களும் அந்தக் குளத்தில் இருக்கும். பூப்பறிப்பவர்கள் அந்த மலர்களைப் பறித்து உங்களுக்குத் தருவார்கள். நீங்கள் அவற்றைச் சூடிக்கொண்டு அங்கிருந்து செல்வீர்களாக.

அந்தணர்களின் உறைவிடங்களில் பெறுவன

நெய்தல் நிலத்திலிருந்து கச்சியை நோக்கிச் செல்லும் வழியில், அந்தணர் குடியிருப்பைக் கடந்து செல்ல வேண்டும். அந்தணர் குடியிருப்பில் உள்ள வீடுகளின் வாயிலில் சிறிய கால்களை -யுடைய பந்தலில் கொழுத்த கன்றுகள் கட்டப்பட்டிருக்கும். அந்த வீடுகள் பசும் சாணத்தால் மெழுகப்பட்டிருக்கும்.  அந்த வீடுகளில் உள்ளவர்கள் தாம் வழிபடும் தெய்வங்களின் உருவங்களைத் தம் வீடுகளில் வைத்திருப்பார்கள். அந்த வீடுகளுக்கு அருகே, நாய்களையும் கோழிகளையும் காண முடியாது. அந்த வீடுகளில் வாழும் கிளிகள் வேதத்தைப் பலமுறை கேட்டுப் பழகியதால், அவையும் வேதம் ஓதும். அங்கு வாழும் அந்தணர்கள் வேதத்தைப் பாதுகாக்கின்றவர்கள். அங்கு வாழும் பார்ப்பனப் பெண்கள், வானத்தின் வடதிசையில் காணப்படும் விண்மீனாகிய அருந்ததியை ஒத்த கற்புடையவர்கள்; நல்ல மணம் வீசும் நெற்றியையும் வளையல் அணிந்த கைகளையும் உடையவர்கள்.  நீங்கள் அங்குச் சென்றால், அந்தப் பெண்கள், பறவையினது பெயரைப் பெற்ற கருடன் சம்பா என்னும் நெல்லின் சோற்றையும் சிவந்த பசுவின் மணம் மிக்க மோரைக் கடைந்து எடுத்த வெண்ணையில் மாதுளையின் சிறுதுண்டுகளை வேக வைத்து, மிளகுப்பொடியையும் மணமுள்ள கறிவேப்பிலை இலைளையும் கலந்து வகைவகையாகச் சமைத்த உணவை மாவடு ஊறுகாயோடு, நீங்கள் பெறுவீர்கள். அங்கிருந்து தொடர்ந்து சென்றால், அருகில் இருக்கும் நீர்ப்பாயல் துறைக்குச் செல்வீர்கள்

நீர்ப்பாயல் துறையின் சிறப்பு

நீர்ப்பாயல் துறையில் தோழியருடன் கூடி நீராடுகின்ற மகளிர் விட்டுச்சென்ற பொன்னால் செய்த மகரக்குழையை, நீலமணி போன்ற மீன்கொத்திப் பறவை இரையென்று எடுத்துக்கொண்டு போகும். அப்படிப் போகும் பறவை, மற்ற பறவைகள் நிறைந்திருக்கின்ற பனைமரத்தின் தனித்த மடலில் சென்று தங்காமல், அந்தணர் யாகசாலையில் நட்ட கம்பத்தின் மீது சென்று தங்கும். அவ்வாறு, அந்த மீன்கொத்திப் பறவை அந்தக் கம்பத்தின் மீது இருப்பது, யவனரின் மரக்கலத்துக் கூம்பின் மேல் ஏற்றிய அன்னத்தைப் போன்ற விளக்கைப்போலவும், உயர்ந்த வானில் இடங்கொண்ட வைகறைப்பொழுதில் தோன்றும் வெள்ளிமீன் போலவும் விட்டுவிட்டு ஒளிவிட்டு விளங்கும். நீர்ப்பாயல் துறையிலிருந்து நீர்ப்பாயல் துறைமுகப் பட்டினத்துக்குச் செல்லுங்கள். 

