பெரும்பாணாற்றுப்படை- மூலமும் உரையும்
பெரும்பாணாற்றுப்படை- மூலமும் உரையும்
பாணனின் யாழ்
அகல்
இரு விசும்பில் பாய் இருள் பருகிப்
பகல் கான்று, எழுதரு பல் கதிர்ப் பருதி
காய் சினம் திருகிய கடுந்திறல் வேனில்,
பாசிலை ஒழித்த பராஅரைப் பாதிரி
வள் இதழ் மாமலர் வயிற்றிடை வகுத்ததன் 5
உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சைப்
பரியரைக் கமுகின் பாளை அம் பசும் பூக்
கரு இருந்தன்ன, கண்கூடு செறி துளை
உருக்கியன்ன, பொருத்துறு போர்வைச்
சுனை வறந்தன்ன இருள் தூங்கு வறுவாய்ப் 10
பிறை பிறந்தன்ன பின் ஏந்து கவைக்கடை,
நெடும் பணைத் திரள் தோள் மடந்தை
முன்கைக்
குறுந்தொடி ஏய்க்கும், மெலிந்து வீங்கு திவவின்
மணி வார்ந்தன்ன, மாஇரு மருப்பின்
பொன் வார்ந்தன்ன, புரி அடங்கு நரம்பின் 15
தொடை
அமை கேள்வி இடவயின் தழீஇ,
அருஞ்சொற்பொருள்:
1. அகல்தல் = விரிதல்;
இரு = கரிய; விசும்பு
= வானம்; பாய்தல் = பரவுதல்; பருகி
= உண்டு (விழுங்கி)
2. கான்று = தோற்றுவித்து;
எழுதரு = எழுந்த, பருதி
= கதிரவன்
3. காய்தல் = சுடுதல்;
திருகிய = முறுக்கிய; திறல்
= வலி;
வேனில் = கோடை
4. பாசிலை = பசிய
இலை;
ஒழித்த = உதிர்த்த; பராஅரை
=பருத்த அடி; பாதிரி
= பாதிரி மரம்
5. வள் = பெரிய;
வயிறு = உள்ளிடம்; வகுத்த
= கிழித்த
6. உள்ளகம் = உட்புறம்;
புரை - உவமையுருபு; பச்சை
= தோல்
7. பரி = பெரிய;
அரை
= மரத்தின் அடிப்பக்கம்; கமுகு
= பாக்கு; பாளை = மடல்;
அம்
= அழகிய; பசும்பூ =பசுமையான
பூ
8. செறிதல் = நெருங்குதல்
9. அன்ன = போல;
பொருத்துறு = பொருந்திய
10. சுனை = குளம்;
வறந்தன்ன = வறண்டதைப் போன்ற;
தூங்குதல் = நிலையாகத் தங்குதல்;
வறுவாய் = நாக்கு இல்லாத
வாய்
11. ஏந்துதல் = தாங்குதல்;
கவைக்கடை = பிறைவடிவில் உள்ள
யாழுறுப்பு
12. பணை = மூங்கில்;
திரள் = திரட்சி; மடந்தை
=பெண்
13. தொடி = வளையல்;
குறுந்தொடி = சிறிய வளையல்;
ஏய்க்கும் = போன்ற; வீங்குதல் = இறுகுதல்;
திவவு = வார்க்கட்டு
14. வார்தல் = ஒழுகல்;
வார்ந்தன்ன = ஒழுகியதை ஒத்த;
மா
= பெரிய; இரு = கரிமை;
மருப்பு = யாழின் தண்டு
15. வார்ந்தன்ன = ஒழுகியதை
ஒத்த; புரி = முறுக்கு
16. தொடை = கட்டு;
கேள்வி – இங்கு யாழுக்கு
ஆகுபெயராக வந்துள்ளது; இடவயின்
= இடப்பக்கம்; தழீஇ = தழுவி
பதவுரை:
1. அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி = அகன்ற பெரிய வானில் பரந்த இருளை விழுங்கி,
2. கான்று, எழுதரு பல் கதிர்ப் பருதி = பகற்பொழுதைத் தோற்றுவித்து, எழுதலைச் செய்யும் பல கதிர்களையுடைய ஞாயிறு
3. காய் சினம் திருகிய கடுந்திறல் வேனில் = மிகுதியாகச் சுடுகின்ற கடுமையான வலிமையுடைய முதுவேனிற் காலத்தில்
4. பாசிலை ஒழித்த பராஅரைப் பாதிரி = பசிய இலைகளை உதிர்த்த பெருத்த அடிமரத்தையுடைய பாதிரியின்
5. வள் இதழ் மாமலர் வயிற்றிடை வகுத்ததன் = வளமையான இதழையுடைய பெரிய பூவை நடுவே பிளந்ததனுடைய
6. உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை = உள்ளிடத்தைப் போன்ற நிறமூட்டப்பெற்ற தோலினையும்.
7.பரியரைக் கமுகின் பாளை அம் பசும் பூ = பருத்த அடிமரத்தையுடைய கமுகின் பாளையாகிய அழகினையுடைய இளம்
பூ
8. கரு இருந்தன்ன, கண்கூடு செறி துளை = (விரியாமல்) கருவாய் இருந்ததைப் போன்ற இரண்டு கண்ணும் கூடிய செறிந்த
துளையினையும்;
9.உருக்கியன்ன, பொருத்துறு போர்வை = உருக்கி வார்த்ததைப்போல் பொருத்தப்பட்ட உறையினையும்
10. சுனை வறந்தன்ன இருள் தூங்கு வறுவாய் = சுனை வற்றியதைப் போன்ற இருள் செறிந்த உள்நாக்கில்லாத
வாயினையும்
11. பிறை பிறந்தன்ன பின் ஏந்து கவைக்கடை, = பிறை பிறந்ததைப் போன்று பின்புறம் ஏந்தியிருக்கின்ற
பிளவுபட்ட கடையினையும்
12. நெடும் பணைத் திரள் தோள் மடந்தை முன்கை = நீண்ட மூங்கில் போன்ற திரண்ட தோளினையுடைய பெண்ணின் முன்கையில்(உள்ள)
13. குறுந்தொடி ஏய்க்கும், மெலிந்து வீங்கு திவவின் = சிறிய வளையல்களைப்போல் நெகிழ்ந்தும் இறுகியும் உள்ள
வார்க்கட்டினையும்
14. மணி வார்ந்தன்ன, மாஇரு மருப்பின் = நீலமணி ஒழுகினாற் போன்ற கருமை நிறத்தையுடைய பெரிய
தண்டினையும்
15. பொன் வார்ந்தன்ன, புரி அடங்கு நரம்பின் = பொன்னை உருக்கிக்
கம்பியாக வார்த்ததைப் போன்ற
முறுக்கு அடங்கின நரம்பினையும் உடைய
16. தொடை அமை கேள்வி இடவயின் தழீஇ = கட்டமைந்த யாழை இடத்தோளின் பக்கத்தே அணைத்து
கருத்துரை:
கச்சி நகரத்தைத் தலைநகராகக்கொண்டு, தமிழகத்தின் வடபகுதியில் இருந்த தொண்டை நாட்டை இளந்திரையன்
என்ற மன்னன் ஆட்சிபுரிந்தான். அவனிடம் பரிசுபெற்ற பாணன் ஒருவன் தன் ஊர் நோக்கிச்
சென்றுகொண்டிருந்தான். அவன் செல்லும்
வழியில், ஒரு பாணன்
பேரியாழ் ஒன்றைத் தழுவிக்கொண்டு, தன் சுற்றத்தாரோடு இளைப்பாறிக் கொண்டிருந்தான். அகன்ற
பெரிய வானத்தில், பரந்து கிடக்கும்
இருளைப் போக்கி, ஒளியைப்
பரப்பியவாறு கதிரவன் எழுந்து, தன் ஒளிக்கதிர்களால் வெப்பத்தை உண்டாக்கிய வேனிற் காலத்தில், பாதிரி மரத்தின் பசுமையான இலைகள் உதிர்ந்தன. பருத்த
அடிமரத்தையுடைய பாதிரி மரத்தில் வளமான இதழ்களைக்கொண்ட பெரிய மலர்கள் உள்ளன. அந்தப் பாதிரி மரத்தின் மலரை இரண்டாகப் பிளந்தால், அதன் உட்புறம் சிவப்பாக இருக்கும். அதே சிவப்பு நிறமுள்ள தோலால் அந்த யாழ் போர்த்தப்பட்டிருக்கிறது. பாக்கு மரத்தின் இளம் பூ விரியாமல் கருவாய் இருக்கும் காட்சிபோல், செந்நிறம் ஊட்டப்பெற்ற தோலில் துளைகள் உள்ளன. காண்பவரின் கண்களுக்கு அத்துளைகள் தெரியாதவாறு ஒன்றாக
இணைத்துத் தைக்கப்பட்டிருக்கின்றன. அந்த யாழின், உள்நாக்கு இல்லாத வாயைப்போல் தோன்றும் வாய் என்னும் உறுப்பு, ஒரு நீர் வற்றிய சுனை இருண்டு இருப்பதைப்போல் இருக்கிறது. அந்த யாழின் கடை என்னும் உறுப்பு, மூன்றாம் பிறையை ஏந்தியிருப்பது போல் இரண்டு பிரிவுகள் அடங்கியதாக
உள்ளது. யாழின்
வார்க்கட்டு, பருத்த மூங்கிலைப்
போல் திரண்ட தோளையுடைய மகளிரின் முன்னங்கையில் இருக்கும் சிறிய வளையல்களைப்போல், நெகிழ வேண்டிய இடத்தில் நெகிழ்ந்தும், இறுக வேண்டிய இடத்தில் இறுகியும் காணப்படுகிறது. யாழின் பெரிய தண்டு, கருமை நிறமான நீலமணிகளை வரிசைப்படுத்தி வைத்ததைப் போல் உள்ளது. யாழில் உள்ள நரம்புகள், பொன்னை உருக்கி நீட்டினாற்போல் காட்சி அளிக்கின்றன. இத்தகைய உறுப்புகளைக்கொண்ட யாழைப் இப் பாணன் தன் இடப்பக்கத்தில் தழுவிக்கொண்டு இருக்கிறான்.
பாணனின் வறுமை
வெந் தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும்
தண் கடல்
வரைப்பில், தாங்குநர்ப் பெறாது,
பொழி மழை துறந்த
புகை வேய் குன்றத்துப்
பழுமரம் தேரும்
பறவை போல, 20
கல்லென் சுற்றமொடு
கால் கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவு வாய்ப் பாண!
அருஞ்சொற்பொருள்:
17. தெறல் = வெம்மை; கனலி = கதிரவன்; திரிதரும் = சுற்றிவரும்
18. தண் = குளிர்ச்சி; வரைப்பு = உலகம்; தாங்குநர் = ஆதரிப்பவர் (புரவலர்);
19. துறந்த = புறக்கணித்த; வேய்தல் = சூழ்தல்; குன்றம் = மலை
20. பழுமரம் = பழுத்த மரம்; தேரும் = தேடித் திரியும்
21. கல் என் = அழுகுரல், ஒலிக்குறிப்பு; கால் கிளர்ந்து = கால் போன வழியே; திரிதரும் = சுற்றிவரும்
22. புல் = இழிவு; யாக்கை = உடல்; புல்லென் யாக்கை = போலிவு அழிந்த உடல்; புலத்தல் = வெறுத்தல்
பதவுரை:
17. வெந்தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும் = மிகுதியான வெப்பத்தை உடைய ஞாயிற்றுடன் திங்களும் வலமாகத் திரியும்
18. தண் கடல் வரைப்பில் தாங்குநர்ப் பெறாது = குளிர்ந்த கடல் சூழ்ந்த உலகில் ஆதரிப்போரைப் பெறாமல்,
19. பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்து = பொழியும் மழை புறக்கணித்த நிலத்தில் எழுந்த ஆவி சூழ்ந்த
மலையிலுள்ள
20. பழுமரம் தேரும் பறவை போல = பழுத்த மரத்தைத் தேடித்திரியும் பறவைகளைப்போல
21. கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும் = அழுகின்ற சுற்றத்துடன் கால் போனவழியே திரியும்
22. புல்லென்
யாக்கைப் புலவுவாய்ப் பாண! = பொலிவழிந்த
உடலையும் வெறுப்போடு பேசும்
வாயையுடைய பாணனே!
கருத்துரை:
மிகுதியான வெப்பத்தை உடைய ஞாயிற்றுடன் திங்களும் வலமாகத் திரியும் குளிர்ந்த கடல் சூழ்ந்த உலகில் ஆதரிப்போரைப் பெறாமல், மழை பெய்யாத நிலத்தில் விழுந்த மழைத்துளிகளால் எழுந்த ஆவி சூழ்ந்த மலையிலுள்ள, பழுத்த மரத்தைத் தேடித்திரியும் பறவைகளைப்போல், அழுகின்ற சுற்றத்துடன், கால் போனவழியே திரியும் பொலிவழிந்த உடலையும் வெறுப்போடு பேசும் வாயையுமுடைய பாணனே!
பரிசு
பெற்ற பாணனின் நிலை
பெருவறம்
கூர்ந்த கானம் கல்லெனக்
கருவி வானம் துளி சொரிந்தாங்குப்,
பழம் பசி கூர்ந்த எம் இரும்பேர்
ஒக்கலொடு 25
வழங்கத் தவாஅப் பெருவளன் எய்தி,
வால் உளைப் புரவியொடு வயக்களிறு
முகந்துகொண்டு
யாம்
அவணின்றும் வருதும்;
அருஞ்சொற்பொருள்:
23. வறம் = வறட்சி;
கூர்தல் = மிகுதல்; கானம்
= காடு
24. கருவி =
கூட்டம்
25. கூர்தல் = மிகுதல்;
இரும்பேர் = மிகப்பெரிய; ஒக்கல்
= சுற்றம்
26. தவா =
குறையாத
27. வால் = வெண்மை; உளை =
பிடரி மயிர்; புரவி = குதிரை; வயம் =
வலிமை; களிறு = ஆண்யானை; முகந்துகொண்டு
= வாரிக்கொண்டு
28. யாம் = நாங்கள்; அவண் = அங்கே; வருதும்
= வருகின்றோம்
பதவுரை:
23. பெருவறம்
கூர்ந்த கானம் கல்லென = பெரிய வறட்சி
மிகுந்த காட்டில் கல்லென்ற ஆரவாரத்தால் நிறையும்படியாக
24. கருவி
வானம் துளி சொரிந்தாங்கு = பெரும்
ஒலியுடன் இடி மின்னல் முதலிய தொகுதிகளுடன் மேகங்கள் மழை பெய்தாற்போல்
25. பழம்
பசி கூர்ந்த எம் இரும்பேர் ஒக்கலொடு =
நீண்டநாட் பசி மிகுந்த எம்முடைய மிகப் பெரிய சுற்றத்தோடு
26. வழங்கத்
தவாஅப் பெருவளன் எய்தி = நாங்கள்
பிறர்க்குக் கொடுத்தும் குறையாத பெரும் செல்வத்தைப் பெற்று,
27. வால்
உளைப் புரவியொடு வயக்களிறு முகந்துகொண்டு =
வெண்மையான பிடரிமயிர் உடைய குதிரைகளையும் வலிமையான யானைகளையும் வாரிக்கொண்டு
28.அவணின்றும்
வருதும் = நாங்கள் அங்கிருந்து வருகின்றோம்
கருத்துரை:
பெரிய
வறட்சி மிகுந்த காட்டில் கல்லென்ற ஆரவாரத்தோடு, பெரும் ஒலியுடன் இடி மின்னல் முதலிய தொகுதிகளுடன் மேகங்கள்
மழை பொழிந்ததைப்போல், நீண்டநாட் பசியால் வாடிய எம்முடைய
மிகப் பெரிய சுற்றத்தோடு, நாங்கள் பிறர்க்குக் கொடுத்தும் குறையாத அளவுக்குப் பெரும் செல்வத்தையும், வெண்மையான
பிடரிமயிர் உடைய குதிரைகளையும் வலிமையான யானைகளையும் வாரிக் கொண்டு நாங்கள் இளந்திரையனிடமிருந்து வருகின்றோம்.
இளந்திரையனின்
மாண்பு
. . . .
. . . . . . . . . . . . . நீயிரும்,
இருநிலம் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை, அந்நீர்த் 30
திரைதரு மரபின் உரவோன் உம்பல்,
மலர்தலை உலகத்து மன் உயிர் காக்கும்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்
இலங்கு நீர்ப் பரப்பின் வளைமீக் கூறும்
வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின்,
35
அல்லது கடிந்த அறம் புரி செங்கோல்,
பல்வேல் திரையன் படர்குவிர் ஆயின்,
கேள் அவன் நிலையே கெடுக நின் அவலம்!
அருஞ்சொற்பொருள்:
28. நீயிரும் = நீங்களும்
29. இரு = பெரிய; கடந்த
= அளந்த; திரு = திருமகள்; மறு = தழும்பு
30. முந்நீர் = கடல்; வண்ணன்
= நிறத்தையுடையவன்;
பிறங்கடை= பரம்பரை;
அந்நீர் = அம்
முந்நீராகிய கடல்
31. திரை = அலை; உரவோன்
= மூத்தோன் (சோழர்
குடியில் மூத்தவன்); உம்பல் = குலத்தவன்
32. மலர்தலை = அகன்ற
இடம்
33. தானை = படை; மூவர்
= சேர, சோழ, பாண்டியர்
34. இலங்குதல் = விளங்குதல்; வளை =
சங்கு; மீக்கூறுதல் = சிறப்பித்துக்
கூறுதல்
35. வலம்புரி =
வலம்புரிச் சங்கு; அன்ன = போல; வசை =
குற்றம்
36. கடிந்த = போக்கிய; புரிதல்
= விரும்புதல்
37. படர்தல் = நினைத்தல்
38. அவலம் = துன்பம்
பதவுரை:
28. நீயிரும் = நீங்களும்
29. இருநிலம்
கடந்த திருமறு மார்பின் = பெரிய நிலத்தை அளந்தவனும், திருமகளை
மறுவாக மார்பில் அணிந்தவனுமான
30. முந்நீர்
வண்ணன் பிறங்கடை, அந்நீர்த்
= கடல் போன்ற நிறத்தையுடையவனின் குலத்தவன், அக் கடலின்
31. திரைதரு
மரபின் உரவோன் உம்பல் = அலைகள்
கொணர்ந்த மரபையுடைய சோழன் குடியில் பிறந்தவனாகிய
32. மலர்தலை
உலகத்து மன் உயிர் காக்கும் = அகன்ற இடத்தையுடைய உலகத்தில் நிலைபெற்ற உயிர்களைக்
காக்கும்
33. முரசு
முழங்கு தானை மூவருள்ளும் = முரசு முழங்குகின்ற படைகளையுடைய மூவேந்தர்களுக்குள்ளும்
34. இலங்கு
நீர்ப் பரப்பின் வளைமீக் கூறும் = விளங்குகின்ற நீரையுடைய கடலிடத்துப் பிறந்த சங்குகளில் மேலாகக் கூறப்படும்
35. வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின் = வலம்புரிச் சங்கைப்
போன்ற, குற்றம் தீர்ந்த தலைமையினையும்
36. அல்லது
கடிந்த அறம் புரி செங்கோல் = நல்லது அல்லாததை விலக்கிய அறத்தை விரும்பின செங்கோலையும்
37. பல்வேல்
திரையன் படர்குவிர் ஆயின் = பல வேற்படையினையும் உடைய இளந்திரையனிடம் செல்ல
எண்ணுவீராயின்,
38. கேள் அவன் நிலையே கெடுக நின் அவலம் = கேட்பாயாக அவனின் தன்மையை, கெடுக உன்
துன்பம்.
கருத்துரை:
திருமால்
இப் பெரிய உலகத்தைத்
தன் காலால் ஒரே
அடியில் அளந்தவன்; திருமகளைத்
தான் மார்பில் அணிந்தவன்;
கடல் போன்ற நீல
நிறமானவன். இளந்திரையன் அத்தகைய
திருமாலின் மரபில் தோன்றியவன்;
கடலலைகளால் கரைசேர்க்கப்பட்டவன்; சோழர்
குலத்தில் பிறந்தவன். சங்குகளி லெல்லாம் வலம்புரிச் சங்கு சிறந்ததாகக்
கருதப்படுவதைப் போல், முரசு முழங்குகின்ற
படைகளையுடைய சேர, சோழ,
பாண்டிய மன்னர்களுள் சிறந்தவன்;
அறமல்லாதவற்றை நீக்கி, அறத்தை
விரும்பிய செங்கோன்மை புரிபவன்;
பல வேற்படைகளைக் கொண்டவன்.
நீங்கள் அத்தகைய இளந்திரையனிடம் செல்ல நினைப்பீர்களாயின்,
அவனுடைய தன்மையைக் கூறுகிறேன்,
கேள்! உன் துன்பம்
கெட்டு ஒழிவதாக!
சிறப்புக்
குறிப்பு:
இரு
நிலம் கடந்த: திருமால் இப் பெரிய உலகத்தைத் தன் காலால் ஒரே அடியால்
அளந்தவன் என்பது ஒரு புராணக் கதை. அந்தக்
கதை கீழ் வருமாறு: முன்பு ஒரு காலத்தில் அசுர குலத்தைச் சார்ந்த மாவலி (மகாபலி) என்ற
மன்னன் நல்லாட்சி புரிந்து தன்
குடிமக்களைக் காப்பாற்றிவந்தான். அவன்
பல வெற்றிகளைப் பெற்றவன். அவனுடைய புகழ் நாளுக்குநாள் பெருகிகொண்டே இருந்தது. அதைக்
கண்ட தேவர்கள், அவன் தங்களோடு போர் தொடுத்துத் தங்களை அழித்துவிடக்கூடும்
என்று அஞ்சித் தங்களைக் காப்பாற்றுமாறு திருமாலை வேண்டினர். அந்த
அசுரனை அழிப்பதற்காகத் திருமால் ஒரு குள்ளன் உருவத்தில் மாவலிமுன் தோன்றி தன்
காலடியால் மூன்றடி அளவு நிலம் வேண்டும் என்று அவனிடம் வேண்டினார். மாவலி
தன்னிடம் வந்து கேட்பவர்களுக்கு இல்லையென்று கூறாமல் அவர்கள் கேட்டதைக் கொடுக்கும்
இயல்பினன். அதனால். திருமால்
மூன்று காலடி நிலம் கேட்டவுடன் அதைக் கொடுக்க ஒப்புதல் அளித்தான். திருமால்
இந்தப் பெரிய உலகத்தை ஒரே அடியில் அளந்துகொண்டார். இரண்டாவது அடியை வானத்தில் அளந்தார். மூன்றாவது
அடிக்கு இடம் இல்லாததால் தம் அடியை மாவலியின் தலையில் வைத்து அவனைப் பாதாள
உலகிற்கு அனுப்பினார்.
திரைதரு மரபின் உரவோன் உம்பல்: திரை என்ற சொல்லுக்கு அலை என்று பொருள்; உரவோன் என்ற சொல்லுக்கு மூத்தோன் என்று பொருள்; உம்பல் என்ற சொல்லுக்கு வழித்தோன்றல் என்று பொருள். ஆகவே, ”திரைதரு மரபின் உரவோன் உம்பல்” என்ற தொடருக்கு அலைகள் கொண்டுவந்த மூத்தோனின் வழித்தோன்றல் என்று பொருள். இந்த மூத்தோனின் வரலாறு தொடர்பாக, உரையாசிரியர் நச்சினார்க்கினியர் ஒரு செய்தி கூறுகிறார். அவர் கூறுவது ஒரு கதைபோல் உள்ளது. அந்தக் கதை கீழ் வருமாறு:
நெடுங்காலத்துக்குமுன் சோழ மன்னன் ஒருவன் நாகலோகம் என்னும்
கீழுலகத்திற்குச் சென்று, அங்கிருந்த நாககன்னிகையை ஒருத்தியைப் புணர்ந்தான். அந்த நாககன்னிகை ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். சோழ மன்னன் தன் நாட்டிற்குத் திரும்பி வர முடிவு செய்தான். அப்பொழுது, அந்த நாககன்னிகை, “நான் என் மகனை என்ன செய்வது?” என்று கேட்டாள். அதற்கு, அந்த மன்னன், “உன் மகனை ஒரு தொண்டைக்கொடியில் சுற்றிக் கடலில் இடு. அவனைக் கடல் அலைகள் சோழ நாட்டுக்குக் கொண்டு
வந்தால், நான் அவனுக்கு நாடாளும் அரசுரிமை அளிக்கிறேன்.” என்றி கூறித் தன் நாட்டுக்குத் திரும்பிவந்தான். அவன் சொல்லியபடியே, நாககன்னிகை தன் மகனைத் தொண்டைக்கொடியில் சுற்றிக் கடலில் இட்டாள். அந்த குழந்தையைக் கடல் அலைகள் சோழ நாட்டிற்குக் கொண்டுவந்து சேர்த்தன. அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனான பின்னர், அவனைச் சோழநாட்டின் ஒரு பகுதிக்கு மன்னனாக அவன் தந்தை நியமித்தான். அந்தச் சிறுவன் ஆட்சிபுரிந்த நாடு தொண்டை நாடு என்று அழைக்கப்பட்டது. அவன் கடலலைகளால் கொண்டு
வரப் -பட்டதால் திரையன் (திரை=அலை) என்று அழைக்கப்பட்டான். அவனுடைய வழித்தோன்றல்கள்
தொண்டையர் குடியைச் சார்ந்தவர்கள் என்று கருதப்பட்டனர். அவனுடைய வழித்தோன்றல்கள் திரையர் என்று அழைக்கப்பட்டனர். இப்பாட்டுடைத் தலைவன் அந்தத் தொண்டையர் குடியைச் சார்ந்த திரையனாதலால் இவன்
தொண்டைமான் இளந்திரையன் என்று அழைக்கப்பட்டான்.
வலம்புரிச்
சங்கு: பொதுவாக சங்குகள் எல்லாம் இடப்பக்கமாகவே
சுழிந்திருக்கும். ஒரு சில சங்குகள் மட்டுமே வலப்பக்கமாகச் சுழிந்திருக்கும். வலப்பாக்கமாகச்
சுழிந்திருக்கும் சங்குகள் சிறப்பானவை என்றும் அவை பூசைக்குரியவை என்றும்
கருதப்படுகின்றன.
இளந்திரையனின் நாட்டில் இன்னல்கள் இல்லை
அத்தம் செல்வோர்
அலறத் தாக்கி,
கைப் பொருள்
வௌவும் களவு ஏர் வாழ்க்கைக் 40
கொடியோர் இன்று, அவன் கடியுடை வியன் புலம்;
உருமும் உரறாது; அரவும் தப்பா;
காட்டு மாவும்
உறுகண் செய்யா;
வேட்டு, ஆங்கு, அசைவுழி அசைஇ, நசைவுழித் தங்கி,
சென்மோ, இரவல! சிறக்க நின் உள்ளம்! 45
அருஞ்சொற்பொருள்:
39. அத்தம் =
வழி; அலறுதல் = கதறுதல்
40. வெளவுதல் =
கொள்ளையடித்தல்; ஏர் = கலப்பை
41. கடி = காவல்;
வியன்புலம் = அகன்ற நாடு
42. உரும் =
இடி; உரறா = துன்புறுத்தாது; அரவு = பாம்பு;
தப்பா = கெடுதல் செய்யா
43. மா = விலங்கு;
உறுகண் = வருத்தம்
44. வேட்டல்=
விருப்பம்; அசைவு = இளைப்பு;
அசைஇ = இளைப்பாறி; நசைவுழி = விரும்பிய இடத்தே
45.சென்மோ=செல்வாயாக;சிறக்க=சிறப்புறுவதாக
பதவுரை:
39. அத்தம் செல்வோர் அலறத் தாக்கி = வழிப்போக்கர்களை அவர்கள் கதறும்படி
வெட்டி
40. கைப் பொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கை = அவர்களின் உடைமைகளைக் கைப்பற்றும் களவே வாழ்க்கைத் தொழிலாகக்கொண்ட
41. கொடியோர் இன்று, அவன் கடியுடை வியன் புலம் = கொடியவர்கள் இல்லை அவனுடைய காவலுடைய பெரிய நாட்டில்
42. உருமும் உரறாது; அரவும் தப்பா = இடியேறும் இடியாது; பாம்புகளும் கொல்லமாட்டா
43. காட்டு மாவும் உறுகண் செய்யா = காட்டு விலங்குகளும் தீங்கு செய்யமாட்டா
44. வேட்டு ஆங்கு, அசைவுழி அசைஇ, நசைவுழித் தங்கி = நீ விரும்பியபடியே இளைப்பாற வேண்டியபொழுது இளைப்பாறி, விரும்பியவிடத்தே தங்கி,
45. இரவல! சிறக்க நின் உள்ளம்! = செல்வாயாக,
இரவலனே, சிறப்புறுவதாக நின் நெஞ்சம்
கருத்துரை:
இளந்திரையனின் காவலுடைய பெரிய நாட்டில், வழிப்போக்கர்களை அவர்கள் கதறும்படித் தாக்கி,
அவர்களின் உடைமைகளைக் கைப்பற்றும் களவே வாழ்க்கைத் தொழிலாகக்கொண்ட கொடியவர்கள்
இல்லை; இடி இடித்துத் துன்புறுத்தாது. பாம்புகளும் கொல்லமாட்டா; காட்டு விலங்குகளும் தீங்கு செய்யமாட்டா; நீ விரும்பியபடியே, இளைப்பாற வேண்டியபொழுது இளைப்பாறி, விரும்பிய விடத்தே தங்கிச் செல்வாயாக,
இரவலனே, உன் நெஞ்சம் சிறப்புறுவதாக!
உப்பு வாணிகர் செல்லும் நெடிய வழி
கொழுஞ் சூட்டு அருந்திய, திருந்து நிலை ஆரத்து,
முழவின் அன்ன முழுமர உருளி,
எழூஉப் புணர்ந்தன்ன பரூஉக் கை நோன் பார்,
மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன,
ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடம் 50
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்பக்
கோழி சேக்கும் கூடுடைப் புதவின்,
முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளை அரைச் சீறுரல் தூங்கத் தூக்கி,
நாடக மகளிர் ஆடு களத்து எடுத்த 55
விசி வீங்கு இன் இயம் கடுப்பக் கயிறு பிணித்து,
காடி வைத்த கலனுடை மூக்கின்
மகவுடை மகடூஉப் பகடு புறம் துரப்ப
கோட்டுஇணர் வேம்பின் ஏட்டுஇலை மிடைந்த
படலைக் கண்ணிப் பரு ஏர் எறுழ்த் திணி தோள், 60
முடலை யாக்கை, முழு வலி மாக்கள்
சிறு துளைக் கொடு நுகம் நெறிபட நிரைத்த
பெருங் கயிற்று ஒழுகை மருங்கில் காப்ப,
சில் பத உணவின் கொள்ளை சாற்றி,
பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி 65
எல்லிடைக் கழியுநர்க்கு ஏமம் ஆக
அருஞ்சொற்பொருள்:
46. சூட்டு =
சக்கர விளிம்பு (வட்டை) (வட்டை என்பது சக்கர விளிம்புக்கு மற்றொரு
பெயர்); அருந்துதல் = உண்ணுதல்; திருந்துதல் = ஒழுங்காதல்; ஆரம் = ஆரக்கால்
47. முழவு =
மத்தளம்; அன்ன = போன்ற;
உருளி = குடம் (சக்கரத்தின் நடுவில் முழவுபோல் உள்ள
உறுப்பு)
48. எழூஉ =
கணைய மரம்; புணர்ந்த = சேர்ந்த;
பரூஉக்கை = பார் கோக்கும் சட்டம்; நோன் =
வலிய; பார் = வண்டியின் அடிப்பாகத்தில் உள்ள நெடுஞ் சட்டம்
49. மாரி =
மழைக்காலம்
50. ஆரை = பனையோலையால் செய்த பாய்; வேய்ந்த = மூடிய;
அறைவாய் சகடம் = வழியை அறுத்துச் செல்லும் வண்டி
51. வேழம் =
யானை; குரம்பை = குடிசை;
ஏய்ப்ப = போன்ற
52. சேக்கும் =
இருக்கும்; புதவு = வாசல்
53. எயிறு =
யானையின் தந்தம்; இரும் = கரிய; பிடி =
பெண்யானை; ஏய்க்கும் = போன்ற
54. அரை = நடுவிடம்;
சீறுரல் = சிறிய உரல்; தூங்கத் தூக்கி = அசையும்படித் தூக்கி
56. விசித்தல் = இறுகக் கட்டுதல்; இயம் =
முழவு; கடுப்ப = போன்ற;
பிணித்து = கட்டி
57. காடி =
ஊறுகாய்
58. மகவு =
குழந்தை; மகடூ = மகள் (பெண்); பகடு =
எருது; துரப்ப = அடிப்ப
59. கோடு =
கிளை; இணர் = கொத்து;
ஏடு = மேன்மை; மிடைந்த =
கலந்த
60. படலை =
தழை; கண்ணி = மாலை; பருஏர் =
பருத்த அழகிய; எறுழ் = வலிமை;
திணிதோள் = இறுகிய தோள்
61. முடலை =
முறுக்கிய; யாக்கை = உடல்
62. நுகம் =
நுகத்தடி; நெறிபட = ஒருவழிப்படுமாறு; நிரைத்த =ஒழுங்காக
63. ஒழுகை =
வரிசை; மருங்கு = பக்கம்;
காப்ப = காவல் காக்க
64. சில்பதம் =
சிறுஅளவான உணவு (உப்பு); கொள்ளை =
விலை; சாற்றி = கூறி
65. பல் = பல; எருத்து =
எருது; பதி = ஊர்; நெடுநெறி =
நீண்ட வழி
66. எல் = பகல்; கழியுநர் = வழிப்போக்கர்; ஏமம் = பாதுகாவல்
பதவுரை:
46. கொழுஞ் சூட்டு
அருந்திய, திருந்து நிலை ஆரத்து = நல்ல வட்டையால் சூழப்பட்டு தம் அகத்தே கொண்ட, திருத்தமான நிலையிலுள்ள ஆரங்களையுடைய,
47. முழவின் அன்ன
முழுமர உருளி = மத்தளம் போன்ற முழுமரத்தால் கடைந்த உருளியையும்,
48. எழூஉப்
புணர்ந்தன்ன பரூஉக் கை நோன் பார் = இரண்டு கணைய மரங்களையும் சேர்த்தாற் போன்ற பருத்த சட்டங்களையும் உடைய
49. மாரிக் குன்றம்
மழை சுமந்தன்ன = மழைக்காலத்தில், மலை மேகத்தைச் சுமந்தாற்போல்,
50. ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடம் = பனையோலையால் செய்த பாய் வேய்ந்த, வழியை அறுக்கும் விளிம்புகள் கொண்ட வண்டி
51. வேழம் காவலர்
குரம்பை ஏய்ப்ப = யானை புனத்தில் புகாமல் இருப்பதற்காகக் காவல் காப்பவர்கள் பரண்மேல் கட்டிய
குடிலைப் போன்ற
52. கோழி சேக்கும்
கூடுடைப் புதவின் = கோழிகள் இருக்கும் கூட்டையுடைய குடிசையின் வாசலில்,
53. முளை எயிற்று
இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும் = மூங்கில் முளை போன்ற தந்தத்தையுடைய கரிய பெண்யானையின் முழங்காலைப் போன்ற,
54. துளை அரைச்
சீறுரல் தூங்கத் தூக்கி = துளையைத் தன்னிடத்தேயுடைய சிறிய உரலைத் தொங்கும்படித் தூக்கி,
55. நாடக மகளிர் ஆடு களத்து எடுத்த = நாடக மகளிர் ஆடும் களத்தில் கொண்டுவந்த
56. விசி வீங்கு இன்
இயம் கடுப்பக் கயிறு பிணித்து = வார்ப்பிணிப்பு இறுகின இனிய இசைக்கருவியான முரசைப்போல் கயிற்றால் கட்டி,
57. காடி வைத்த கலனுடை மூக்கின் = ஊறுகாய்ப் பானையை உடைய
வண்டியின் முன்பக்கத்தில் அமர்ந்து
58. மகவுடை மகடூஉப் பகடு புறம் துரப்ப = குழந்தையைக் கையில்கொண்ட பெண், எருதின் முதுகில் அடிக்க
59. கோட்டுஇணர்
வேம்பின் ஏட்டுஇலை மிடைந்த = மரக்கிளையில் பூங்கொத்தையுடைய வேம்பின் மேன்மையை -யுடைய இலையை இடையிடையே இட்டுக் கட்டிய
60. படலைக் கண்ணிப் பரு ஏர் எறுழ்த் திணி தோள் = தழை கலந்த மாலையையும், பருத்த அழகிய, வலிமையான இறுகின தோளினையும்
61. முடலை யாக்கை, முழு வலி மாக்கள் = முறுக்குண்ட உடம்பினையும், நிரம்பிய உடல் வலிமையையுமுடைய மக்கள்
62. சிறு துளைக் கொடு
நுகம் நெறிபட நிரைத்த = சிறிய துளையினையுடைய வளைந்த நுகத்தில் எருதுகள் ஒருவழிப்படுமாறு வரிசையாகக் கட்டிய
63. பெருங் கயிற்று ஒழுகை மருங்கில் காப்ப = பெரிய கயிற்றையுடைய வண்டிகளின் வரிசையைப் பக்கத்தில் இருந்து காவல் காக்க
64. சில் பத உணவின் கொள்ளை சாற்றி = உப்பாகிய உணவின் விலையைக் கூறி
65. பல் எருத்து உமணர்
பதி போகு நெடு நெறி = பல எருதுகளையுடைய உப்பு வணிகர்கள் ஊர்தோறும் செல்லுகின்ற நெடிய வழி
66. எல்லிடைக் கழியுநர்க்கு ஏமம் ஆக =
பகற்பொழுதில் வழிப்போக்கர்களுக்குப் பாதுகாவலாக இருக்க
கருத்துரை:
வண்டிச்
சக்கரத்து வட்டைகள் கொழுகொழுவென்று இருக்கும். அவ்வட்டையில் இட்ட துளைகளில் ஆரக்கால்கள் செருகப்பட்டிக்கும்.
ஆரக்கால்களின் மறுமுனை, முழுமரத்தில்
கடையப்பட்ட – மத்தளம் போன்ற
- குடத்தில் பொருத்தப் -பட்டிருக்கும். வண்டியின்
பார் இரண்டு கணைய
மரங்களை இணைத்ததைப் போன்ற
வடிவும் வலிமையும் உடையதாக
இருக்கும். வண்டியின் மேலே,
பனையோலைப் பாய்களால் கூரை
வேயப்பட்டிருக்கும். கூரை வேய்ந்திருப்பது,
மேகம் சூழ்ந்த மலைபோல்
தோன்றும். கூரையின்மீது ஒரு
கோழிக்கூடு வைக்கப்பட்டிருக்கும். தினைப்புனத்தில் யானை புகாதவாறு
காவல் காப்பதற்கு பரண்மீது
அமைக்கப்பட்ட குடிலைப்போல் அந்தக்
கோழிகூடு காட்சி அளிக்கும்.
அக் கோழிக்கூட்டின் வாயிலில்
யானையின் முழங்கால் போன்ற
சிறிய உரல் கட்டித்
தொங்கவிடப்பட்டிருக்கும்.
நாடகமாடும் மகளிர் ஆடும்
அரங்கில் கொண்டுசென்று முழக்கும்
வாரால் வரிந்து கட்டப்பட்ட
இனிய முழவுபோல் கயிற்றினால்
இறுக்கிக் கட்டப்பட்ட ஊறுகாய்ப்
பானை வண்டியின் முன்பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும். உமணப்
பெண் வண்டியின் முன்புறத்தே
இருந்து, எருதுகளை அடித்து
ஓட்டுவாள். அவள் கையில்
பிள்ளையை வைத்திருப்பாள். உப்பு
வண்டிகளை இடையூறு இன்றிக்
காப்பாற்றுவதற்காகத் திரண்ட
தோளும், வலிமையும், முறுக்கேறிய
உடலும் உள்ள ஆடவர்
சிலரை உமணர்கள் உடன்
அழைத்துச் செல்வர். அந்த
வலிமையான மக்கள் வேப்ப
மரத்தின் இலைகளையும் மணமுள்ள
மலர்களையும் கலந்து தொடுக்கப்பட்ட
மாலையைத் தலையில் அணிந்திருப்பர்.
அவர்கள் நுகத்தடியில் உள்ள
துளைகளில் நுழைத்து, மாடுகளை
ஒழுங்காகக் கட்டிய கயிறுகளைக்
கையில் பற்றிக்கொண்டு, வண்டிகளின்
வரிசையைப் பாதுகாப்பர். உமணர்கள்
உப்பை விலை கூறி
விற்பர். இவ்வாறு, உமணர்கள்
பல ஊர்களைக் கடந்து
செல்லும் நெடுவழியில், அவர்கள்
உடன்வரும் வலிமையானவர்கள் உமணர்களுக்கு
மட்டுமல்லாமல் அவ் வழியில்
செல்லும் அனைவருக்கும் இரவிலும்
பகலிலும் காவலாக இருப்பர்.