நீர்ப்பாயல் பட்டினத்தின் பெருமை

நீர்ப்பாயல் பட்டினத்தின் துறைமுகத்தில், பால் போன்ற வெண்மையான பிடரிமயிரையுடைய குதிரைகளையும், வடதிசையின் வளங்களைக் கொண்டுவரும் பொருள்களையும் ஏற்றிவரும் மரக்கலங்கள் சூழ்ந்திருக்கும். அங்கு, உயர்ந்து நிற்கும் மாடமாளிகைகளையும், மணல் நிறைந்த தெருக்களையும், வணிகர் மிகுதியாக வாழும் பல்வேறு தெருக்களையும், தொழில் செய்வோர் காக்கும் மிகவும் உயர்ந்த பண்டசாலைகளையும் காணலாம். வயலில் உழும் காளைகளையும் கறவை மாடுகளையும் அங்கு காண முடியாது. காவல் காக்கும் நாய்களும், உணவுக்காக வளர்க்கப்படும் ஆட்டுக்கிடாய்களும் அங்குச் சுற்றித் திரியும். சோற்று வளம் மிக்க நல்ல இல்லங்களும் அங்கு இருக்கும்.

அங்கு, வளைந்த அணிகலன்களை அணிந்த மகளிர், கொன்றையின் மெல்லிய கிளைகளில் பனிப்படலம் படிந்திருப்பதுபோல், பசிய மணிகளைக் கோர்த்த வடங்களையுடைய, அல்குலில் கிடக்கின்ற மெல்லிய ஆடை அசைய, மலையில் மகிழ்ச்சி மிகுந்து ஆரவாரிக்கும் மயில்போலக் காலில் அணிந்த பொன் சிலம்பு ஒலிக்கும்படி ஆரவாரிப்பர்; விண்ணை முட்டும் மாடத்தில், நூலால் வரிந்து செய்யப்பட்ட பந்தையடித்து விளையாடுவர்; கையில் அணிந்த மெல்லிய வளையல்கள் அசையும்படி, முத்துப்போல் பரப்பிய வெண்மணலில் பொன்னால் செய்த கழற்சிக்காயைக்கொண்டு கழங்காடுவர். இந்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறும் பட்டினத்தில் தங்கி இளைப்பாறுங்கள்.

நீர்ப்பாயல் பட்டினத்து மக்களின் விருந்தோம்பல்

நீர்ப்பாயல் பட்டினத்தில், பலரும் புகுகின்ற கள்ளுக்கடையின் வாயிலில் அழகிய கொடி பறக்கும். கடையின் முற்றத்தில், புல்லைச் செதுக்கி நீக்கி, சிவந்த பூக்கள் தூவப்பட்டிருக்கும்.  அங்குக் கள்ளைக் காய்ச்சுகின்ற மகளிர் வட்டில்களைக் கழுவிக் கவிழ்த்ததால் சிந்திய நீர் வழிந்து நிலம் சேறாக இருக்கும். அச் சேற்றில், பல குட்டிகளை ஈன்ற பெண் பன்றி புரளும். அச் சேற்றில் புரளும் பெண் பன்றியோடு   புணர்ச்சி விரும்பிக் கூடாதவாறு, குழியிலே வைத்து, இடித்த மாவை உணவாகக் கொடுத்து, ஆண் பன்றி பலநாட்கள் பாதுகாக்கப்படும். அவ்வாறு, குழியிலே வைத்துப் பாதுகாத்த குறுகிய கால்களையுடைய ஆண் பன்றியின் கொழுத்த தசைத் துண்டுகளோடு, களிப்பு மிக்க கள்ளையும் நீங்கள் நீர்ப்பாயல் பட்டினத்தில் பெறுவீர்கள்.

ஓடும் கலங்களை அழைக்கும் கலங்கரை விளக்கம்

நீர்ப்பாயல் பட்டினத்தில் உள்ள கலங்கரை விளக்கம் மிக உயரமானது. அது பார்ப்பதற்கு, வானம் விழாதபடி ஊன்றிவைத்த பற்றுக்கோல்போல் இருக்கும். கழியும் கற்றையும்கோண்டு வேயாது, அந்தக் கலங்கரை விளக்கம் கல்லும் சாந்தும் கொண்டு கட்டப்பட்டது. அதன் உச்சிக்குச் சென்று விளக்கை ஏற்றுவதற்கு ஏதுவாக ஏணி சார்த்தப்பட்டிருக்கும். ஏணி சார்த்தப்பட்டிருந்தாலும், அதில் ஏறிக் கலங்கரை விளக்கத்தின் உச்சியை அடைவது அரிது. அந்தக் கலங்கரை விளக்கத்தில், இரவில் கொளுத்திய விளக்கு, பெருநீர்ப்பரப்பாகிய கடலில் ஓடும் மரக்கலங்களை, ”வருக!, வருக! நீங்கள் சேர வேண்டிய கரை இதுதான்.” என்று அழைப்பதுபோல் இருக்கும். நீர்ப்பாயல் பட்டினத்தைக் கடந்து செல்லுங்கள்.