வம்பலர் கழுதைச் சாத்தொடு செல்லும்
காட்டு வழி
மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம்
அரும் பொருள் அருத்தும், திருந்து தொடை நோன் தாள்
அடி புதை அரணம் எய்தி, படம் புக்கு
பொரு கணை தொலைச்சிய புண் தீர் மார்பின், 70
விரவு வரிக் கச்சின், வெண் கை ஒள் வாள்,
வரை ஊர் பாம்பின், பூண்டு புடை தூங்க,
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவு உடை,
கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ்த் தோள்,
கடம்பு அமர் நெடு வேள் அன்ன, மீளி, 75
உடம்பிடித் தடக் கை ஓடா வம்பலர்,
தடவு நிலைப் பலவின் முழுமுதல் கொண்ட
சிறு சுளைப் பெரும் பழம் கடுப்ப, மிரியல்
புணர்ப் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர்ச் செவிக் கழுதைச் சாத்தொடு, வழங்கும் 80
உல்குடைப் பெரு வழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன் காட்டு இயவின்
அருஞ்சொற்பொருள்:
67. மலையவும் = மலையில் உள்ளனவும்; கடலவும் = கடலில் உள்ளனவும்; மாண் = மாட்சிமையுடைய; பயம் = பயன்; தரூஉம் = தரும்
68. அருத்துதல் = உண்ணச் செய்தல்; தொடை = தொடங்கிய செயல்; நோன்தாள் = வலிய முயற்சி
69. அடிபுதை = காலை மூடிய; அரணம் = செருப்பு; படம் = சட்டை
70. பொரு கணை = எய்த அம்பு; தொலைச்சிய = அழித்த
71. விரவுதல் = பொருந்துதல்; கச்சு - இங்கு இடையில் அணியும் ஆடையைக் குறிக்கிறது; ஓள்வாள் = ஒளிபொருந்திய வாள்
72. வரை = மலை; பூண்டு = அணிந்து
73. சுரிகை = உடைவாள் (குத்துவாள்); சுற்றுவீங்கு = கட்டு இறுகிய
74. கருவில் ஓச்சிய = கரிய வில்லின் ஆற்றலை அழித்த; கண் அகன் = இடம் அகன்ற; எறுழ் = வலிமை
75. கடம்பு = கடம்ப மரம்; அமர்ந்த = இருந்த; நெடுவேள் = முருகன்; அன்ன = போல; மீளி = மீட்கும் திறமை
76. உடம்பிடி = வேல்; தடக்கை = பெரிய கை; வம்பலர் = வழிப்போக்கர்
77. தடவு = வளைவு; பலவின் = பலாமரத்தின்; முழுமுதல் = பெரிய அடிமரம்
78. கடுப்ப = போல; மிரியல் = மிளகு
79. பொறை = சுமை; நோன் = வலிய; புறத்து = முதுகில்
80. அணர்ச்செவி = நிமிர்ந்து நிற்கும் காது; சாத்து = வணிகர் சட்டம்
81. உல்கு = சுங்கம்; பெருவழி = பெரிய வழி; கவலை = பிரிவுகள் உள்ள வழி
82. வைப்பு = ஊர்; வியன் காடு = அகன்ற காடு; இயவு = வழி
பதவுரை:
67. மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம் = மலையில்
உள்ளனவும், கடலில் உள்ளனவும்
ஆகிய சிறந்த பயனைக்
கொடுக்கும்
68. அரும் பொருள் அருத்தும், திருந்து தொடை நோன் தாள் = அரிய பொருளை
அனைவரும் நுகரச்செய்யும் திருத்தமான
தம் வினையில் வலிய
முயற்சியினையும்
69. அடி புதை அரணம் எய்தி, படம் புக்கு = பாதங்களை மறைக்கின்ற
செருப்பு அணிந்து, சட்டை
அணிந்து,
70. பொரு கணை தொலைச்சிய புண் தீர் மார்பின் = ஆறலைக்கள்வர்கள் எய்த அம்புகளின்
வலிமையை அழித்த, புண்கள்
இல்லாத மார்பினையும்
71. விரவு வரிக் கச்சின், வெண் கை ஒள் வாள் = மார்பில்
அணிந்துள்ள, வரியுடைய கச்சில்,
வெண்மையான கைப்பிடியையுடைய ஒளிறும்
வாள்
72. வரை ஊர் பாம்பின், பூண்டு புடை தூங்க = மலையில் ஊர்கின்ற
பாம்புபோலப் பூணப்பட்டு ஒருபக்கத்தே
தொங்க,
73. சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவு உடை = உடைவாள்
செருகப்பட்ட கட்டு இறுகிய
உடையினையும்
74. கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ்த் தோள் = கரிய வில்லின்
வலிமையை அழித்த, இடமகன்ற
வலிமையுடைய தோளினையும்
75. கடம்பு அமர் நெடு வேள் அன்ன, மீளி = கடம்பமரத்தில் இருக்கும் நெடிய முருகனை
ஒத்த, அண்டியவரை இன்னல்களிலிருந்து மீட்கும்
76. உடம்பிடித் தடக் கை ஓடா வம்பலர் = வேலினைக்
கொண்ட பெரிய கையினையும்
உடைய புறங்கொடாத புதியவராகிய
வழிப்போவார்
77. தடவு நிலைப் பலவின் முழுமுதல் கொண்ட = வளைந்த தோற்றத்தையுடைய பலாமரத்தின் அடிமரத்தில்
குலைகொண்ட
78. சிறு சுளைப் பெரும் பழம் கடுப்ப, மிரியல் =
சிறிய சுளைகளைகளைக்கொண்ட பெரிய
பழத்தை ஒப்ப, மிளகின்
79. புணர்ப் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து = இருபுறமும்
சரியான எடையுடைய சுமையைத்
தாங்கிய, வடு அழுந்தின
வலிமையான முதுகையும்
80. அணர்ச் செவிக் கழுதைச் சாத்தொடு, வழங்கும் = நிமிர்ந்து நிற்கும் காதுகளையும் உடைய
கழுதைகளின் கூட்டத்தோடு செல்கின்ற
81. உல்குடைப் பெரு வழிக் கவலை காக்கும் = சுங்கம் கொள்ளுதலையுடைய பெரிய வழிகளில்
கவர்த்த வழியைப் பாதுகாக்கின்ற
82. வில்லுடை வைப்பின் வியன் காட்டு இயவின் = விற்படையிருக்கின்ற ஊர்களையுடைய அகன்ற
காட்டு வழிகளில்
கருத்துரை:
மலையிலும் கடலிலும் கிடைக்கும் சிறந்த பயனைத் தருகின்ற, பெறுதற்கரிய பொருள்களை (அகில், சந்தனம், மிளகு, பொன், முத்து, பவளம், போன்ற பொருள்களை) ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வணிகர்கள் எடுத்துச் செல்லும்பொழுது, அவர்களுக்குப் பாதுகாவலாகச் சில வீரர்களும் உடன் செல்வர். அவ்வீரர்கள் குற்றமற்ற நற்செயல்களையே மேற்கொள்வர். நல்ல செயல்களை மேற்கொள்வதற்குமுன் அவற்றை முடிப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்த
பின்னரே அவற்றை மேற்கொள்வர். எடுத்துக்கொண்ட
செயல்களைச் செய்து முடிப்பதற்கு இடையூறுகள் வந்தால், மனந்தளராமல் அவற்றைச் செய்து முடிப்பர். அவர்கள் தங்கள் காலில் செருப்பும் உடலில் சட்டையும் அணிந்திருப்பர்; ஆறலைக்கள்வர்களோடு போரிட்டு, அவர்களின்
வில்லாற்றலை முறியடித்தபொழுது தோன்றிய புண்களால் ஏற்பட்ட வடுக்கள் அவர்களின்
மார்பில் காணப்படும்; தங்கள் மார்பின் குறுக்கே கச்சு அணிந்திருப்பார்கள். அவர்கள் அணிந்திருக்கும் கச்சு, மலையின் குறுக்கே ஊர்ந்து செல்லும் மலைப்பாம்புபோல்
தோற்றம் அளிக்கும். அந்தக் கச்சில், இடது பக்கத்தில், வெண்மையான கைப்பிடியையுடைய வாள் கட்டித்
தொங்கவிடப்பட்டிருக்கும். அவர்கள் தங்கள் இடையில் உடுத்தியிருக்கும் ஆடையை இறுக்கிக்
கட்டியிருப்பர்; அந்த ஆடைக்குள் ஒரு வாளைச் செருகியிருப்பர். அவர்கள் பகைவர்களின் வில்லாற்றலை அழித்த, பரந்து அகன்ற வலிமையான தோள்களோடு முருகனைப்போல், தம்மை அண்டினவர்களை இடுக்கண்களிலிருந்து மீட்கும் ஆற்றல் கொண்டவர்கள்; போரில் புறமுதுகு காட்டி ஓடாதவர்கள்; வேலேந்திய பெரிய கைகளையுடையவர்கள். உப்பு வணிகர்கள் செல்லும் வழியில், சிலர் மிளகு மூட்டைகளைக் கழுதைகளின் முதுகில் ஏற்றிக் கொண்டுசெல்வர். அவ்வாறு கழுதைகள் தங்கள் முதுகில் மிளகு மூட்டைகளைச் சுமந்துசெல்வது ஒரு
வேர்ப்பலாவின் வேரில் பலாப்பழங்கள் பழுத்திருப்பதைப்போல் இருக்கும். உப்பு வணிகர்களும்
மிளகு வணிகர்களும் செல்லும் வழிகளில் அரசு நிறுவிய சுங்கச் சாவடிகள் இருக்கும். அந்தச் சுங்கச் சாவடிகளை அரசின் விற்படை வீரர்கள் காவல் காப்பர்.
எயினர் குடிசை
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த
பூளை அம் பசுங்காய் புடை விரிந்தன்ன
வரிப்புற அணிலொடு கருப்பை ஆடாது
85
யாற்று அறல் புரையும் வெரிநுடைக்
கொழுமடல்
வேற்றலை அன்ன வைந்நுதி நெடுந்தகர்
ஈத்து இலை வேய்ந்த எய்ப்புறக்
குரம்பை
அருஞ்சொற்பொருள்:
83. அரை = அடிப்பகுதி; இலவம் = இலவமரம்;
அலங்குதல் = அசைதல்; சினை = கிளை; பயந்த
= அளித்த (காய்த்த)
84. பூளை = பஞ்சு;
அம் = அழகிய; புடை = பக்கம்
(முதுகு)
85. கருப்பை = எலி
86. அறல் = கருமணல்;
புரையும் = போன்ற; வெரிந்
=முதுகு
87. வேற்றலை = வேல்+தலை = வேலின் முனை; அன்ன = போன்ற;
வைந்நுதி = வை+நுதி = கூர்மையன முனை; தகர் = மேட்டு நிலம்
88. ஈந்து = ஈச்சமரம்;
வேய்ந்த = மூடிய; எய் = முள்ளம்பன்றி; குரம்பை = குடிசை
பதவுரை:
83. நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த
= நீண்ட அடிப்பகுதியையுடைய இலவமரத்தின் அசைகின்ற கொம்புகளில் காய்த்த
84. பூளை அம் பசுங்காய் புடை விரிந்தன்ன = பஞ்சினையுடைய அழகிய பசிய காயின் முதுகு விரிந்து பஞ்சு தோன்றியதைப் போன்ற
85. வரிப்புற அணிலொடு கருப்பை ஆடாது
= வரியை முதுகிலே உடைய அணிலும், எலியும் திரியாதபடி
86. யாற்று அறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல் = ஆற்றின் கருமணலைப் போன்ற பின்பகுதியை உடைய, கொழுத்த மடலினையுடையதும் ஆகிய
87. வேற்றலை அன்ன வைந்நுதி நெடுந்தகர் = வேலின் முனையைப் போன்ற கூர்மையான முனையைக்கொண்ட, நெடிய மேட்டில் உள்ள
88. ஈத்து இலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை = ஈச்சமரத்தின் இலையால் வேயப்பட்ட முள்ளம்பன்றியின் முதுகு போலும் புறப்பகுதியையுடைய குடிசையில்
கருத்துரை:
நீண்ட
அடிப்பகுதியையுடைய இலவமரத்தின்
அசையும் கிளைகளில் காய்த்து,
அகத்தே இருக்கும் பஞ்சு
புறத்தே தோன்றினாற்போல், வரிகளை
முதுகில் உடைய அணிலும்,
எலியும் நுழைந்து திரியாதபடி,
நீர் வற்றிய ஆற்று
மணலை ஒத்த நிறமுடைய
ஈச்ச மரத்தின் மட்டைகளையும்,
ஈச்ச மரத்தின் கூர்மையான
முனையுடைய இலைகளையும் பயன்படுத்தித்
தங்கள் குடிசைகளின் கூரைகளை
எயினர் அமைத்துக் கொள்வர். தொலைவிலிருந்து பார்ப்பவர்களுக்கு அந்தக்
குடிசைகளின் கூரைகள் முள்ளம்பன்றியின் முதுகுபோல் தோன்றும்.
புல்லரிசி எடுத்தல்
மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி,
ஈன் பிணவு ஒழியப் போகி, நோன் காழ் 90
இரும்பு தலை யாத்த திருந்து கணை விழுக் கோல்
உளி வாய்ச் சுரையின் மிளிர மிண்டி,
இரு நிலக் கரம்பைப் படு நீறு ஆடி,
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர்
அருஞ்சொற்பொருள்:
89. பள்ளி
= படுக்கை; மகவு = குழந்தை
90. ஈனுதல்
= பிள்ளை பெறுதல்; பிணவு
= பெண்; நோன் = வலிய;
காழ் =வயிரம்
91. யாத்தல் = கட்டுதல்;
கணை
= திரட்சி; விழுக்கோல் = சீரிய கோல்
92. சுரை
= கடப்பாரை; மிளிர்தல் = புரளுதல்;
மிண்டி = குத்தி
93. இரு
= கரிய; கரம்பை = தரிசு
நிலம்
94. நுண்புல்
= மெல்லிய புல்லரிசி (புல்லரிசி
– பஞ்சக் காலத்தில் ஏழைகள்
உண்ணும் அரிசி போன்ற
தானியம்); எயிற்றியர் = எயினர்குலப்
பெண்
பதவுரை:
89. மான் தோல் பள்ளி
மகவொடு முடங்கி = மான் தோலாலாகிய
படுக்கையில் பிள்ளையோடு முடங்கிக் கிடக்கும்
90. ஈன் பிணவு ஒழியப் போகி, நோன் காழ் = மகப்பேறடைந்த பெண்ணைத் தவிரப் பிறர் சென்று, வலிய வயிரம் பாய்ந்த
91. இரும்பு தலை யாத்த திருந்து கணை விழுக் கோல் = பூண் தலையில் கட்டப்பட்ட திருந்திய
திரட்சியையுடைய சீரிய கோலின்
92. உளி வாய்ச் சுரையின் மிளிர மிண்டி = மறுபக்கம் உள்ள உளி போன்ற வாயைக் கொண்ட கடப்பாரையால் குத்திப் புரட்டி
93.. இரு நிலக் கரம்பைப் படு நீறு ஆடி = கரிய நிலமாகிய தரிசு நிலத்தில் உண்டாகின்ற
புழுதியைத் துழாவி
94. நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர் = மெல்லிய புல்லரிசியை வாரியெடுத்துக்கொண்ட வெண்மையான பல்லையுடைய எயிற்றியர்
கருத்துரை:
அந்தக் குடிசைகளில், அண்மையில் பிள்ளையைப் பெற்ற பெண்கள், மானின் தோலாலாகிய படுக்கையில் படுத்திருப்பர். அவர்களைத் தவிர மற்ற எயிற்றியர், கடப்பாரையால் கீழ்மேலாகும்படிக் கரிய தரிசு நிலத்தைக் குத்தி, அதில் எழுந்த புழுதியைத் துழாவி, மெல்லிய புல்லரிசியை எடுப்பர்.
சிறப்புக் குறிப்பு:
புல்லரிசி: (Cynosurus
Egyptius)
என்பது கோதுமையைப்போலத் தோற்றமளிக்கும் சிறுகூலமாகும். ஆனால், நீளமாகவும்,
சற்று மெல்லியதாகவும் கடினமாகவும் இருக்கும். இந்தச்
சிறுதானியம் பச்சை,
சிவப்பு, பழுப்பு, மஞ்சள்,
சாம்பல் போன்ற நிறங்களில் காணப்படுகிறது. வாயில் போட்டு
சுவைத்தால் கோதுமையின் சுவைதான். ஆனால், புல்லரிசியில் கெட்டியான
மாவு கிடைக்கிறது. இப்பயிர் மண் வளம் இல்லாத, உலர்ந்த, மிகுந்த குளிரான மிக
உயரமான மலைப்பகுதிகளில் நன்கு வளர்கிறது. இச்சிறுகூலம் ஆண்டு முழுவதும்
பயிரிடப்படுகிறது. புல்லரிசி பஞ்சகாலத்தில் ஏழைகள் உண்ணும் உணவாகக்
கருதப்படுகிறது. மேலை நாடுகளில் இது கறுப்பு ரொட்டி (Ryebread) செய்யப் பயன்படுகிறது
எயிற்றியர் அளிக்கும் உணவு
பார்வை யாத்த பறை
தாள் விளவின் 95
நீழல் முன்றில், நில உரல் பெய்து,
குறுங் காழ்
உலக்கை ஓச்சி, நெடுங் கிணற்று
வல் ஊற்று உவரி
தோண்டி, தொல்லை
முரவு வாய்க்
குழிசி முரி அடுப்பு ஏற்றி,
வாராது அட்ட, வாடு ஊன், புழுக்கல் 100
'வாடாத் தும்பை வயவர் பெருமகன்,
ஓடாத் தானை, ஒண் தொழில் கழல் கால்,
செவ் வரை நாடன், சென்னியம்' எனினே
தெய்வ மடையின்
தேக்கிலைக் குவைஇ, நும்
பை தீர் கடும்பொடு
பதம் மிகப் பெறுகுவிர். 105
அருஞ்சொற்பொருள்:
95. பார்வை = பார்வை மான்; யாத்த = கட்டிய; பறைதல் = தேய்தல்; தாள் = அடிப்பகுதி; விளா = விளா மரம்
96. நீழல் = நிழல்; முன்றில் = முற்றம்
97. காழ் =வயிரம்; ஓச்சி = குற்றி
98. வல் = சிறிதே; உவரி = உப்புத்தன்மையுடைய; தொல்லை = பழைய
99. முரவு = கரடுமுரடு; முரவுவாய் = விளிம்பு உடைந்துபோன கரடுமுரடான வாய்
100. வாராது =கொழிக்காது; அட்ட = சமைத்த; வாடூன் = கருவாடு; புழுக்கல் = சோறு
101. வாடாத் தும்பை = பொன்னாலான தும்பை; வயவர் = வீரர்; பெருமகன் = தலைவன்
102. ஒடாத் தானை = போரில் புறங்காட்டி ஓடாத படை
103. செவ்வரை = சிறந்த மலை; சென்னியர் = பாணர்; எனினே = என்று கூறுவீராயின்
104. தெய்வ மடை = தெய்வங்களுக்கு இடும் பலி; தேக்கிலை = தேக்கு இலை; குவைஇ = குவித்து; நும் = உங்களுடைய
105. கடும்பு = சுற்றம்; பை = பசுமை (செல்வச் செழிப்பு); தீர் = தீர்ந்த; பதம் = உணவு; பெறுகுவிர் = பெறுவீர்கள்
பதவுரை:
95. பார்வை யாத்த பறை தாள் விளவின் = பார்வை மானைக் கட்டியதால் தேய்ந்த அடிப்பகுதியையுடைய விளாமரத்தின்
96. நீழல் முன்றில், நில உரல் பெய்து = நிழலையுடைய முற்றத்தில், நிலத்தில் பதித்த உரலில் இட்டு
97. குறுங் காழ் உலக்கை ஓச்சி, நெடுங் கிணற்று = குறிய வயிரம் பாய்ந்த உலக்கையால் குற்றி,
ஆழமான கிணற்றில்
98. வல் ஊற்று உவரி தோண்டி, தொல்லை = சில்லூற்றாகிய உப்புத்தன்மையுடைய நீரை முகந்துகொண்டு, பழைய
99. முரவு வாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி = விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான வாயையுடைய பானையில் வார்த்த உலையை முரிந்த அடுப்பிலே ஏற்றி
100. வாராது அட்ட, வாடு ஊன், புழுக்கல் = கஞ்சியை வடிக்காமல் பொங்கிய
(மான் கறியின்) உப்புக்கண்டம் சேர்ந்த ஊன் சோற்றை
101. வாடாத் தும்பை வயவர் பெருமகன் = வாடாத தும்பை சூடின போரில் வல்ல மறவருடைய தலைவனாகிய
102. ஓடாத் தானை, ஒண் தொழில் கழல் கால் = புறமுதுகிடாத படையினையுடைய, சிறந்த தொழில்நுணுக்கம் கொண்ட வீரக்கழல் அணிந்த
103. செவ் வரை நாடன், சென்னியம் எனினே = செவ்விய மலைநாட்டை உடையவனுடைய பாணர் யாம் என்று கூறுவீராயின்,
104. தெய்வ மடையின் தேக்கிலைக் குவைஇ, நும் = தெய்வங்களுக்கு இட்டுவைத்த பலிபோலத் தேக்கின் இலையில் உணவைக் குவித்து, அவர்கள் தர, உம்முடைய
105. பை தீர் கடும்பொடு பதம் மிகப்
பெறுகுவிர் =வறுமையில் உள்ள உம் சுற்றத்தோடு அவ்வுணவினை மிகுதியாகப் பெறுவீர்
கருத்துரை:
பார்வை மானைக் கட்டியதால் எயினரின்
முற்றத்தில் உள்ள விளாமரத்தின் அடிப்பகுதி தேய்ந்திருக்கும். அந்த மரத்தின் நிழல் படிந்த நிலத்தில் பதித்த உரலில் புல்லரிசியை இட்டு, எயிற்றியர் வயிரம் பாய்ந்த உலக்கையால் குற்றி,
ஆழமான கிணற்றிலிருந்து உப்புத்தன்மையுடைய நீரை முகந்து கொண்டுவந்து, பழைய விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான வாயையுடைய பானையில் வார்த்த உலையை, முரிந்த அடுப்பிலே ஏற்றிக் கஞ்சியை வடிக்காமல் பொங்கிய (மான் கறியின்) உப்புக்கண்டம் சேர்ந்த ஊன் சோற்றைச்
சமைப்பர். ‘வாடாத தும்பை சூடின, போரில் வல்ல மறவருடைய தலைவனாகிய
புறமுதுகிடாத படையினையுடைய, சிறந்த தொழில்நுணுக்கம் கொண்ட வீரக்கழல்
அணிந்த செவ்விய மலைநாட்டையுடைய இளந்திரையனின் பாணர் யாம்' என்று நீங்கள் கூறுவீராயின், தெய்வங்களுக்கு இட்டுவைத்த பலிபோலத்
தேக்கின் இலையில் உணவைக் குவித்து, அவர்கள் தர, உம்முடைய வறுமையில் உள்ள உம் சுற்றத்தோடு அவ்வுணவினை நீங்கள்
மிகுதியாகப் பெறுவீர்.
சிறப்புக்
குறிப்பு:
பார்வை மான்: எயினர்கள் பழகிய மானைக்கொண்டு புது மான்களைப் பிடிப்பது வழக்கம். அவ்வாறு பழகியமான் பார்வை மான் என்று அழைக்கப்பட்டது.
வாடாத் தும்பை: வாடாத் தும்பை என்பது பொன்னாலான தும்பைமலரை ஒத்த அணிகலனைக் குறிக்கிறது.
முரி அடுப்பு: நல்ல அடுப்பின் வாய்ப்பகுதியில் மூன்று குமிழ்கள் இருக்கும்.
நாளாக ஆக, அந்தக் குமிழ்கள் தேய்ந்தும்
உடைந்தும்போகும். அவ்வாறான அடுப்பே முரி அடுப்பு எனப்படும்.
பாலை நிலக் கானவர்களின் வேட்டை
மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின்,
வான் மடி பொழுதில், நீர் நசைஇக் குழித்த
அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி,
புகழா வாகைப் பூவின் அன்ன
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் 110
அரை நாள் வேட்டம் அழுங்கின், பகல் நாள்,
பகுவாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி,
தொகு வாய் வேலித் தொடர் வலை மாட்டி,
முள் அரைத் தாமரைப் புல் இதழ் புரையும்
நெடுஞ் செவிக் குறு முயல் போக்கு அற வளைஇ, 115
கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்
அருஞ் சுரம் இறந்த அம்பர்
அருஞ்சொற்பொருள்:
106. மயங்குதல் = கலக்கமடைதல்; அதர் = வழி; மருங்கு = பக்கம்
107. வான் = மேகம்;
மடிதல் = தொழில் செய்யாதிருத்தல்; வான் மடி பொழுதில் = மேகம் மழை பெய்யாமல் பொய்த்துவிட்ட காலத்தில்;
நசைஇ = விரும்பி; குழித்த = தோண்டிய
108. அகழ் =
குளம்; பயம்பு = குழி
109. வாகை =
அகத்தி (ஒரு மரம்); அன்ன =
போல
110. வளை = வளைந்த;
மருப்பு = கொம்பு; ஏனம் =
காட்டுப் பன்றி
111. அரைநாள்
= நள்ளிரவு; வேட்டம் = வேட்டை;
அழுங்குதல் = தவிர்தல்
112. பகுவாய் = திறந்த வாய்; ஞமலி = நாய்; பை = பசுமை;
புதல் =புதர்; எருக்கி =
அடித்து
113. தொகுவாய் =
குறுகிய இடம்
114. அரை = தண்டு;
புரையும் = ஒக்கும்
115. போக்கு அற வளைஇ = தப்பிப் போகவிடாமல் வளைத்து
116. கடுங்கண் =
கொடிய; கானவர் = காட்டில் வாழ்பவர்கள்; கடறு = காடு; கூட்டுண்ணுதல்= கூடி உண்ணுதல்
117.
சுரம் = பாலை நிலம்; இறந்த = கடந்த;
அம்பர் = அப்பால்
பதவுரை:
106. மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின் = மானின் அடிச்சுவடுகள் பதிந்த, மயங்குவதற்குக் காரணமான வழிகளின் பக்கத்தில்,
107. வான் மடி பொழுதில், நீர் நசைஇக் குழித்த = மழை பெய்யாதிருக்கும் காலத்தில் நீரை விரும்பித்
தோண்டிய
108. அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி = பள்ளங்களைச் சூழ்ந்த மூடுகுழிகளின் உள்ளே மறைந்து ஒதுங்கி,
109. புகழா வாகைப் பூவின் அன்ன = புகழாத வாகையாகிய அகத்திப் பூவினை ஒத்த
110. வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் =வளைந்த கொம்பினையுடைய காட்டுப் பன்றியின் வரவை எதிர்பார்த்து இருக்கும்
111. அரை நாள் வேட்டம் அழுங்கின், பகல் நாள் = நள்ளிரவில் வேட்டையைச் செய்யாவிட்டால், பகற்பொழுதில்
112. பகுவாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி = பிளந்த வாயையுடைய நாய்களுடன் பசிய புதர்களை அடித்து
113. தொகு வாய் வேலித் தொடர் வலை மாட்டி = குறுகிய இடத்தில், வேலியில் பின்னப்பட்ட வலைகளை மாட்டி,
114. முள் அரைத் தாமரைப் புல் இதழ் புரையும் = முள்ளைத் தண்டிலேயுடைய தாமரையின் புறவிதழை ஒக்கும்
115. நெடுஞ் செவிக் குறு முயல் போக்கு அற வளைஇ = நீண்ட காதுகளைக்கொண்ட சிறிய முயல்களைத் தப்பிப் போகவிடாமல் வளைத்துப்
பிடித்து
116. கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும் = கடுமையான கானவர், காட்டில் கூடியுண்ணும்
117. அருஞ் சுரம் இறந்த அம்பர் = அரிய பாலைநிலத்தைக் கடந்த பிறகு உள்ள இடத்தில்
கருத்துரை:
மான்களின் கால் குளம்புகள் பதிந்த வழிகள்
காடுகளில் இருக்கும். அவற்றைக் காண்பவர்கள் எது சரியான வழி
என்று தெரியாமல் குழப்பம் அடைவார்கள். ஆனால்,
அந்த குழப்பத்தை
நீக்கி, எது சரியான வழி என்பதைக் குறிப்பதற்குச்
சில குறியீடுகள் இருக்கும். எயினர்கள் வாழுமிடம் பாலை நிலம். அங்கு மழை பெய்வது அரிது. அவ்வாறு வானம் வறண்டு போகும் காலத்தில், அங்கு வாழ்பவர்களின் குடிநீர் தேவைக்காக ஆங்காங்கே சில குழிகள்
வெட்டப்பட்டிருக்கும். அந்தக் குழிகள் சரியான பாதையின் இரு
பக்கங்களிலும் இருக்கும். அவற்றைக்கொண்டு கானவர்கள் எது சரியான வழி
என்று அறிந்துகொள்வார்கள்.
கானவர்கள் தங்கள் உணவுக்காகக் காட்டுப்
பன்றியை வேட்டை ஆடுவர். காட்டுப் பன்றியின் வளைந்த கொம்புகள்
அகத்திப் பூவைப்போல் வெண்ணிறமாக இருக்கும். காட்டுப் பன்றி நடமாடும் காலம்
இராக்காலம். காட்டுப் பன்றி, நீர் வேட்கையைப் போக்கிக்கொள்வதற்காகக் காட்டு வழியில் நீர் இருக்கும் குழிகளுக்கு
வரும் என்று எதிர்பார்த்து, நீருள்ள குழிகளுக்கு அருகே வேறு சில
குழிகளைத் தோண்டி, அவற்றின்மேல் தழைகளை இட்டுக் கானவர்
மூடியிருப்பர். நீர் அருந்தும் காட்டுப் பன்றி தழைகளால்
மூடப்பட்ட குழிகளுக்கு வந்தால் அவற்றை எளிதாகப் பிடித்துவிடலாம் என்று
எதிர்பார்த்து, வேட்டையாடும் கானவர் மறைந்திருந்து
காத்திருப்பர்.
இரவெல்லாம் காத்திருந்தாலும், காட்டுப் பன்றியை வேட்டையாடும் கானவர்களுக்கு சில நாட்களில் காட்டுப் பன்றி
கிடைப்பதில்லை. காட்டுப் பன்றி கிடைக்கவில்லையென்றால், கானவர்கள் மறுநாள், முயல் வேட்டையை மேற்கொள்வர். முயல் வேட்டைக்குச் செல்லும்பொழுது, அவர்கள் நாயோடு செல்வர். முயல் கிடைத்தால் கவ்வலாம் என்று எதிர்பார்த்து வேட்டைக்குச் செல்லும் நாய், பிளந்த வாயோடு செல்லும். முயல்கள் புதர்களில் மறைந்திருக்கும்
என்று எதிர்பார்த்துக் கானவர்,
அந்தப்
புதர்களைச் சுற்றி வேலியும் அந்த வேலியில் வலைகளையும் மாட்டியிருப்பார்கள். புதர்களைக் கோலால் அடித்து, முயல்களைப் புதர்களிலிருந்து
வெளியேற்றுவர்கள். வெளியேறிய முயல்கள் தப்பியோடுவதற்கு முயற்சி
செய்யும்பொழுது வலையில் சிக்கிக்கொள்ளும். சிக்கிக்கொண்ட முயல்களைப் பிடித்துச் சமைத்துக்
கானவர் தம் சுற்றத்தாரோடு கூடியுண்பர். இத்தகைய காட்சிகள் நடைபெறும் பாலை நிலத்தில்
தொடர்ந்து சென்றால், அதற்கப்பால் ……
சிறப்புக் குறிப்பு:
புகழாத வாகைப் பூ: இது வெற்றிப்பெறுவோர் சூடும்
வாகைப்பூவிலிருந்து வேறுபட்டதாகும். காட்டுப்பன்றியின் வளைந்த கொம்புக்கு ஒப்புமை
கூறப்பட்டதால் அகத்திப்பூவே இவ்விதம்
அழைக்கப்பட்டிருக்கவேண்டும்.
எயினரது அரணில் பெறும் பொருள்கள்
. . . . . . . . . . . . . . . பருந்து பட,
ஒன்னாத் தெவ்வர் நடுங்க, ஓச்சி,
வைந் நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம்
வடி மணிப் பலகையொடு நிரைஇ, முடி நாண் 120
சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர்;
ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின்,
வரைத் தேன் புரையும் கவைக் கடைப் புதையொடு
கடுந் துடி தூங்கும் கணைக் கால் பந்தர்,
தொடர் நாய் யாத்த துன் அருங் கடி நகர்; 125
வாழ் முள் வேலிச் சூழ் மிளைப் படப்பை,
கொடு நுகம் தழீஇய புதவின், செந் நிலை
நெடு நுதி வயக் கழு நிரைத்த வாயில்,
கொடு வில் எயினக் குறும்பில் சேப்பின்,
களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன, 130
சுவல் விளை நெல்லின் செவ் அவிழ்ச் சொன்றி,
ஞமலி தந்த மனவுச் சூல் உடும்பின்
வறை கால்யாத்தது, வயின்தொறும் பெறுகுவிர்.
அருஞ்சொற்பொருள்:
117. படுதல் = தோன்றுதல்
118.
ஒன்னா = பொருந்தாத; தெவ்வர் =
பகைவர்; ஓச்சி = குத்தி
119. வை = கூர்மை; நுதி = முனை;
புலவுவாய் =புலால் நாற்றம் உள்ள வாய்; எஃகம் = வேல்
120.
வடிமணி = வடித்த மணிகள்; நிரைஇ =
வரிசையாக; முடி = முடிந்த;
நாண் = வில்லில் உள்ள கயிறு
121.
சாபம் = வில்; கணை = அம்பு;
துஞ்சு = தங்கும்; வியன் =
அகன்ற, பெரிய; நகர் = வீடு
122.
ஊகம் = ஒருவகைப்புல்; வரைப்பு =
மதில்
123.
வரைத்தேன் = மலையில் உள்ள தேனடை; புரையும் =
ஒக்கும்; கவைக்கடை = நாணில் பொருங்துவதற்காக அம்பின் பிளவுபட்ட
அடிப்பகுதி; புதை = அம்புக்கட்டு
124.
துடி = ஒரு இசைக் கருவி; கடுந்துடி = கடுமையான ஓசை எழுப்பும் துடி; தூங்கும் = தொங்கவிடப்டிருக்கும்; கணைக்கால் = பருத்த கால்; பந்தர் = பந்தல்
125.
யாத்த = கட்டிய; துன்அரும் = அணுகுதற்கு அரிய; கடி = காவல்;
நகர் =வீடு
126.
வாழ்முள் = உயிர் வாழ்கின்ற முள்; மிளை =
காவல்காடு; படப்பை = பக்கம்
127. கொடு = உருண்ட;
நுகம் = கதவுக்குக் காப்பாக பொருத்தப்படும் கணைய மரம்;
தழீஇய =பொருத்தப்பட்ட; புதவு =
இடைக்கதவு (கதவில் உள்ள ஒரு கதவு); செந்நிலை
= சாயாது
நிற்கும் தன்மை
128.
கொடு = கொடிய; நுதி =
முனை; நிரைத்த = வரிசையாக;
வயக்கழு = வலிமையான கழுமரங்கள்
129.
கொடுவில் = கொடிய வில்; எயின =
எயினருடைய; குறும்பில் = பாலைநிலமக்கள் வாழுமிடம்; சேப்புதல் = தங்குதல்
130.
களர் = களர் நிலம்; வளர் =
வளரும்; ஈந்து = ஈச்ச மரம்;
காழ் = விதை
131.
சுவல் = மேட்டு நிலம்; செவ் அவிழ் = சிவந்த சோற்றுப் பருக்கை; சொன்றி = சோறு
132.
ஞமலி = நாய்; மனவு =அக்குமணி
(உருத்திராக்க
மணி); சூல் =
முட்டை
133.
வறை = பொரிக்கறி; யாத்தது =
மறைத்தது; வயின்தொறும் = வீடுகள் தோறும்
பதவுரை:
117. பருந்து பட = பருந்துகள் வந்து படியுமாறு
118. ஒன்னாத் தெவ்வர் நடுங்க, ஓச்சி = தம்மோடு பொருந்தாத பகைவர்கள் அஞ்சுமாறு, அவர்களைக் குத்தி,
119. வைந் நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் = கூரிய முனை மழுங்கின புலால் நாறும் வாயையுடைய வேல்களை
120. வடி மணிப் பலகையொடு நிரைஇ, முடி நாண் = வார்த்த மணிகள் கட்டப்பட்ட பலகைகளோடு வரிசையில் வைத்து, தலையில் முடிந்த நாணையுடைய
121. சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர் = வில்லைச் சார்த்தி வைத்த அம்புகள் தங்கும் அகன்ற வீடுகளையும்;
122. ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின் = ஊகம் புல்லால் வேய்ந்த உயர்ந்த நிலையையுடைய மதிலையும்,
123. வரைத் தேன் புரையும் கவைக் கடைப் புதையொடு = மலையின் தேன்கூட்டை ஒக்கும், கவைத்த
அடிப்பக்கத்தை -யுடைய அம்புக்கட்டுக்களுடன்,
124. கடுந் துடி தூங்கும் கணைக் கால் பந்தர் = கடிய ஓசை உள்ள உடுக்கையும் தொங்கும் திரண்ட காலையுடைய பந்தலையும்
125. தொடர் நாய் யாத்த துன் அருங் கடி நகர் = சங்கிலிகளால் நாயைக் கட்டிவைத்துள்ள, அணுகுதற்கு அரிய காவலையும் உடைய வீட்டினையும்;
126. வாழ் முள் வேலிச் சூழ் மிளைப் படப்பை = உயிரோடு கூடிய முள்செடியாலான வேலியையும், சூழ்ந்த காவற் காட்டினையும் உடைய ஊர்ப்புறத்தையும்,
127. கொடு நுகம் தழீஇய புதவின், செந் நிலை = உருண்ட கணையமரம் குறுக்கிலிடப்பட்ட ஒட்டுக்கதவினையும், செம்மையான நிலையினையும்கொண்ட,
128. நெடு நுதி வயக் கழு நிரைத்த வாயில் = நெடிய முனையினையுடைய வலிமையான கழுமரங்கள் வரிசையாக நிறுத்தப்பட்ட வாயிலையும்
உடைய,
129. கொடு வில் எயினக் குறும்பில் சேப்பின் = கொடிய வில்லையுடைய எயினரின் அரணில் சென்று தங்கினால்
130. களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன = களர் நிலத்தில் வளர்ந்த ஈச்ச மரத்தின் விதையைக் கண்டாற் போன்ற
131. சுவல் விளை நெல்லின் செவ் அவிழ்ச் சொன்றி = மேட்டுநிலத்தில் விளைந்த நெல்லின் சிவந்த அரிசியாலாகிய சோற்றை
132. ஞமலி தந்த மனவுச் சூல் உடும்பின் = நாய் கடித்துக் கொண்டுவந்த அக்குமணி போன்ற முட்டைகளையுடைய உடும்பின்
133. வறை கால்யாத்தது, வயின்தொறும் பெறுகுவிர் = பொரியலால்
மறைக்கப்படுமளவு வீடுகள்தோறும் பெறுவீர்கள்-
கருத்துரை:
காட்டு
வழியே சென்றால் ஓர்
அரண்மனையைக் காணலாம். அந்த
அரண்மனைக்கு அருகே ஒரு
படைக்கலக் கொட்டில் இருக்கும்.
அந்தக் கொட்டிலின் ஒரு
பக்கத்தில், வேற்படை வரிசையாகச்
சார்த்தி வைக்கப்பட்டிருக்கும். அந்த
வேல்கள் போரில் பயன்படுத்தப்பட்டதால்,
அவை புலால் நாற்றம்
உடையதாகவும், கூரிய முனைகள்
மழுங்கியும் வளைந்தும் காணப்படும்.
அங்குள்ள வேற்படைக்கு அருகில்
கேடயங்கள் வரிசையாகச் சார்த்தி
வைக்கப்பட்டிருக்கும். அடுத்து, அங்கே
நெடிய பெரிய விற்படையைக்
காணலாம். அதற்கு அருகே,
பல வகையான அம்புகள்
குவியல் குவிலாகக் கொட்டிக்
கிடக்கும்.