தோப்புக் குடிகளில் நிகழும் விருந்தோம்பல்

நீங்கள் செல்லும் வழியில், மணம் கமழும் சுற்றுப்புறங்களை -யுடைய தோப்புகளில், தனித்னியாக அமைந்த வீடுகளில் உழவர்கள் வசிப்பர். தென்னையின் வற்றிய மடல்களால் அவர்களது வீடுகளின் கூரைகள் வேயப்பட்டிருக்கும், அவர்கள் வீட்டின் முற்றத்தில் மஞ்சள் செடிகள் இருக்கும். நீங்கள் அவர்களின் வீடுகளில் தங்கினால், சுளைகளையுடைய பெரிய பலாப்பழத்தையும், தென்னையின் இனிய இளநீரையும், வாழைப்பழத்தையும், பனையின் நுங்கையும், இனிய பல பண்டங்களையும் உண்பீர்கள். அவற்றை உண்பதை நீங்கள் வெறுத்தால், முளை முற்றிய சேப்பங்கிழங்கை உண்பீர்கள். பிறகு, திருவெஃகா என்னும் ஊரை நோக்கி உங்கள் பயணத்தைத் தொடருங்கள்.

திருவெஃகாவின் சிறப்பும் திருமால் வழிபாடும்

திருவெஃகாவில், நீண்ட பூங்கொத்துகளையுடைய காந்தள் வளர்கின்ற மலையில், யானை படுத்திருந்தாற்போலப் பாம்பணையில் திருமால் பள்ளிகொண்டிருக்கும் காட்சியைக் காண்பீர்கள்.  அங்குள்ள சோலையில் குயில்கள் வாழும்; ஆனால், வெயில் நுழைய முடியாது. அந்தச் சோலையில் உள்ள குறுகிய காலையுடைய காஞ்சி மரத்தைக் குருக்கத்திக் கொடிகள் சூழந்திருக்கும். அங்கு, மணலிடத்தே உள்ள குழிகளில் தேங்கி நிற்கும் நீரில், குருக்கத்தியின் வரிகளையுடைய பூக்கள் விழுந்து கிடப்பது, கரிய சட்டியில் அப்ப வாணிகர் சுட்ட அப்பம் பாலிலே கிடந்தாற்போல் தோன்றும். வெள்ளநீர் தூய்மைப்படுத்திய பொழில்கள்தோறும், திரண்ட தண்டினையுடைய சோலையிடத்து நிற்கும் பாக்கு மரத்தின் சூல்கொண்ட வயிற்றைப்போல் இருக்கும் நீலநிறமுள்ள தோல்பையில் உள்ள கள்ளைக் குடித்து மகிழுங்கள். பின்னர், பெரிய மகிழ்ச்சியையுடைய இருக்கைகளில் தங்கி, சிறிய கோடு போன்ற இளைய திங்களைப் பாம்பு தீண்டினாற்போல மகரவாய் என்னும் தலைக்கோலத்தைச் சூடிய அழகிய நெற்றியையும், தேனை உருப்பெயர்த்து அமைத்ததைப் போன்ற நல்ல அழகிய குளிர்ச்சியுடைய கண்களையும் கொண்ட மடப்பம் மிக்க மகளிரோடு பகற்பொழுதில் விளையாடி, சுவர்க்கத்தைப் போன்ற நீர்த்துறையில் இன்பத்தை நுகர்வாரோடு இளைப்பாறுங்கள். பின்னர், அவ்விடத்தில் உள்ள         அரிய வல்லமைபெற்ற கடவுளை வாழ்த்தி, சிறிதே உம்முடைய கரிய தண்டினையுடைய இனிய இசைக்கருவியை இயக்கியவராய், அவ்விடத்தைவிட்டுச் செல்லுங்கள்.