அந்தப்
படைக்கலக் கொட்டிலுக்கு அருகே,
பருத்து உயர்ந்த கால்களை
நட்டுப் போடப்பட்ட பெரிய
பந்தலைக் காணலாம். உயரமான
அந்தப் பந்தலின் கால்களில்
அம்புறாத்தூணிகளும், கடிய ஓசை
எழுப்பும் துடிப்பறையும் மாறி
மாறிக் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். அந்த அம்புறாத்தூணிகள் மலையுச்சியில் இருக்கும்
தேனடைகளைப் போல் காட்சியளிக்கும்.
அந்தப் பந்தலின் மற்றொரு
பக்கத்தில் குறுநில மன்னன்
வாழும் அரண்மனை இருக்கும்.
அந்த
அரண்மனையின் உள்ளே எவரும்
அணுக முடியாதவாறு, வேட்டை
நாய்கள் காவல் காக்கும்.
அங்கு, மதிலில் உள்ள
வாயில், பலகைகள் பலவற்றைச்
சேர்த்துச் செய்யப்பட்ட கதவால்
மூடப்பட்டிருக்கும். அந்தக் கதவை
எவரும் எளிதில் திறக்காமல்
இருப்பதற்காக, அதில் உருண்டு
திரண்ட கணையமரம் பொருத்தப்பட்டிருக்கும். அங்குள்ள அரண்மனைக்கு
வெளியே, பகைவர்களைக் கொல்வதற்காகக்
கழுமரங்கள் வரிசையாக நடப்பட்டிருக்கும்.
பகைவர்கள் எளிதில் நுழைய
முடியாதவாறு அந்த அரண்மனையைச்
சுற்றிப் பருத்து உயர்ந்த
மரங்கள் உள்ள காவற்காடு
இருக்கும். அந்தக் காவற்காட்டைச்
சூழ முள்நிறைந்த மரங்கள்
முளைத்து வேலியாக அமைந்திருக்கும்.
நீங்கள்
செல்லும் காட்டு வழியில்
இதுபோல் வேறுசில அரண்மனைகளையும் காண்பீர்கள். அங்குள்ள
அரண்மனை -களில் நீங்கள் தங்கினால்,
மேட்டு நிலத்தில் விளைந்த
செந்நெல் அரிசிச் சோற்றை
எயினர்கள் உங்களுக்கு உண்ணக்
கொடுப்பார்கள். அந்தச் செந்நெல்
அரிசிச் சோற்றிலுள்ள பருக்கைகள்,
களர் நிலத்தில் வளர்ந்த
ஈச்ச மரத்தின் கொட்டைகளைப்போல் இருக்கும். அந்தச்
சோற்றுடன், நாய் வேட்டையாடிக்
கொண்டுவந்த அக்குமணி போன்ற
முட்டைகளையுடைய உடும்பின் பொரியலும்
அவர்கள் அளிப்பார்கள். அந்தப் பொரியல்
அவர்கள் அளிக்கும் சோற்றை
மூடி மறைக்கும் அளவுக்கு
இருக்கும். அத்தகைய உணவை,
அங்குள்ள வீடுகள்தோறும் நீங்கள்
பெறுவீர்கள்.
குறிஞ்சி நில மக்களின் இயல்பும்
தொழிலும்
யானை தாக்கினும், அரவு மேல் செலினும்,
நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும், 135
சூல் மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை,
வலிக் கூட்டு உணவின் வாள்குடிப் பிறந்த,
புலிப் போத்து அன்ன, புல் அணல் காளை,
செல் நாய் அன்ன கரு வில் சுற்றமொடு,
கேளா மன்னர் கடி புலம் புக்கு, 140
நாள் ஆ தந்து, நறவு நொடை தொலைச்சி,
இல் அடு கள் இன் தோப்பி பருகி,
மல்லல் மன்றத்து மத விடை கெண்டி,
மடி வாய்த் தண்ணுமை நடுவண் சிலைப்பச்,
சிலை நவில் எறுழ்த் தோள் ஓச்சி, வலன் வளையூஉ, 145
பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை
முரண் தலை கழிந்த பின்றை
அருஞ்சொற்பொருள்:
134. அரவு = பாம்பு
135. விசும்பு = மேகம்; வல் ஏறு = வலிய இடி;சிலைத்தல் = இடித்தல்
136. சூல் மகள் = கருவுற்ற பெண்; மாறா = மாற்றிக்கொள்ளாத; மறம் = வீரம்; பூணுதல் = மேற்கொள்ளுதல்
137. வாள்குடி = வாள்தொழில் வல்ல குடி
138. போத்து = ஆண் புலி; அன்ன = போல; அணல் = மீசை; காளை – இங்குத் தலைவனைக்
குறிக்கிறது
139. கரு வில் = கொடிய வில்
140. கேளா = கேட்காத; கடி = காவல்; புக்கு = புகுந்து
141. ஆ = பசு; தந்து = கொடுத்து; நறவு = கள்; நொடை =விலை; தொலைச்சி = விற்று
142. இல் அடு கள் = வீட்டில் சமைக்கப்பட்ட கள் ; தோப்பி = ஒருவகை நெல்லால் செய்த கள்; பருகி = குடித்து
143. மல்லல் = மிகுதி, வளம்; மன்றம் = ஊர்ப்பொதுவிடம்; மதத்தல் = கொழுத்தல்; விடை =ஆட்டுக்கிடாய் ; கெண்டி = அறுத்துத் தின்று
144. மடி வாய் = தோலை மடித்துப் போர்த்திய வாய்; தண்ணுமை = மத்தளம்; சிலைப்ப = முழங்க
145. சிலை= வில்; நவிலல் = கற்றல், பழகுதல்; எறுழ் =வலிமை; ஓச்சி = தூக்கி; வளையூஉ = வளைத்து
146. தூங்கும் = ஆடும்; இருக்கை = குடியிருப்பு
147. முரண் = கரடு; தலை = இடம்; பின்றை = பின்னர்
பதவுரை:
134. யானை தாக்கினும், அரவு மேல் செலினும் = யானை தன்னைத் தாக்க வந்தாலும், பாம்பு தன்மேல் ஊர்ந்து சென்றாலும்,
135. நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும் = நீல நிற மேகத்தில் வலிய இடி இடித்தாலும்,
136. சூல் மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை = கருவுற்ற பெண்ணும் அவற்றிற்கு அஞ்சித் தன் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்ளாத வீரமுடைய வாழ்க்கையையும்
137. வலிக் கூட்டு உணவின் வாள்குடிப் பிறந்த = தம் வலிமையால் பிறர் நாட்டைக் கொள்ளையடித்துக் கூட்டாஞ்சோற்றை உண்ணும் வாள் தொழிலில் வல்ல குடியில் பிறந்த
138. புலிப் போத்து அன்ன, புல் அணல் காளை = ஆண்புலி போன்ற, சிறிய தாடியையுடைய அக்குடித் தலைவன்
139. செல் நாய் அன்ன கரு வில் சுற்றமொடு = வேட்டை நாயைப் போல் குறி தவறாமல் பாயவல்ல கொடிய வில்லையுடைய காவலாளருடன்
140. கேளா மன்னர் கடி புலம் புக்கு = தன் சொல்லைக் கேளாத மன்னருடைய காவல் மிகுந்த இடத்திற்குச் சென்று,
141. நாள் ஆ தந்து, நறவு நொடை தொலைச்சி = விடியற்காலத்தில் அவர்களின் ஆனிரைகளைக் கவர்ந்து வந்து, அவற்றைக் கள்ளுக்கு விலையாகக் கொடுத்து
142. இல் அடு கள் இன் தோப்பி பருகி = வீட்டில் சமைத்த கள்வகைகளில் இனிதாகிய நெல்லால் செய்த கள்ளை உண்டு,
143. மல்லல் மன்றத்து மத விடை கெண்டி = ஆரவாரம் மிகுந்த மன்றத்தில் கொழுத்த ஆட்டுகிடாயை
அறுத்துத் தின்று
144. மடி வாய்த் தண்ணுமை நடுவண் சிலைப்ப = தோலை மடித்துப் போர்த்திய மத்தளம் நடுவே முழங்க,
145. சிலை நவில் எறுழ்த் தோள் ஓச்சி, வலன் வளையூஉ = வில்லைத் தாங்கும்
இடத்தோளை வலப்பக்கமாக வளைத்து
146. பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை = பகலில் மகிழ்ச்சியுடனே ஆடுகின்ற சோம்பல் இல்லாத குடியிருப்புகளைக் கொண்ட
147. முரண் தலை கழிந்த பின்றை = கரடுமுரடான காட்டு நிலங்களைக் கடந்த பின்னர்
கருத்துரை:
பாலை நிலத்தைக்
கடந்த பிறகு, அடுத்து நீங்கள் செல்லவிருப்பது குறிஞ்சி நிலப்பகுதி. அங்குள்ள ஆண்கள் மிகுந்த வீரமுடையவர்கள். ஆண்கள் மட்டுமல்ல, மகளிரும் வீரத்தில் சிறந்தவர்களே. பொதுவாக, மகளிர் அச்ச உணர்வுடன் இருப்பர் என்று கூறுவார்கள். கருவுற்றிருக்கும் மகளிர் சற்றும் அச்ச உணர்வுக்கு ஆளாகக் கூடாது என்றும்
சொல்வர். ஆனால், குறிஞ்சி நிலத்தில் கருவுற்ற மகளிர் தம்மைத் தாக்க வரும் யானையைக் கண்டு
அஞ்சமாட்டார்கள். பாம்பு தம்மேல் ஊர்ந்து சென்றாலும், வலிய இடி இடித்தாலும், அவர்கள் அஞ்சாத வீரம் உடையவர்களாக இருப்பர். குறிஞ்சி நிலத் தலைவன் ஆண்புலி போன்றவன்; குறுந்தாடி -யுடையவன்; தன் வலிமையால் கொள்ளை அடித்து உண்ணும் குடியில்
பிறந்தவன். அவனுடைய படைவீரர்கள், குறித்த விலங்கின் மீது குறி தவறாது பாயும் வேட்டை நாயைப் போல், தலைவன் ஏவிய பணியைச் செவ்வனே செய்து முடிக்க வல்ல கொடிய வில்லையுடையவர்கள்.
தன் சொல் கேளாத
மன்னருடைய காவல் மிகுந்த நிலத்திற்குக் குறிஞ்சி நிலத் தலைவன் தன் வீரர்களுடன்
விடியற்காலத்தில் சென்று, அவர்களின் ஆனிரைகளைக் கவர்ந்து வருவான். அவர்கள் அந்த ஆனிரைகளில் சிலவற்றை விலை பேசி விற்றுவிட்டு, தம் வீட்டில் சமைத்த கள்வகைகளில் நெல்லால் செய்த சிறந்த கள்ளை உண்டு மகிழ்வர். பின்னர், ஆரவாரம் மிகுந்த மன்றத்தில் கொழுத்த ஆட்டுக்கிடாயை
அறுத்து ஊராருடன் கூடி உண்பர். பிறகு, தோலால் போர்த்தப்பட்ட வாயையுடைய மத்தளம் நடுவில் முழங்க, வில்லைத் தாங்கும் இடத்தோளை வலப்பக்கம் சாய்த்து, பகலெல்லாம் சோம்பல் இல்லாமல் வீரர்கள் ஆடுவர். அத்தகைய வீரர்கள் வாழும் கரடுமுரடான இடத்தைக் கடந்து செல்லுங்கள்.
கோவலர் குடியிருப்பு
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . மறிய
குளகு அரை யாத்த குறுங் கால், குரம்பை,
செற்றை வாயில், செறி கழிக் கதவின்,
கற்றை வேய்ந்த கழித் தலைச் சாம்பின், 150
அதளோன் துஞ்சும் காப்பின் உதள,
நெடுந் தாம்பு தொடுத்த குறுந் தறி முன்றில்,
கொடு முகத் துருவையொடு வெள்ளை சேக்கும்
இடு முள் வேலி எருப் படு வரைப்பின்,
நள் இருள் விடியல் புள் எழப் போகி 155
புலிக் குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி,
ஆம்பி வால் முகை அன்ன கூம்பு முகிழ்
உறை அமை தீம் தயிர் கலக்கி, நுரை தெரிந்து,
புகர் வாய்க் குழிசி பூஞ் சுமட்டு இரீஇ
நாள் மோர் மாறும் நல் மா மேனி, 160
சிறு குழை துயல்வரும் காதின், பணைத் தோள்,
குறு நெறிக் கொண்ட கூந்தல், ஆய் மகள்
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி,
நெய் விலைக் கட்டிப் பசும் பொன் கொள்ளாள்,
எருமை, நல் ஆன், கரு நாகு, பெறூஉம் 165
மடி வாய்க் கோவலர் குடிவயின் சேப்பின்,
இருங் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன
பசுந் தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்.
அருஞ்சொற்பொருள்:
147. மறி = ஆட்டுக்குட்டி; மறிய = மறியினுடைய
148. குளகு = தழை; அரை = காலின் நடுப்பகுதி; யாத்த = கட்டிய; குரம்பை = குடிசை
149. செற்றை = சிறிய புதர்; செறிகழிக் கதவு = படல்
150. கற்றை = கட்டு; வேய்ந்த =மூடிய; கழித்தலை = கழியைத் தலையிலேயுடைய; சாம்பு = படுக்கை, கூண்டு
151. அதள் = தோல்; துஞ்சும் = தங்கும்; காப்பு =காவல்; உதள் = ஆட்டுக்கிடாய்
152. தாம்பு = கயிறு; தறி = முளை, விலங்குகளைக் கட்டுவதற்குப் பயன்படும் தூண்; முன்றில் = முற்றம்
153. துருவை = செம்மறி ஆடு ; வெள்ளை = வெள்ளாடு; சேக்கும் = கிடக்கும்
154. எருப்படு = எரு மிகுதியாக உள்ள; வரைப்பு = ஊர்
155. விடியல் = விடியற்காலம்
156. மத்தம் = மத்து (தயிர் கடையும் கருவி)
157. ஆம்பி = காளான்; வால்முகை = வெண்மையான அரும்பு; அன்ன = போல; முகிழ் = அரும்பு
158. உறை = உறைதற்பொருட்டுக்
காய்ச்சிய பாலிலிடும் மோர்; அமை = உறைந்து இறுகிய
159. பகர் = புள்ளி; குழிசி = பானை; சுமட்டு = சுமை+அடு – சுமையான
பொருட்களைச் சுமந்து செல்லும்பொழுது, சுமையைத் தூக்கிச் செல்வதை எளிதாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் சிறிய தலையணை
போன்ற பொருள்; இரீஇ = இருத்தி
161. துயல்தல் = அசைதல்; பணைத்தோள் = மூங்கில் போன்ற தோள்
162. குறுநெறி = சிறுசிறு அறல்கள் (சிறுசிறு சுருளைகள்); ஆய்மகள் = இடைச்சி
163. அளை = தயிர், மோர்; அருத்தி = உண்ணச் செய்து
165. ஆன் = பசு; கரு = கருவாகிய; நாகு = கன்று
166. மடிவாய் = (சீழ்க்கை அடிப்பதற்காக) மடித்த வாய்; கோவலர் = இடையர்; குடிவயின் = குடியிருப்புகளில்; சேப்பின் = தங்குவீராயின்
167. இரு = பெரிய; கிளை =சுற்றம்; ஞெண்டு = நண்டு; பார்ப்பு = தவழ்பவற்றின் இளமை
168. பசுத்தினை = பசிய தினை; மூரல் = சோறு
பதவுரை:
147. மறிய = ஆட்டுக்குட்டிகளுக்கு
148. குளகு அரை யாத்த குறுங் கால், குரம்பை = தழைகள் இடையிலே கட்டப்பட்ட குறுகிய கால்களையுடைய குடிலின்,
149. செற்றை வாயில், செறி கழிக் கதவின் = சிறு புதர்களையுடைய வாயிலையும், கழிகளால் சேர்த்துக் கட்டப்பட்ட படல் போன்ற கதவினையும்
150. கற்றை வேய்ந்த கழித் தலைச் சாம்பின் = வரகுக்கற்றையால் வேய்ந்த கழிகளைத் தலையிலேயுடைய (ஆட்டுக்குட்டிகளை மூட உதவும்) கூண்டுகளையும்
151. அதளோன் துஞ்சும் காப்பின் உதள = தோல் பாயிலிருப்போன் இருந்து காக்கும் காவலையும், ஆட்டுக்கிடாயின்
152. நெடுந் தாம்பு தொடுத்த குறுந் தறி முன்றில் = நெடிய தாம்புகள் கட்டப்பட்ட சிறிய கட்டுத்தறிகளையும் உடைய முற்றத்தில்,
153. கொடு முகத் துருவையொடு வெள்ளை சேக்கும் = வளைந்த முகத்தையுடைய செம்மறியாடுகளுடன் வெள்ளாடுகளும்
அடைபட்டுக் கிடக்கும்
154. இடு முள் வேலி எருப் படு வரைப்பின் = கட்டு முள் வேலியினையுடைய எருக்குவியல்கள் மிகுந்திருக்கும் ஊரில்
155. நள் இருள் விடியல் புள் எழப் போகி = செறிந்த இருள் போகும் விடியற்காலத்தில் பறவைகள் துயிலெழ எழுந்து சென்று,
156. புலிக் குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி = புலியின் முழக்கம் போன்ற முழக்கத்தையுடைய மத்தினை ஆரவாரிக்கும்படி கயிற்றை வலித்து,
157. ஆம்பி வால் முகை அன்ன கூம்பு முகிழ் = குடைக்காளானுடைய வெண்மையான முகைகளை ஒத்த குவிந்த முகைகளையுடைய
158. உறை அமை தீம் தயிர் கலக்கி, நுரை தெரிந்து = உறைந்து இறுகிய இனிய தயிரைக் கடைந்து, நுரை போன்ற வெண்ணையை எடுத்து,
159. புகர் வாய்க் குழிசி பூஞ் சுமட்டு இரீஇ = மோர்ப்புள்ளிகள் மிகுந்த வாயையுடைய மோர்ப்பானையை மெல்லிய சுமட்டின் மேல் வைத்து,
160. நாள் மோர் மாறும் நல் மா மேனி = அன்றைய மோரை விற்கும், நல்ல கரிய நிறத்தையுடைய மேனியையும்
161. சிறு குழை துயல்வரும் காதின், பணைத் தோள் = சிறிய குழை அசைகின்ற காதினையும், மூங்கில் போன்ற தோளினையும்,
162. குறு நெறிக் கொண்ட கூந்தல், ஆய் மகள் = சிறுசிறு சுருளைகளைக்கொண்ட கொண்ட மயிரினையும் உடைய, இடைமகள்
163. அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி = மோரை விலைக்கு விற்றதால் வாங்கிய உணவுப் பொருள்களால் தன் சுற்றத்தார்
அனைவரையும் உண்ணப்பண்ணி,
164. நெய் விலைக் கட்டிப் பசும் பொன் கொள்ளாள் = நெய்யின் விலைக்குக் கட்டியாகிய பசும்பொன்னை வாங்காமல்
165. எருமை, நல் ஆன், கரு நாகு, பெறூஉம் =எருமையையும், நல்ல பசுக்களையும், அவற்றின் கருவாகிய கன்றுகளையும் வாங்குகின்ற
166. மடி வாய்க் கோவலர் குடிவயின் சேப்பின் = (சீழ்க்கை அடிப்பதற்காக) மடித்த வாயையுடைய இடையர் குடியிருப்பிலே தங்குவீராயின்
167. இருங் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன = பெரிய சுற்றமாகிய நண்டின் சிறிய குஞ்சுகள் போன்ற வடிவுடைய
168. பசுந் தினை மூரல் பாலொடும் பெறுகுவிர் = பசிய தினையரிசியிலான சோற்றைப் பாலோடு பெறுவீர்கள்
கருத்துரை:
குறிஞ்சி நிலத்தைக் கடந்து சென்றால், முல்லை நிலத்தை அடைவீர்கள். அங்குள்ள சிறு
சிறு குடிசைகளின் குறுகிய கம்பங்களில், ஆடுகள் நின்று தின்னக்கூடிய உயரத்தில் தழைகள் கட்டப்பட்டிருக்கும். வீட்டின் வாயில்களில் சிறிய புதர்கள் காணப்படும். அந்தக் குடிசைகளின் கதவுகள் மூங்கில் படல்களால் ஆனவை. ஆட்டுக்குட்டிகளை வைத்து மூடுவதற்காக, வைக்கோலால் வேயப்பட்ட, சிறு குடிசை போன்ற
தோற்றமுள்ள கூண்டு ஒரு பக்கம் இருக்கும். ஆடுகளையும் அங்குள்ள பொருள்களையும் பாதுகாக்கும் ஒருவருக்காக, தோலாலான படுக்கை இருக்கும். அங்குள்ள
வீடுகளில், ஆட்டுக்கிடாய்களின்
நீண்ட தாம்புகள் கட்டப்பட்ட சிறிய கட்டுத்தறிகளையுடைய முற்றத்தில், செம்மறி ஆடுகளோடு வெள்ளாடுகளும் அடைபட்டு கிடப்பதைக் காணலாம்.
ஆயர் மகளிர், விடியற்காலத்தில்
பறவைகளின் ஒலி கேட்டுத் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து, உறைந்த தயிர் இருக்கும் பானையில் மத்தை இட்டு, நன்கு உறைந்து இறுகிய இனிய தயிரைக் கடைவார்கள். அவர்கள் தயிர் கடையும்போது எழும் ஒலி, புலியின் முழக்கத்தைப் போல் இருக்கும். அவ்வாறு அவர்கள் கடைந்து எடுத்த வெண்ணெயையும் மோரையும் பிரிப்பார்கள். தயிர் கடையும்போது மோர்த்துளிகள் புள்ளிப் புள்ளியாக அந்தப் பானையில் தோன்றும்.
தலையில் மெத்தென்ற சும்மாட்டின் மீது அந்தப் பானையை வைத்துக்கொண்டு, அவர்கள் மோர் விற்கச் செல்வார்கள். அந்த ஆயர் மகளிரின் மேனியின் நிறம் கறுப்பு; தோள்கள் மூங்கிலைப் போன்றவை. அவர்கள் காதுகளில்
அசையக்கூடிய குழைகளை அணிந்திருப்பார்கள்; சிறுசிறு சுருள்களைக் கொண்ட மயிரை வாரி முடிந்திருப்பார்கள். மோரை விற்றுத் தொகுத்த பணத்தால் வாங்கிய உணவுப் பொருள்களைத் தன் சுற்றத்தார்
அனைவருக்கும் வழங்குவார்கள். நெய்விலைக்குக்
கட்டியாகப் பசும் பொன்னை வாங்காமல், எருமைகளையும் நல்ல
பசுக்களையும், அவற்றின் கருவாகிய
கன்றுகளையும் வாங்குவார்கள்.
அத்தகைய ஆயர் மகளிரும், வாயை மடித்துச்
சீழ்க்கை அடிக்கும் ஆயர்களும் வாழும் குடியிருப்பில் நீங்கள் தங்கினால், நண்டின் சிறிய குஞ்சுகள் போன்ற பசிய தினையரிசியிலான சோற்றைப் பாலோடு
பெறுவீர்கள்.
முல்லை நிலக் கோவலரின் குழலிசை
தொடுதோல் மரீஇய
வடு ஆழ்
நோன் அடி,
விழுத் தண்டு
ஊன்றிய மழுத்
தின் வன்
கை, 170
உறிக் கா
ஊர்ந்த மறுப்
படு மயிர்ச் சுவல்,
மேம் பால்
உரை த்த
ஓரி, ஓங்கு
மிசைக்
கோட்டவும் கொடியவும் விரைஇ, காட்ட
பல் பூ
மிடைந்த படலைக்
கண்ணி,
ஒன்று அமர்
உடுக்கை, கூழ்
ஆர் இடையன் 175
கன்று அமர்
நிரையொடு கானத்து அல்கி,
அம் நுண்
அவிர் புகை
கமழ, கைம்
முயன்று
ஞெலிகோல் கொண்ட
பெரு விறல்
ஞெகிழிச்
செந் தீத்
தோட்ட கருந்
துளைக் குழலின்
இன் தீம்
பாலை முனையின்,
குமிழின் 180
புழற் கோட்டுத் தொடுத்த மரல்
புரி நரம்பின்
வில் யாழ்
இசைக்கும், விரல்
எறி, குறிஞ்சி,
பல்கால் பறவை
கிளை செத்து,
ஓர்க்கும்
புல் ஆர்
வியன் புலம்
போகி
அருஞ்சொற்பொருள்:
169. தொடுதோல் = செருப்பு;
மரீஇய = பொருந்திய; வடு
ஆழ் நோன் அடி
=வடு அழுந்திய வலிய
அடி
170. விழு
= துன்பமான (துன்பத்தை விளைவிக்கும்);
தண்டு = தடி; (விழுத்தண்டு
– இங்கு
ஆனிரைகளை அடித்து ஓட்டுவதற்குப்
பயன்படுத்தப்படும் தடியைக்
குறிக்கிறது); மழு = கோடரி;
மழுத்தின் வன் கை =
கோடரியாலான தழும்பு இருந்த
வலிய கை
171. உறிக்கா
= காவடிபோல் கட்டித் தொங்கும்
உறி;
மறு
= தழும்பு; சுவல் = தோள்
172. மேம்பால்
= மேன்மையான பால் (பசுப்பால்);
உரைத்த = தேய்த்த, தடவிய;
ஓரி
= மயிர்; ஓங்கு = உயர்ந்த;
மிசை = உச்சி
173. கோட்டவும்
= கொம்புகளிலும்; விரைஇய = கலந்த;
காட்ட = காட்டில்
174. படலை
= கலம்பகம்; கண்ணி = மாலை
175. ஒன்று
அமர் உடுக்கை = உடுத்த
ஒற்றை உடை; ஆர்தல்
= உண்ணுதல்
176. நிரை
= ஆனிரை; கானம் = காடு;
அல்கி = தங்கி
177. அவிர்தல்
= விளங்குதல்; கைம் முயன்று
= கையால் முயற்சி செய்து
(கையால் கடைந்து)
178. ஞெலிகோல்
= தீக்கடையும் அரணிக் கட்டை,
கோல்; ஞெகிழி = நெருப்புக்கோல்
179. தோட்ட
= துளைத்த
180. முனையின்
= வெறுத்து; குமிழ் = குமிழ
மரம்
181. புழல்
=உள்ளே துளை உள்ள;
கோடு = கொம்பு; மரல்
= ஒரு செடி (மரல் என்பது கற்றாழையைப் போன்ற ஒரு செடி)
; புரி
= நார்; குமிழ் = குமிழ
மரம்
182. வில்
யாழ் = யாழின் ஒரு
வகை
183. பல்கால்
= பல கால்களையுடைய; கிளை
செத்து ஓர்க்கும் = தம்
இனம் எழுப்பும் ஓசையாகக்
கருதிக் காது கொடுத்துக்
கேட்கும்
184. புல்
ஆர் வியன் புலம்
= புல் நிறைந்த அகன்ற
இடம்
பதவுரை:
169. தொடுதோல்
மரீஇய வடு ஆழ்
நோன் அடி = செருப்புத்
தழும்பேறிய வலிய கால்களையும்
170. விழுத்
தண்டு ஊன்றிய மழுத்
தின் வன் கை = ஆனிரைகளை
அடித்துத் துன்பம் விளைவிக்கும்
தடியைத் தாங்கிய, கோடரியாலான
தழும்பு இருந்த வலிய
கைகளையும்
171. உறிக்
கா ஊர்ந்த மறுப்
படு மயிர்ச் சுவல்
= உறிகள் தொங்கும் காவடி
இருந்ததனால் தழும்பு உண்டான
மயிருடைய தோள்களையும்
172, மேம்
பால் உரை த்த
ஓரி,
ஓங்கு மிசை = பால்களில்
சிறந்த பசுப்பால் தடவிய
மயிரினையும், உயர்கின்ற உச்சிகளிலுள்ள
173. கோட்டவும்
கொடியவும் விரைஇ, காட்ட
= கொம்புகளிலும், கொடிகளிலும் மலர்ந்துள்ள
மலர்களைக் கலந்து, காட்டில்
உள்ள
174. பல்
பூ மிடைந்த படலைக்
கண்ணி = பல்வேறு பூக்களையும்
நெருங்கிச்சேர்த்த கலம்பக
மாலையினையும்
175. ஒன்று
அமர் உடுக்கை, கூழ்
ஆர் இடையன் =உடுத்திய
ஒற்றை ஆடையையுடைய, கூழை
உண்ணுகிற இடைமகன்
176. கன்று
அமர் நிரையொடு கானத்து
அல்கி = கன்றுகளை விரும்பும்
ஆனிரைகளோடு காட்டில் தங்கி,
177. அம்
நுண் அவிர் புகை
கமழ,
கைம் முயன்று = அழகிய
நுண்ணிதாய் விளங்கும் புகை
முற்படப் பிறக்கும்படி கையாலே
கடைந்து,
178. ஞெலிகோல்
கொண்ட பெரு விறல்
ஞெகிழி = தீக்கடையப்படும் கோலால்
உண்டாக்கிக்கொண்ட பெரிய
ஆற்றலுடைய கொள்ளிக்கட்டையின்
179. செந்
தீத் தோட்ட கருந்
துளைக் குழலின் = சிவந்த
நெருப்புபால் துளையிட்ட கரிய
துளையினையுடைய குழலில் எழுப்பிய,
180. இன்
தீம் பாலை முனையின்,
குமிழின் = மிகவும்
இனிய பாலை என்னும் பண்ணைத் தான்
வெறுத்தபொழுது, குமிழினது
181. புழற்
கோட்டுத் தொடுத்த மரல்
புரி நரம்பின் = உள்ளீடற்ற
கொம்பிடத்தே வளைத்துக் கட்டின
மரலின் நாராலான நரம்பினையுடைய
182. வில்
யாழ் இசைக்கும், விரல்
எறி,
குறிஞ்சி = வில்யாழில் விரலால்
தெறித்து எழுப்பும்
குறிஞ்சிப்பண்ணை,
183. பல்கால்
பறவை கிளை செத்து,
ஓர்க்கும் = பல கால்களையுடைய
வண்டுகள் தம் சுற்றத்தின்
ஓசையாகக் கருதிக் கேட்கும்,
184. புல்
ஆர் வியன் புலம்
போகி = புல் நிறைந்த
அகன்ற நிலத்தைக் கடந்து
போய்
கருத்துரை:
முல்லை நிலத்தில் வாழும் ஆயர்கள், காட்டு வழிகளில்
செல்ல வேண்டியிருப்பதால், எப்பொழுதும்
தங்கள் கால்களில் தோலாலான செருப்பு அணிந்திருப்பார்கள். எப்பொழுதும் செருப்பு அணிந்திருப்பதனால், அவர்களது கால்களில் செருப்புத் தழும்பேறியிருக்கும். ஆனிரைகளை அடித்து ஓட்டுகின்ற கோலையும், செடிகொடிகளை வெட்டுவதற்குக் கோடரியையும் பயன்படுத்துவதால், அவர்களது கைகளில் தழும்புகள் ஏற்பட்டிருக்கும். அவர்களுக்குத் தேவைப்படும் பொருள்கள் உள்ள உறிகளை இருபுறமும் தொங்கும் காவடியாகச்
சுமந்து செல்வதால், அவர்களது
தோள்களில் தழும்பேறியிருக்கும். அவர்கள் தங்கள்
தலையில் பசுப்பாலைத் தடவி வாரி முடிந்திருப்பார்கள்; கொம்புகளிலும், கொடிகளிலும்
மலர்ந்திருக்கும் மலர்களையும், காட்டில் உள்ள
பல்வேறு மலர்களையும் சேர்த்து நெருக்கமாகக் கட்டிய மாலையைச் சூடிக்கொள்வார்கள். அவர்கள் ஒரே ஆடையைத் தங்கள் உடையாகவும், கூழைத் தங்கள் உணவாகவும் கொண்டு, கன்றுகளை
விரும்பும் ஆனிரைகளோடு காட்டில் தங்கியிருப்பார்கள்.
நெருப்புக் கொள்ளியால் துளையிட்ட குழல்களில், ஆயர்கள் பாலைப்பண்ணை வெறுக்கும்வரை பாடுவார்கள். பின்னர், அவர்கள் குமிழ
மரத்திலிருந்து வெட்டிய உள்ளீடற்ற கொம்பை வளைத்துக் கட்டி, மரல் என்னும் செடியின் நாரை நரம்பாகக் கொண்ட வில்யாழை விரலால் தெறித்துக்
குறிஞ்சிப்பண் பாடுவார்கள். அவர்கள்
குறிஞ்சிப்பண் பாடும்போது தோன்றும் ஓசை, தம்முடைய இனம் எழுப்பும் ஓசையோ என்று கேட்டு, வண்டுகள் மயங்கும். இத்தகைய புல்வளம்
நிறைந்த அகன்ற முல்லை நிலத்தில்தொடர்ந்து செல்லுங்கள்.
சிறப்புக்
குறிப்பு:
குமிழ மரம்: (Gmelina Arborea) தேக்கு மரத்திற்கு இணையான மரம். மரத்தின் உட்பகுதி மஞ்சள் நிறத்தில்
இருக்கும். 30 மீட்டர் உயரம் வரை வேகமாக வளரக்கூடியது. கட்டட வேலைகள் மற்றும் மரச்சாமான்கள்
செய்ய பயன்படுகிறது.
மரல்: இது கற்றாழை வகைச்செடி. மரல் நாரில் கட்டிய தலைமாலை பற்றி மலைபடுகடாம்
(தளிரொடு மிடைத்த காமரு கண்ணி திரங்கு மரல் நாரில் பொலியச் சூடி: 428-431)
குறிப்பிடுகின்றது. நற்றிணையில் மரல் நார் உடுத்திய குறவர் பற்றிய குறிப்பு உள்ளது.
( மரல் நார் உடுக்கை மலை உறை குறவர் – நற்: 64) இதன் பழம் சிவப்பாக சிறிய உருண்டை
வடிவில் இருக்கும். வெயிலில் நடந்த பாதங்களில் ஏற்படும் கொப்புளங்களுக்கு இந்தப்
பழங்களை ஒப்பிடுகிறது பொருநராற்றுப்படை (மரல் பழுத்து அன்ன மறுகுநீர் மொக்குள்-
பொருநர்: 42-45)
முல்லை நிலத்து உழுது உண்பாரது
ஊர்களில் கிடைப்பன
. . . . . . . . . . . . . . . . . . முள் உடுத்து
எழு காடு ஓங்கிய தொழுவுடை வரைப்பில் 185
பிடிக்கணத்து அன்ன குதிருடை முன்றில்,
களிற்றுத் தாள் புரையும் திரி மரப் பந்தர்,
குறுஞ் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி
நெடுஞ் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில்,
பருவ வானத்துப் பா மழை கடுப்பக் 190
கரு வை வேய்ந்த, கவின் குடிச் சீறூர்
நெடுங் குரல் பூளைப் பூவின் அன்ன,
குறுந் தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி,
புகர் இணர் வேங்கை வீ கண்டன்ன,
அவரை வான் புழுக்கு அட்டி, பயில்வுற்று, 195
இன் சுவை மூரல் பெறுகுவிர்.
அருஞ்சொற்பொருள்:
184. முள் உடுத்து = முள் சூழ்ந்து
185. எழு காடு = வளர்ந்த காடு; ஓங்கிய = வளர்ந்த; தொழு = மாட்டுத்தொழுவம்; வரைப்பு = நிலம், இடம்.
186. கணம் = கூட்டம்; அன்ன = போல; முன்றில் = முற்றம்
187. தாள் = கால்; புரையும் = போல; திரிமரம் = தானியம் அரைக்கும் கருவி; பந்தர் = பந்தல்
188. சாடு = வண்டி; உருளை = சக்கரம்
189. பறைந்த = தேய்ந்த; கொட்டில் = மாட்டுக் கொட்டிகை
190. பாமழை = பரந்த மழை; கடுப்ப = போல
191. கரு = கரிய; வை = வரகுத்தாள், வரகு வைக்கோல்; கவின் = அழகிய
192. குரல்= கொத்து; பூளை = ஒருவகைச் செடி; அன்ன = போல
193. குறள் = குறுகிய; அவிழ் = சோறு; சொன்றி = உணவு
194. புகர் = நிறம்; இணர் = கொத்து; வீ = பூ; கண்டன்ன = கண்டதைப்போல
195. புழுக்கு = புழுங்க வெந்தது; அட்டி = மிக இட்டு; பயில்வுற்று = துழாவி
196. மூரல் = சோறு; பெறுகுவிர் = பெறுவீர்கள்
பதவுரை:
184. முள் உடுத்து = முள் சூழ்ந்து
185. எழு காடு ஓங்கிய தொழுவுடை வரைப்பில் = வளர்ந்த காடுகள் சூழ எழுந்த மாட்டுக் கொட்டில் உள்ள நிலத்தில்
186. பிடிக்கணத்து அன்ன குதிருடை முன்றில் = பெண் யானைக் கூட்டத்தைப் போன்ற, தானியங்கள் சேமித்து வைக்கும் குதிர்களையுடைய முன்றிலையும்
187. களிற்றுத் தாள் புரையும் திரி மரப் பந்தர் = ஆண் யானையினது காலை ஒக்கும் தானியங்கள் அரைக்க உதவும் திரிமரம் என்ற கருவி இருக்கும் பந்தலையும்
188. குறுஞ் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி = சிறியவண்டியின் சக்கரங்களோடு, கலப்பையையும் சார்த்தி வைக்கப்பட்டதால்
189. நெடுஞ் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில் = தேய்ந்துபோன நெடிய சுவரோடு கூடிய புகை சூழ்ந்த கொட்டிலினையும் உடைய
190. பருவ வானத்துப் பா மழை கடுப்ப = பருவ காலத்து, வானத்தில் பரவிய முகிலை ஒப்ப
191. கரு வை வேய்ந்த, கவின் குடிச் சீறூர் = கரிய வரகு வைக்கோலால் வேய்ந்த அழகிய குடியிருப்பினையுடைய சிறிய ஊர்களில்
192. நெடுங் குரல் பூளைப் பூவின் அன்ன = நெடிய கொத்துகளையுடைய சிறு பூளையின் பூக்களை ஒத்த
193. குறுந் தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி = குறிய தாளினையுடைய வரகின் சிறிய பருக்கைகளாகிய சோற்றை
194. புகர் இணர் வேங்கை வீ கண்டன்ன = நல்ல நிறத்தோடு கொத்துக்கொத்தான வேங்கைப் பூவைக் கண்டாற் போன்ற
195. அவரை வான் புழுக்கு அட்டி, பயில்வுற்று = அவரைக் கொட்டையின் வெண்மையான பருப்பை வேகவிட்டு, துழாவியதால்
196. இன் சுவை மூரல் பெறுகுவிர் = இனிய சுவையுள்ள பருப்புச்சோற்றைப் பெறுவீர்கள்
கருத்துரை:
முல்லை நிலத்தில் தொடர்ந்து சென்றால், சிற்றூர்களை அடையலாம். அந்தச்
சிற்றூர்களில் முள் நிறைந்த மரங்கள் காடுபோல் வளர்ந்திருக்கும். அந்த மரங்களுக்கு நடுவே மாட்டுக் கொட்டில்கள் இருக்கும். அங்குள்ள வீடுகளின் முற்றங்களில் தானியங்களைச் சேமித்து வைக்கும் குதிர்களைக்
காணலாம். அந்தக் குதிர்கள்
பெண்யானையின் கூட்டம்போல் காட்சியளிக்கும். அந்த வீடுகளில் பந்தல் இருக்கும். அந்தப் பந்தலில் ஆண்யானையின் காலை ஒத்த, தானியங்களை அரைக்க உதவும் திரிமரம் என்ற கருவி வைக்கப்பட்டிருக்கும். வீடுகளின் நெடுஞ்சுவர்களில் வண்டிச் சக்கரங்களும் கலப்பைகளும் சார்த்தி
வைக்கப்பட்டிருப்பதால், அந்தச் சுவர்கள்
தேய்ந்திருக்கும். வீடுகளுக்குள்
உள்ள அடுக்களைகளில் மூட்டிய தீயிலிருந்து எழும் புகை, கொட்டில்களில் படிந்திருக்கும். அங்குக் கரிய
வரகுத்தாள் வைக்கோல்களால் கூரைகள் வேயப்பட்டிருப்பதைக் காணலாம். அங்குள்ள வீடுகளில், பூளைப் பூவைப்
போன்ற வரகுச் சோற்றையும், செந்நிறமான
வேங்கைப் பூவைப் போன்ற அவரைப் பருப்பையும் வேகவைத்துத் துழாவிச் சமைத்த இனிய
பருப்புச்சோற்றைப் பெறுவீர்கள்.
மருத நிலத்தைச் சேர்ந்த முல்லைநிலம்
. . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . ஞாங்கர்க்
குடி நிறை வல்சிச் செஞ் சால் உழவர்
நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி,
பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில்
உடுப்பு முக முழுக் கொழு மூழ்க ஊன்றி, 200
தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை
அரி புகு பொழுதின், இரியல் போகி,
வண்ணக் கடம்பின் நறு மலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ, குறுங் கால்
கறை அணல் குறும்பூழ், கட்சிச் சேக்கும் 205
வன் புலம் இறந்த பின்றை . . . .