கச்சி மூதூரின் சிறப்பு

தொடர்ந்து சென்றால், அங்குசத்தையுடைய பாகன் அயர்ந்த சமயம் பார்த்து, நீண்டு தொங்கும் துதிக்கையை உடைய யானைக்கு இடும் நெய்யிட்டுக் கலந்த சோற்றுருண்டையை நிறைசூல் கொண்ட மந்தி கவர்ந்து சென்று தங்கும் சோலைகளையும், யானைகளின் சினம் அடங்க, அவைகளைக் கட்டும் கட்டுத்தறி நடப்பட்ட இடங்களையும் காண்பீர்கள். அங்கு, வலிமையான தேர்கள் ஓடியதால் பள்ளங்களுள்ள நெடிய தெருக்களும், பகைவரின் படையின்முன் தோல்வியடையாத வலிமை மிகுந்த, பெரிய புகழையுடைய மறவர்களின் குடியிருப்புகளும் இருக்கும். அங்குப் பொருள்களை விற்பவர்களும் வாங்குபவர்களும் நிறைந்து இருப்பர். அதைக் கடந்து சென்றால், காவற் காட்டையும், அதை அடுத்து அரண்மனை வாயிலையும் அடையலாம். பரிசிலரின் வருகைக்காக அந்த வாயில் எப்பொழுதுமே திறந்தே இருக்கும். வாயிலைக் கடந்தால், அரசனின் அரண்மனை இருக்கும்.  பல வீதிகளுக்கு நடுவே, செங்கல்லால் கட்டப்பட்டு வானளாவ உயர்ந்ததாக இருக்கும் அந்த அரண்மனை, இதழ்கள் விரிந்திருக்க இடையே கொட்டை புடைத்திருக்கும் தாமரை மலரை நினைவூட்டும். அந்த அரண்மனை உள்ள கச்சி மாநகரம், புலால் நாற்றமுடைய கடல் சூழ்ந்த இவ்வுலகில், பூவாவாமல் காய்க்கின்ற மரங்களுள் சிறந்த பலாவைப் போன்று, இவ்வுலகில் உள்ள நகரங்கள் அனைத்தையும்விட மிகுந்த சிறப்புடையது; பல சமயத்தாரும் தொழும்படி எடுக்கப்படும் விழாக்களால் சிறந்தது.

அரசனது முற்றச் சிறப்பு

கச்சி மூதூரில் இருக்கும் இளந்திரையன் வள்ளன்மையில் சிறந்தவன்; தன்னை நாடி வந்தவர்களுக்குப் பாதுகாவலாக இருப்பவன். அருள்செய்தலும், தன்னைப் பகைத்தவர்களை அழித்தலும் அவனுக்கு எளிய செயல்கள். அதனால், அவனை எதிர்ப்பவர்களின் ஊர்களிலுள்ள மக்கள் கூடும் பொதுவிடங்கள் பாழடையும். அவனை விரும்பியவர்களின் நாட்டில் நல்ல பொன் பூத்துத் திகழும். நட்புக் கொள்ளுதலை வேண்டி விரும்பினவர்களும், அவன் வலிமையைத் துணையாகக்கொள்ளக் கருதிய வேறோர் உதவியில்லாதவர் -களும், மலையினின்றும் விழுகின்ற அருவி கடலில் கலப்பதுபோல் அவனை நோக்கி வருவர்.  இவ்வாறு பல்வேறு வகைகளிலும் அவனுக்குக் கீழ்ப்படிந்த அரசர்கள் வந்து அவனைக் காண்பதற்காகக் காத்திருப்பார்கள்.

இளந்திரையன் அமைச்சர்களோடு வீற்றிருக்கும் காட்சி

இளந்திரையனின் அரண்மனையில் பயன்படுத்தப்படாமல் செல்வம் குவிந்து கிடக்கும். இளந்திரையன் கடலின் நடுவே ஞாயிறு தோன்றி ஒளி செய்தாற்போன்று மயக்கமில்லாத அறிவுடையவன். அவன், நீதி கேட்டு வந்தவர்க்கும், வறுமையோடு வந்து இரப்பவர்க்கும் அவர்கள் கேட்காமலேயே குறிப்பால் உணர்ந்து அவர்கள் விரும்பியதை வழங்கும் சிறந்த அறிவுடையவன். இவ்வாறு கொடை என்னும் கடமையைச் செய்துமுடித்த பரந்த உள்ளத்துடன், குடிமக்கட்குக் கொடுமை செய்ய நினைக்காத அமைச்சர் சுற்றத்தோடு உள்ள இளந்திரையனை அணுகுவீராக!