அருஞ்சொற்பொருள்:
196. ஞாங்கர் = அப்பால்
197. குடி = குடியிருப்பு; வல்சி = உணவு; சால் = உழவுசால் (விதைகளை நடவு செய்வதற்காக அல்லது நீர்ப்பாசனத்திற்காக ஒரு கலப்பை மூலம் தரையில் செய்யப்பட்ட ஒரு நீண்ட குறுகிய அகழி)
198. நவில்தல் = பழகுதல்; பகடு = எருது; புதவு = வாயில்
199. பிடிவாய் = பெண்யானையின் வாய்; மடிவாய் = வளைந்த வாய். நாஞ்சில் =கலப்பை
200. உடுப்பு = உடும்பு; கொழு = கலப்பையின் இரும்பு
201. தொடுப்பு = விதை; துளர் = பயிரின் களை; துடவை = விளைநிலம்
202. அரிதல் = அறுத்தல்; இரியல் போகி = நிலைகெட்டு
203. கடம்பு = கடம்ப மரம்; நறுமலர் = மணமுள்ள மலர்; அன்ன = போல
204. தழீஇ = தழுவி; குறுங்கால் = சிறிய கால்
205. கறை = கரிய; அணல் = கழுத்து; குறும்பூழ் = காடை; கட்சி = காடு; சேக்கும் = தங்கும்
206. வன்புலம் = மேட்டு நிலம்; இறந்த = கடந்த; பின்றை = பிறகு
பதவுரை:
196. ஞாங்கர் = ஆயர் குடியிருப்புக்கு அப்பால்,
197. குடி நிறை வல்சிச் செஞ் சால் உழவர் = வீடு நிறைந்த, உணவினையுடைய நன்றாக உழப் பழகிய உழவர்கள்
198. நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி = ஏரில் நன்கு நடை பயின்ற பெரிய எருதுகளை முற்றத்திலேயே நுகத்தடியில் பூட்டிக்கொண்டு சென்று
199. பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில் = பெண் யானையின் வாயை ஒத்த, வளைந்த வாயையுடைய கலப்பையின்
200. உடுப்பு முக முழுக் கொழு மூழ்க ஊன்ற = உடும்பின் முகத்தை ஒத்த பெரும் கலப்பையின் இரும்பு நிலத்தில் மறையுமாறு அமுக்கிப் பிடித்து
201. தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை = உழுது விதைத்த பிறகு, களைகள் இருந்தால் அவற்றைக் களைக்கொட்டுக்கொண்டு செத்திய விளைநிலத்தை
202. அரி புகு பொழுதின், இரியல் போகி = அறுவடை செய்யும்பொழுது, ஆட்களின் அரவத்தால் நிலைகெட்டுப் பறந்து சென்று,
203. வண்ணக் கடம்பின் நறு மலர் அன்ன = வெண்ணிறமான, மணம் மிக்க கடம்ப மலரை ஒத்த
204. வளர் இளம் பிள்ளை தழீஇ, குறுங் கால் = வளரும் இளமையான தம் குஞ்சுப்பறவைகளைத் அணைத்தவாறு, சிறிய கால்களையும்
205. கறை அணல் குறும்பூழ், கட்சிச் சேக்கும் = கரிய கழுத்தையும் உடைய காடைப்பறவை காட்டில் தங்கும்
206. வன் புலம் இறந்த பின்றை = மேட்டு நிலத்தைக் கடந்த
பிறகு
கருத்துரை:
ஆயர்
குடியிருப்புக்கு அப்பால், வீடு நிறைய உணவுப் பொருள்களுடைய
உழவர்களின் வீடுகளைக் காண்பீர்கள். அந்த உழவர்கள் நன்றாக உழப் பழகியவர்கள். அவர்கள் நன்கு நடை பயின்ற எருதுகளை முற்றத்திலேயே
நுகத்தடியில் பூட்டிச் சென்று, பெண்யானையின் வாயை ஒத்த வளைந்த
வாயையுடைய கலப்பையின் உடும்பின் முகத்தை ஒத்த பெரும் கொழு, நிலத்தில் மறையுமாறு அமுக்கிப் களைபோக பலசால் உழுவார்கள். அவ்வாறு உழுத பின்னர், விதை விதைப்பார்கள். பின்னர், விளைநிலத்தில் வளர்ந்த களைகளைக் களைக்கொட்டால்
களைந்து எறிவார்கள். பிறகு, அறுவடை செய்யும்பொழுது, ஆட்களின் ஆரவாரத்தால், அஞ்சி, நிலைகெட்டு, அழகிய வெண்கடம்ப மரத்தின் நறுமணமுள்ள மலரைப் போன்ற, பறக்க முடியாத தம் சிறிய குஞ்சுகளைத் தழுவிக்கொண்டு, சிறிய கால்களையும் கரிய கழுத்தையும் உடைய காடைப்பறவை
காட்டில் சென்று தங்கும். இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறும் மருத
நிலத்தின் புன்செய் நிலங்களைக் கடந்து செல்லுங்கள்.
மருத நிலக் கழனிகளில் காணும்
காட்சிகள்
நாற்று நடுதல்
. . . . . . . . . . . . . . . . . . . . . . மென் தோல்
மிதி உலைக் கொல்லன் முறி கொடிற்றன்ன
கவைத் தாள் அலவன் அளற்று அளை சிதைய,
பைஞ் சாய் கொன்ற மண் படு மருப்பின்
கார் ஏறு பொருத கண் அகன் செறுவின், 210
உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர்
முடி நாறு அழுத்திய நெடு நீர்ச் செறுவில்,
அருஞ்சொற்பொருள்:
206. மென்
தோல் – கொல்லன் துருத்திக்கு
ஆகுபெயர்
207. மிதி
உலை
= மிதித்து ஊதுகின்ற உலை;
முறி கொடிற்றன்ன = முறிந்த
குறடு போன்ற
208. கவைத்
தாள் = பிளவுபட்ட கால்கள்;
அலவன் = நண்டு; அளறு
= சேறு; அளை = வளை;
சிதைய = அழிய
209. பைஞ்
சாய் = பசுங்கோரை; மருப்பு
= கொம்பு
210. கார்
= கரிய; ஏறு = காளை;
பொருத = போரிட்ட; கண்
= இடம் ; அகன் = அகன்ற;
செறு = வயல்
211. உழாஅ
நுண் = உழாமல் உண்டான
நுண்ணிய; தொளி = சேறு;
நிரவுதல் = சமனாதல்; வினைஞர்
= உழவர்
212. முடி
நாறு = முடித்துக் கொண்டுவந்த;
நெடு நீர் = நிறைய
நீர் உள்ள; செறு
= வயல்
பதவுரை:
206. மென் தோல் = முல்லைநிலத்தைக் கடந்த
பிறகு, மெல்லிய தோலாலான
207. மிதி உலைக் கொல்லன் முறி கொடிற்றன்ன = மிதித்து
ஊதுகின்ற உலையைக் கொண்ட,
கொல்லனுடைய முறிந்த கொறடை
ஒத்த
208. கவைத் தாள் அலவன் அளற்று அளை சிதைய = கவர்த்த
காலையுடைய நண்டின் சேற்று
வளை அழியும்படி
209. பைஞ் சாய் கொன்ற மண் படு மருப்பின் = பசிய
கோரைப்புல்லைக் குத்தி அழித்த
மண்படிந்த கொம்புகளையுடைய
210. கார் ஏறு பொருத கண் அகன் செறுவின் = கரிய
எருதுகள் போரிட்ட இடம்
அகன்ற வயல்களில்
211. உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர் = உழாமல் உண்டான நுண்ணிய சேற்றை சமப்படுத்திய உழவர்
212. முடி நாறு அழுத்திய நெடு நீர்ச் செறுவில் = முடிந்து
கொண்டுவந்த நாற்றை அழுத்தி
நட்ட நீர் நீர்
நின்ற வயலில்
கருத்துரை:
மருத நிலத்தின் புன்செய் நிலங்களைக்
கடந்து சென்ற பிறகு, மருத
நிலத்தின் நன்செய் நிலங்கள்
இருக்கும் பகுதிக்குச் செல்வீர்கள்.
அங்குள்ள வயல்களில் நண்டுகள்
இருக்கும். அந்த நண்டுகளின்
கால்கள் கொல்லன் பயன்படுத்தும்
கொறடைப் போல் பிளவுபட்டிருக்கும். அந்த
வயல்களில் எருதுகள் போரிடும்பொழுது,
தம் கொம்புகளால் பசிய
கோரைப்புல்லை குத்தி அழிக்கும்;
சேற்றில் உள்ள நண்டுகளின்
வளைகள் அழியும். அவ்வாறு
எருதுகள் போரிட்ட நிலத்தில்
உள்ள மேடு பள்ளங்களைச்
சமன்செய்து, உழவர்கள் நாற்றுகளை
நடுவர்.
நெல் விளைதற் சிறப்பு
களைஞர் தந்த கணைக் கால் நெய்தல்
கள் கமழ் புதுப் பூ முனையின், முள் சினை
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளிக் 215
கொடுங் கால் மா மலர் கொய்து கொண்டு, அவண
பஞ்சாய்க் கோரை பல்லின் சவட்டி,
புணர் நார்ப் பெய்த புனைவு இன் கண்ணி
ஈருடை இருந் தலை ஆரச் சூடி,
பொன் காண் கட்டளை கடுப்ப, கண்பின் 220
புன் காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்,
இரும்பு வடித்தன்ன மடியா மென் தோல்,
கருங் கை வினைஞர் காதல் அம் சிறாஅர்
பழஞ் சோற்று அமலை முனைஇ, வரம்பில்
புது வை வேய்ந்த கவி குடில் முன்றில் 225
அவல் எறி உலக்கைப் பாடு விறந்து, அயல
கொடு வாய்க் கிள்ளை படு பகை வெரூஉம்,
நீங்கா யாணர், வாங்கு கதிர்க் கழனி
அருஞ்சொற்பொருள்:
213: களைஞர் = களை பறிப்போர்; கணைக்கால் = பருத்த தாள்; நெய்தல் = ஒரு செடி
214. முனையின் = வெறுத்தால்; முள் சினை = முள் நிறைந்த கிளைகளையுடைய
215. முகை = அரும்பு; தகடு = இதழ்; பிறழ் வாய் = விரிந்த வாய்; முள்ளி = நீர் முள்ளி
216. கொடுங்கால் = வளைந்த காம்பு; மாமலர் = பெரிய மலர், கரிய மலர்; அவண = அங்கே (அந்நிலத்தில்)
217. பஞ்சாய்க் கோரை = கோரையில் ஒரு வகை; பல்லின் = பல்லால்; சவட்டி = கிழித்து
218. புணர் நார்ப் பெய்த = கிழித்து முடிந்த நாரால் தொடுத்த; புனைவு = கட்டுகை; இன் = இனிய; கண்ணி = தலையில் சூடும் மாலை
219. ஈருடை = ஈரமுள்ள; இருந்தலை = கரிய தலை; ஆர = நிறைய
220. பொன் காண் = பொன்னை உரைத்து மாற்று காணும்; கட்டளை = உரைகல்; கடுப்ப = போல; கண்பின் = சம்பங்கோரை
221. புன் காய் = சிறிய காய்; சுண்ணம் = பொடி, தாது; புடைத்தல் = அடித்தல் (பூசிக்கொள்ளுதல்)
222. மென் தோல் = மென்மையான தோல்
223. கருங்கை =வலிய தொழில் செய்யும் கை; வினைஞர் = தொழில்புரிவோர்; காதல் அம் சிறாஅர் =காதலுக்குக் காரணமான அழகிய சிறுவர்
224. அமலை = சோற்றுக் கட்டி; முனைஇ = வெறுத்ததால்; வரம்பு = வரப்பு
225. வை = வைக்கோல்; கவித்தல் = மூடுதல்; குடில் = குடிசை; முன்றில் = முற்றம்
226. எறிதல் = இடித்தல்; பாடு = ஓசை; விறந்து = நிறைந்து; அயல = அயலில்
227. கொடு வாய் =வளைந்த; கிள்ளை = கிளி; படு பகை = நேர்ந்த பகை; வெரூஉம் = அஞ்சும்
228. யாணர் = புது வருவாய்; வாங்கு =வளைந்த; கழனி = வயல்
பதவுரை:
213. களைஞர் தந்த கணைக் கால் நெய்தல் = களைபறிப்போர் களைந்து எறிந்த பருத்த தாளினையுடைய நெய்தலின்
214. கள் கமழ் புதுப் பூ முனையின், முள் சினை = தேன் நாறுகின்ற புதிய பூவை வெறுத்ததால், முள்ளையுடைய கொம்புகளையுடைய
215. முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி = அரும்புகள் சூழ்ந்த இதழ்களையுடைய விரிந்த வாயையுடைய முள்ளியின்
216. கொடுங் கால் மா மலர் கொய்து கொண்டு, அவண = வளைந்த காம்பினையுடைய கரிய பூவைப் பறித்துக்கொண்டு, அந்த நிலத்தில் உள்ள
217. பஞ்சாய்க் கோரை பல்லின் சவட்டி = பஞ்சாய்க் கோரையைப் பல்லால் மென்று கிழித்து
218. புணர் நார்ப் பெய்த புனைவு இன் கண்ணி = முடிந்த நாரால் தொடுத்த இனிய மாலையை
219. ஈருடை இருந் தலை ஆரச் சூடி = ஈரமான கரிய தலை நிறையும்படி சூடி
220. பொன் காண் கட்டளை கடுப்ப, கண்பின் = பொன்னை உரைத்து மாற்றுகாணும் கட்டளைக்கல்லைப் போன்ற சம்பங்கோரையின்
221. புன் காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின் = சிறிய காயில் தோன்றின தாதை பூசிக்கொண்ட மார்பினையும்,
222. இரும்பு வடித்தன்ன மடியா மென் தோல் = இரும்பை வடித்துத் தகடாக்கினாற்போல் சுருக்கமில்லாத மெல்லிய தோலினையும் உடைய
223. கருங் கை வினைஞர் காதல் அம் சிறாஅர் = வலிய கைகளால் தொழில்புரிவோரின் அன்பு மிக்க அழகிய
சிறுவர்கள்
224. பழஞ் சோற்று அமலை முனைஇ, வரம்பில் = பழைய சோற்றுக்கட்டியை வெறுத்து, வரம்பிடத்தே
225. புது வை வேய்ந்த கவி குடில் முன்றில் = புதிய வைக்கோலால் வேய்ந்த கவிந்த குடிலின் முற்றத்தில்
226. அவல் எறி உலக்கைப் பாடு விறந்து, அயல = அவலை இடிக்கும் உலக்கையின் ஓசை மிகுதலால், அதற்கு அருகில் வாழும்
227. கொடு வாய்க் கிள்ளை படு பகை வெரூஉம் = வளைந்த வாயையுடைய கிளிகள் தமக்கு நேர்ந்த பகையாகக் கருதி அஞ்சும்
228. நீங்கா யாணர், வாங்கு கதிர்க் கழனி = இடையறாத புதுவருவாயினையுடைய வளைந்த கதிர்களையுடைய கழனியிடத்து,
கருத்துரை:
நன்செய் நிலத்தில் பயிர் நன்றாக
விளைந்திருந்தாலும், அவற்றோடு நெய்தலும் கொடிவிட்டு மலர்ந்திருக்கும். களைபறிக்கும் மகளிர் களைந்து எறிந்த பருத்த தாளினையுடைய நெய்தல் மலர்களைத் தம் மக்களிடம் கொடுப்பர். அச்சிறுவர்கள் அவற்றை வெறுத்து, முள்ளுடைய கொம்புகளில், அரும்புகள் சூழ்ந்த இதழுடைய முள்ளிப் பூவைப் பறித்து, அங்கிருந்த பஞ்சாய்க் கோரையைப் பிடுங்கி, அதை பல்லால் கடித்து நாராக்கி, முள்ளி மலர்களை மாலையாகத் தொடுத்துத் தங்கள் தலையில் சூடிக்கொள்வர். அவர்கள், சம்பங்கோரையின் காயில் உள்ள தாதைத் தம் மார்பில்
பொன்னை உரைத்து, மாற்று காணப் பயன்படும் உரைகல் போல்
தோன்றும்படிப் பூசிக்கொள்வர். அச்சிறுவர்கள் தம் வீட்டில் உள்ள பழைய சோற்றுருண்டையை வெறுத்து, வரம்பில், புதிய வைக்கோலால் வேய்ந்த குடிசையின் முற்றத்தில்
இருக்கும் உரலில், அவித்த நெல் இட்டு, அவலாக இடித்து உண்பர். அவர்கள் அவல் இடிக்கும்பொழுது உலக்கையின் ஓசை
மிகுந்ததால், அந்தக் குடிசைக்கு அருகில் வாழும் கிளிகள் தமக்குப்
பகை நேர்ந்தது என்று கருதி அஞ்சும். அத்தகைய குறையாத புதுவருவாய் உடைய, நிறைய நெற்கதிர் விளையும் வயல்கள் சூழ்ந்த மருதநிலப் பகுதி அது.
நெல் அரிந்து கடா விடுதல்
கடுப்புடைப் பறவைச் சாதி அன்ன,
பைது அற விளைந்த பெருஞ் செந்நெல்லின் 230
தூம்புடைத் திரள் தாள் துமித்த வினைஞர்
பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல்,
பலி பெறு வியன் களம் மலிய ஏற்றி,
கணம் கொள் சுற்றமொடு கை புணர்ந்து ஆடும்
துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவை போல் 235
சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின்
குழுமு நிலைப் போரின் முழு முதல் தொலைச்சி,
பகடு ஊர்பு இழிந்த பின்றை, துகள் தப,
வையும் துரும்பும் நீக்கி, பைது அற,
குட காற்று எறிந்த குப்பை, வட பால் 240
செம்பொன் மலையின், சிறப்பத் தோன்றும்
தண் பணை தழீஇய தளரா இருக்கை
அருஞ்சொற்பொருள்:
229. கடுப்பு = நோவு; கடுப்புடை பறவை = கடுக்கும் தன்மையைக் கொடுக்கும் பறவை (குளவி); சாதி =திரள், கூட்டம்; அன்ன = போல
230. பைது = பசுமை; பைது அற = பசுமை அறும்படி
231. தூம்பு = உள்துளை; தாள் = கால்; துமித்த = அறுத்த; வினைஞர் - இங்கு உழவர்களைக் குறிக்கிறது
232. மருது = மருதமரம்; ஓங்கு = உயர்ந்த; சினை = கிளை; நீழல் = நிழல்
233. பலி = இரவலர் பிச்சை; மலிய = நிறைய; ஏற்றி = போராக உயர்த்தி
234. கணம் = கூட்டம்; கை புணர்ந்து = கை கோத்து
235. துணங்கை = ஒருவகைக் கூத்து; துகில் = ஆடை
236. சிலம்பி = சிலந்தி; வால் = வெண்மை; வலந்த = பின்னப்பட்ட; மருங்கு = பக்கம்
237. குழுமு நிலைப்போரின் = கோபுரம்போல் குவிந்திருக்கும் போர்களின்; முழு முதல் = மரத்தின் அடிப் பகுதி
238. பகடு = எருது; பகடு ஊர்பு = கடாவிடுதல் (நெற்போர் முதலியவைகளைக் கடாக்கொண்டு மிதிப்பித்தல்); பின்றை = பின்னர்; துகள் = குற்றம்; தப =நீங்க
239. வை = வைக்கோல்; துரும்பு = கூளம்; பைது அற = ஈரம்போக
240. குட காற்று =மேற்குத்திசையிலிருந்து வரும் காற்று; எறிந்த = தூற்றி எடுத்த; குப்பை =நெற்குவியல்; வட பால் =வட திசை
241. சிறப்ப = சிறந்ததாக
242 தண்பணை = மருத நிலம்; தழீஇய = சூழ்ந்த; தளரா = விலகாத; இருக்கை = குடியிருப்பு
பதவுரை:
229. கடுப்புடைப் பறவைச் சாதி அன்ன = கொட்டினால் கடுக்கும் குளவித் கூட்டத்தை ஒத்த
230. பைது அற விளைந்த பெருஞ் செந்நெல்லின் = பசுமை அறும்படி முற்றின பெரிய செந்நெல்லின்
231. தூம்புடைத் திரள் தாள் துமித்த வினைஞர் = உள்துளை உடைய திரண்ட தாளை அறுத்த உழவர்
232. பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல் = பாம்பு வாழும் மருதமரத்தின் உயர்ந்த கிளைகளின் நிழலில்
233. பலி பெறு வியன் களம் மலிய ஏற்றி = இரவலர் பிச்சை பெறும் அகன்ற களங்களில் நிறைய ஏற்றி
234. கணம் கொள் சுற்றமொடு கை புணர்ந்து ஆடும் = மிகப் பெரிய சுற்றத்தோடு கைகோர்த்து ஆடுகின்ற
235. துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவை போல் = துணங்கைக் கூத்தில் அழகிய பூதங்கள் வெண்ணிற ஆடை உடுத்தி நிற்பதுபோல்
236. சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின் = சிலந்தியின் வெண்மையான நூல் சூழ்ந்த பக்கத்தினையுடைய
237. குழுமு நிலைப் போரின் முழு முதல் தொலைச்சி = கோபுரம்போல் குவிந்திருக்கும் போர்களின் அடியைப் பிரித்து விரித்து,
238. பகடு ஊர்பு இழிந்த பின்றை, துகள் தப = கடாவிட்ட பின்னர், தூசு போக,
239. வையும் துரும்பும் நீக்கி, பைது அற = வைக்கோலையும் கூளத்தையும் நீக்கி, ஈரம் உலர
240. குட காற்று எறிந்த குப்பை, வட பால் = மேற்குத் திசைகாற்றில் தூற்றி எடுத்த நெற்குவியல், வட திசைக்கண்
241. செம்பொன் மலையின், சிறப்பத் தோன்றும் = சிவந்த பொன்மலை எனப்படும் மேரு மலையைக் காட்டிலும், சிறந்ததாகத் தோன்றும்
242. தண் பணை தழீஇய தளரா இருக்கை = மருத நிலம் சூழ்ந்த இடத்தைவிட்டு வேற்றிடம் போக விரும்பாத குடியிருப்புகளில்
கருத்துரை:
கொட்டினால் கடுக்கும் குளவிக் கூட்டத்தை ஒத்த முற்றிய பெரிய செந்நெல்லின் தாளை
அறுத்த உழவர்கள், அவற்றைப் பாம்புகள் வாழும் மருத மரத்தின் கிளைகளின்
நிழலில் உள்ள நெற்களத்தில் கொண்டுவந்து போட்டுப் போராகக் குவிப்பார்கள்.