பாணன் அரசனைப் போற்றும் வகை

இளந்திரையனை அணுகி, ”மதநீர் ஒழுகுவதால் வண்டுகள் மொய்க்கும் யானையின் முகத்தைத் தாக்கிய சிங்கம், புலிக்குட்டியைப் பாய்ந்து கொல்ல விரும்பியதுபோல், புலவர்களுக்குப் பொன்னாலான அனிகலன்களைச் சூட்டுவது போன்ற கடமைகளைச் செய்து முடித்துப் பகைவருடைய காவலமைந்த மதில்களை அழித்து, அந்த மன்னர்களின் மணிமுடி (கிரீடம்) முதலியவற்றைக் கைப்பற்றிக்கொண்டு, போரில் வெற்றி பெறுவதைத் தவிர, சந்துசெய்வதை நோக்கமாகக் கொள்ளாத வேந்தனே! வலிய வாளினையுடைய பெரிய கையினையும் பகைவர் நாடுகளை வென்று, கொண்ட கொள்ளைப் பொருளாகிய உணவையும் உடைய தொண்டையோர் குடியிற் பிறந்தவனே! வீரர்க்கு வீரனே! கொடியவர்க்குக் கொடியவனே! செல்வர்க்குச் செல்வனே! போர்த்தொழிலில் மிக்கவனே! பெருமானே, உன் பெரும் புகழைப் பாராட்டி வந்தேன். நீ நெடுங்காலம் வாழ்வாயாகஎன்று சொல்லிப் பேரியாழை முறைப்படி இயக்கி, மன்னர்களை வாழ்த்தும் முறைப்படி, கையால் தொழுது நாவால் புகழ்ந்து வாழ்த்துவாயாக! உனது நிலையை இளந்திரையன் தெரிந்துகொள்வதற்கு முன்னரே, இளந்திரையன் உனக்குப் பரிசளிக்க விரும்புவான்.

பாணர்க்கு விருப்புடன் உணவளித்தல்

நிலையில்லாத இவ்வுலகில் நிலையானது எது என்று ஆராய்ந்து, புகழ் ஒன்றே என்று ஆறிந்து, அந்தப் புகழை அடையும் பொருட்டு, உன்னை அழைத்து, உன் இடுப்பில் உள்ள பாசியின் வேரைப்போல் சிதைந்து அழிந்த கந்தையை அகற்றிப் பாலாவியைப் போன்ற ஒளிரும் நூலால் செய்த ஆடைகளை உனக்கும் உன் சுற்றத்தார் அனைவருக்கும் கொடுத்து உடுக்கச் செய்வான். வளைந்த அரிவாளை அடிக்கடிப் பயன்படுத்துவதால் காழ்ப்பேறிய கையையுடைய சமையல்காரன் சமைத்த பலவகை இறைச்சியின் கொழுத்த தசைத்துண்டுகளை, அரியப்பட்ட கதிர்க்குவியல்கள் ஈரமற்றுப் போக உலரவிட்ட செந்நெல்லின் பெரிய கல்லும் பிறவும் போகப் பொறுக்கி எடுத்த அரிசியால் ஆக்கின சோற்றையும், இனிய சுவையுடைய பிற உணவுகளையும் வெள்ளிக்கலங்களில் இட்டு, தாய் பிள்ளைக்கு ஊட்டுவதுபோல் கொடுத்து உங்களை உண்ணச் செய்வான். 

பரிசு வழங்குதல்

பொற்றாமரை மலர்களை உங்கள் நீண்ட கரிய தலைமுடியில் அழகுபெற அணிவிப்பான். கடலிலிருந்து நீரை முகந்து கொண்டுவந்து, பருவ கால வானத்தில் பகலில் பெய்கின்ற மழையில் மின்னல் தோன்றினாற்போல், அலங்கரித்த கரிய மயிரில் அழகு பெறும்படி, பொன்னால் செய்து தொடுத்த மாலையை விறலியர் சூடிக்கொள்ளக் கொடுப்பான். குதிரை இலக்கணநூல் கற்றோர் பாராட்டும் வெண்மையான பிடரி மயிரையுடைய நான்கு குதிரைகள் பூட்டிய, பொன்னால் செய்த தேரைத் தருவான். அதைக் கொடுத்தும் மனநிறைவு கொள்ளாமல், போர்களில் பகைவரை அழித்தபொழுது, அவர்கள் விட்டுச் சென்ற, விண்ணில் பறப்பதுபோல் பாய்ந்து செல்லும் குதிரைகளையும் சேணங்களையும் தருவான். இத்தகைய பரிசில்களை, நீ சென்ற அன்றே, உங்களுக்குக் கொடுத்து, உங்களை வழி அனுப்புவான்.

Comments

Popular posts from this blog

பெரும்பாணாற்றுப்படை- மூலமும் உரையும்

பெரும்பாணாற்றுப்படை – அறிமுகம்