தங்களுடைய பெரிய சுற்றத்துடன் கைகோர்த்து ஆடுகின்ற
துணங்கைக் கூத்தில், அழகிய பூதங்கள் வெண்ணிற ஆடை உடுத்தி நிற்பதுபோல், குவித்துள்ள நெற்போரின்மேல் படிந்திருக்கும் சிலந்தி பின்னிய வலையை உழவர்கள்
நீக்குவார்கள். பிறகு, உழவர்கள் போர்களைப் பிரித்து எடுத்துப் பரப்பி, கடாவிட்டுப் போரடித்து, நெல்லையும் பதரையும், கூளத்தையும் வைக்கோலையும் தனித்தனியாகப் பிரித்து, மேல்காற்றில் தூற்றி எடுத்த நெற்குவியல், வடதிசையில் உள்ள மேரு மலைபோல் குவிந்திருக்கும். நெற்களத்துக்கு வரும் பொருநர்களுக்கும் இரவலர்களுக்கும் உழவர்கள் நெல்லைப்
பரிசாக அளிப்பர். இத்தகைய வளமான மருத நிலம் சூழ்ந்த குடியிருப்புகளில்
வாழும் மக்கள், அங்கிருந்து வேறு இடங்களுக்குச் செல்ல
விரும்பமாட்டார்கள்.
மருத நிலத்து ஊர்களில் பெறும்
உணவுகள்
பகட்டு ஆ ஈன்ற கொடு நடைக் குழவிக்
கவைத் தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்,
ஏணி எய்தா நீள் நெடு மார்பின், 245
முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின்,
குமரி மூத்த கூடு ஓங்கு நல் இல்,
தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த
ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர்
தளர் நடை வருத்தம் வீட, அலர் முலைச் 250
செவிலி அம் பெண்டிர்த் தழீஇ, பால் ஆர்ந்து,
அமளித் துஞ்சும் அழகுடை நல் இல்;
தொல் பசி அறியாத் துளங்கா இருக்கை
மல்லல் பேர் ஊர் மடியின், மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி 255
மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்.
அருஞ்சொற்பொருள்:
243. பகடு = எருது; ஆ = பசு; ஈன்ற = பெற்ற; பகடு ஆ ஈன்ற = காளைகளோடு கூடிய பசு பெற்ற; கொடு நடைக் குழவி = வளைந்து நடக்கும் கன்று
244. கவைத் தாம்பு = மாடுகட்டும் நீண்ட கயிறு; காழ் = கட்டுத்தறி; அல்குல் = பக்கம்
245. எய்தா = அடையாத (எட்டாத); நீள் நெடு மார்பு = மிக நெடிய மார்பு (மிக நெடிய குதிரின் உட்பக்கம்)
246. முகடு = உச்சி; துமித்த = திறந்த
247. குமரி மூத்த = இளமை மாறாமல் முதிர்ந்த; கூடு = குதிர்; ஓங்கு = உயர்ந்த;
248. தச்சச் சிறார் = தச்சர்களின் பிள்ளைகள்; நச்சப் புனைந்த =விரும்பும்படி செய்த
249. ஊரா = ஊர்ந்து செல்லப்
பயன்படாத
250. தளர் நடை = தளர்ந்த நடை; வீட = நீங்க; அலர் முலை = பால் சுரக்கும் முலை
251. அம் = அழகிய; தழீஇ = தழுவி; ஆர்ந்து = உண்டு
252. அமளி = படுக்கை; துஞ்சும் = தூங்கும்
253. தொல் பசி = தொடர்ந்து வரும் பசி; துளங்கா = அசையாத (குடி பெயராத); இருக்கை = குடியிருப்புகள்
254. மல்லல் = வலமை; மடியின் = தங்குவீராயின்; மடியா = சோம்பல் இல்லாத;
255. வினைஞர் = உழவர்; வல்சி = உணவு (சோறு)
256. அளகு = பெட்டைக்கோழி; வாட்டு = பொரியல்
பதவுரை:
243. பகட்டு ஆ ஈன்ற கொடு நடைக் குழவி = எருதுகளோடு கூடிய பசுக்கள் ஈன்ற வளைந்து நடக்கும் கன்றுகளைக் கட்டிய
244. கவைத் தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல் = நீண்ட கயிறு கட்டப்பட்ட தறிகள் உள்ள பக்கத்தினையும்,
245. ஏணி எய்தா நீள் நெடு மார்பின் = ஏணிக்கும் எட்டாத
மிக நெடிய உட்பகுதியையும்,
246. முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின் = தலையைத் திறந்து உள்ளே சொரியப்பட்ட பழைய நெல்லையும் உடைய,
247. குமரி மூத்த கூடு ஓங்கு நல் இல் = இளமை மாறத முதிர்ந்த கூடுகள் உயர்ந்து நின்ற நல்ல இல்லங்களையும்
248. தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த = தச்சர்களின் பிள்ளைகளும் விரும்பும்படி அழகாகச் செய்யப்பட்ட
249. ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர் = ஏறி ஊர்வதற்குப் பயன்படாத நல்ல சிறு தேரை உருட்டிக்கொண்டு
திரிந்த பிள்ளைகள்
250. தளர் நடை வருத்தம் வீட, அலர் முலை = தமது தளர் நடையால் உண்டான வருத்தம்
நீங்கும்படி, பால் சுரக்கும் முலையினையுடைய
251. செவிலி அம் பெண்டிர்த் தழீஇ, பால் ஆர்ந்து = செவிலித் தாயாராகிய அழகிய மகளிரைத் தழுவிக்கொண்டு, பாலை நிரம்ப உண்டு,
252. அமளித் துஞ்சும் அழகுடை நல் இல் = தமது படுக்கையில் துயிலும் அழகிய நல்ல இல்லினையும் உடைய
253. தொல் பசி அறியாத் துளங்கா இருக்கை = நீடித்திருக்கும் பசியை அறியாத நிலைகெடாத குடியிருப்புகள் நிறைந்த
254. மல்லல் பேர் ஊர் மடியின், மடியா = வளம் மிக்க பெரிய ஊரின்கண் தங்குவீராயின், சோம்பல் இல்லாத
255. வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி = உழவர் தந்த
வெண்மையான நெற்சோற்றை
256. மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர் = மனையில் வாழும் பெட்டைக்கோழியைக் கொன்று சமைத்த பொரியலோடு பெறுவீர்கள்.
கருத்துரை:
அந்த மருத நிலத்தில் காளையோடு கூடிய
பசு ஈன்ற, வளைந்து நடக்கும் கன்றுகளை நீண்ட கயிறுகளுடன்
சேர்த்துக் கட்டுவதற்கான முளைகள் வீட்டின் ஒரு பக்கம் இருக்கும்.
வீட்டில் இளமை மாறாமல் முதிர்ந்த குதிர் இருக்கும். அந்தக் குதிர் ஏணிவைத்து ஏறினாலும் எட்ட முடியாத உயரமுடையது. அதன் தலையைத் திறந்து, பழைய நெல் கொட்டப்பட்டு நிறைந்திருக்கும். தச்சர்களின் சிறுவர்களும் விரும்புமாறு செய்யப்பட்ட ஊர்ந்து செல்வதற்குப்
பயன்படாத தேரை உருட்டி விளையாடும் பிள்ளைகள், தங்கள் தளர்ந்த நடையால் தோன்றிய வருத்தம் தீர, செவிலித் தாயாரிடம் பால் அருந்துவர். பால் உண்டு தமது படுக்கையில் படுத்து உறங்குவர். இத்தகைய காட்சிகள் நடைபெறும் வீடுகளையுடைய பசி அறியாத குடியிருப்புகள் நிறைந்த
வளம் மிக்க பெரிய ஊர்களில் தங்கினால், சோம்பல் இல்லாத உழவர்கள் விளைத்துத் தந்த வெண்ணெல் சோற்றைக் கோழிப் பொரியலோடு
பெறுவீர்கள்.
சிறப்புக்
குறிப்பு:
“வளைந்து நடக்கும் கன்றுகள்” என்பது இளமை மிகுதியால் கால்களை நேராக வைத்து நடக்க இயலாத கன்றுகள் என்பதைக்
குறிக்கிறது.
“இளமை மாறாமால் முதிர்ந்த குதிர்” என்பது குதிருக்குள்ளே பயனுள்ள பொருட்கள் இருந்தாலும் அவற்றை எவரும்
பயன்படுத்தவில்லை என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது. மழைபெய்யத் தவறினாலோ அல்லது வேறு காரணங்களாலோ விளைச்சல் இல்லையென்றால் பயன் படுத்துவதற்காகக்
குதிரில் நெல்லை உழவர்கள் சேமித்து வைப்பது வழக்கம். இந்த மருத நிலத்தில் எப்பொழுதுமே விளைச்சல் தவறியதே இல்லை. அதனால், குதிரில் உள்ள நெல் பயன் படுத்தப்படாமல் உள்ளது, இது, இந்த மருத நிலத்தின் வளத்திற்கும் உழவர்களின்
உழைப்புக்கும் சான்றாக உள்ளது. வறியவர்களுக்கு
ஒன்றும் கொடுத்து உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகுடையவள் திருமணமாகாமல் தனித்து வாழ்ந்து முதுமையுற்றதைப் போன்றது
என்று,
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று. (குறள் - 1007)
என்ற குறளில் வள்ளுவர் குறிப்பிடுகிறார். இங்கு, ”இளமை மாறாமல் முதிர்ந்த குதிர்” என்று புலவர் கூறுவது, “மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று.” என்று வள்ளுவர் கூறுவதைப் போன்றது.
தச்சர்கள் தேர் செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய சிறுவர்கள் அவர்கள் செய்யும் பல தேர்களைப் பார்த்திருப்பார்கள். ஆகவே, ”தச்சர்களின் சிறுவர்கள் விரும்புமாறு செய்யப்பட்ட தேர்” என்பது அவர்கள்
பயன்படுத்திய தேர்கள் மிகச் சிறப்பாகச் செய்யப்படவை என்பதைக் குறிக்கிறது. இது மருத நிலத்தில் வாழ்பவர்களின் செல்வ வளத்துக்கு ஒரு சான்று.
”சிறுவர்கள் செவிலித் தாயாரிடம் பால் குடித்தார்கள்” என்று புலவர் கூறுவது, மருத நிலத்தில் உள்ளவர்களின் இல்லங்களில் பிள்ளைகளைக்
கவனித்துக்கொள்வதற்குச் செவிலித்தாயார் இருந்தார்கள் என்பதைக் குறிக்கிறது. மருத நிலத்தில்
வாழ்பவர்களின் செல்வச் செழிப்புக்கு இது மற்றுமொரு சான்று.
ஆலைகளில் கருப்பஞ் சாறும் கட்டியும்
அருந்துதல்
மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து
அணங்குடை யாளி தாக்கலின், பல உடன்
கணம் சால் வேழம் கதழ்வுற்றாஅங்கு,
எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை 260
விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும்,
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசைமின்,
அருஞ்சொற்பொருள்:
257. கழை = மூங்கில்; அடுக்கம் = பக்க மலை
258. அணங்குதல் = வருத்துதல்; யாளி = யானையைவிட வலிமையான விலங்கு
259. கணம் = கூட்டம்; சாலுதல் = பொருந்துதல்; வேழம் = யானை; கதழ்வுறுதல் = கலங்கிக் கதறுதல்
260. சிலைக்கும் = ஒலிக்கும், ஆரவாரிக்கும்; துஞ்சா = ஓயாத; கம்பலை = கதறி அழும் ஒலி
261. விசயம் = கருப்பஞ்சாறு, சருக்கரை; அடூஉம் = சமைக்கும் (கட்டியாகக் காய்ச்சும்)
262. தீம் = இனிய; மிசைதல் = உண்ணுதல், அருந்துதல்
பதவுரை:
257. மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து = முகில்கள் விளையாடும் மூங்கில் வளர்கின்ற பக்கமலையில்
258. அணங்குடை யாளி தாக்கலின், பல உடன் =(தம்மை)வருத்துதலையுடைய யாளி தாக்குகையால், பலவும் கூடிக்
259. கணம் சால் வேழம் கதழ்வுற்றாஅங்கு = கூட்டமான யானைகள் கலங்கிக் கதறினாற் போன்று,
260. எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை = ஆலை ஆரவாரிக்கும் ஓயாத ஓசையுடைய
261. விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும் = கருப்பஞ்சாற்றைக் (கட்டியாகக்)காய்ச்சும் புகை சூழ்ந்த ஆலைதோறும்,
262. கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசைமின் = கரும்பினது இனிய சாற்றை விருப்பமுடையீராய் பருகுவீர்
கருத்துரை:
ஓயாது மழை பொழியும், மூங்கில் வளரும் பக்கமலையில், தம்மை வருத்தும்
யாளி தாக்கியதால், யானைக் கூட்டங்கள் கலங்கிக் கதறுவதைப்போல், கரும்பின் சாறு பிழியும் எந்திரம் ஒலிக்கும். மேலும், அந்த எந்திரம் இருக்கும் ஆலையில் கருப்பஞ்சாற்றைக்
காய்ச்சுவதால், அங்குப் புகை சூழ்ந்திருக்கும். நீங்கள் அங்குச் சென்று, விருப்பம்
உடையவர்கள் கருப்பஞ்சாற்றைப் பருகுவீர்களாக!
வலைஞர் குடியிருப்பு
வேழம் நிரைத்து, வெண் கோடு விரைஇ,
தாழை முடித்து, தருப்பை வேய்ந்த
குறியிறைக் குரம்பை, பறியுடை முன்றில், 265
கொடுங் கால் புன்னைக் கோடு துமித்து இயற்றிய
பைங் காய் தூங்கும் பாய் மணல் பந்தர்,
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,
புலவு நுனைப் பகழியும் சிலையும் மான,
செவ் வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும் 270
மை இருங் குட்டத்து மகவொடு வழங்கி,
கோடை நீடினும் குறைபடல் அறியாத்
தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும்
கொடு முடி வலைஞர் குடி வயின் சேப்பின்
அருஞ்சொற்பொருள்:
263. வேழம் = மூங்கில்; நிரைத்து = வரிசையாக வைத்து; வெண்கோடு = வெண்மையான கிளை; விரைஇ = கலந்து
264. தருப்பை = ஒருவகைப் புல்
265. குறி = குறுகிய; இறை = மேற்கூரையின் தாழ்ந்த பாகம்; குரம்பை = குடிசை; பறி = மீன் பிடிக்கும் கருவி; முன்றில் = முற்றம்
266. கொடுங்கால் = வளைந்த கால்; புன்னை = புன்னை மரம்; கோடு = கிளை; துமித்து = வெட்டி; இயற்றிய = செய்த (நட்ட)
267. பைங்காய் = பசுமையான காய்; தூங்கும் = தொங்கும்; பாய் மணல் = பரவிய மணல்; பந்தர் = பந்தல்
268. கிளை = சுற்றம்; துவன்றி = நிறைந்திருந்து
269. புலவு = புலால்; நுனை = முனை; பகழி =அம்பு; சிலை = வில்; மான = போல
270. செவ்வரி = சிவந்த வரிகள்; கயல் = கயல் மீன்; பச்சிறா = பசிய இறா
271. மை = கருமை; இரும் = பெரிய (நீர் நிறைந்த); குட்டம் = குளம்; வழங்கி = நடந்து (இறங்கி)
273. தோள் தாழ் குளத்த = நீரின் ஆழம் காட்ட நீருக்குள் இறங்கி உயர்த்திய கையும் அமிழ்ந்துபோகும்
அளவுக்கு ஆழம்; கோடு = கரை
274. கொடு முடி = வளைந்த முடிச்சுகள்; வலைஞர் = மீனவர்; சேப்பின் = தங்கினால்
பதவுரை:
263. வேழம் நிரைத்து, வெண் கோடு விரைஇ = மூங்கிலை நெடு வரிசையாக நட்டு, வெண்மையான மரக்கொம்புகளைக் குறுக்காகப் பரப்பிவைத்து,
264. தாழை முடித்து, தருப்பை வேய்ந்த = தாழைநாரால் இரண்டையும் முடித்துத் தருப்பைப்புல்லை அதன் மேல் வேய்ந்த
265. குறியிறைக் குரம்பை, பறியுடை முன்றில் = குறுகிய கூரைப்பகுதியையுடைய குடிசையின், மீன்பிடிக்கும் பறியையுடைய முற்றத்தில்
266. கொடுங் கால் புன்னைக் கோடு துமித்து இயற்றிய = வளைந்த காலையுடைய புன்னை மரத்தின் கொம்புகளை வெட்டி நட்டுப் போடப்பட்ட
267. பைங் காய் தூங்கும் பாய் மணல் பந்தர் = பசுமையான காய்கள் தொங்கும், பரப்பப்பட்ட மணலையுடைய பந்தலில்,
268. இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி = இளையவர்களும் முதியவர்களும் சுற்றத்துடன் நிறைந்திருந்து
269. புலவு நுனைப் பகழியும் சிலையும் மான = புலால் நாறும் முனையினையுடைய அம்பையும் வில்லையும் ஒப்பச்
270. செவ் வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும் = சிவந்த வரியினையுடைய கயல்களோடு பசிய இறாப் பிறழும்,
271. மை இருங் குட்டத்து மகவொடு வழங்கி = கரிய பெரிய ஆழமான குளங்களில் பிள்ளைகளோடு நீந்தி,
272. கோடை நீடினும் குறைபடல் அறியா = கோடைக்காலம் நீட்டித்து நின்றதாயினும் வற்றாத,
273. தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும் = தோள்களும் அமிழும் அளவுக்கு நீருள்ள குளங்களின் கரையைக் காத்திருக்கும்,
274. கொடு முடி வலைஞர் குடி வயின் சேப்பின் = வளைந்த முடிகளையுடைய வலைகளையுடைய மீனவர் குடியிருப்பில் தங்குவீராயின்
கருத்துரை:
பாலை, முல்லை, குறிஞ்சி, மருதம் ஆகிய நிலப்பரப்புகளைக் கடந்துசென்ற பிறகு, நெய்தல் நிலம் உள்ள பகுதிக்குச் செல்வீர்கள். அங்கு மீன்களை வளர்ப்பதற்கு ஒரு குளமும், குடி நீருக்காக ஒரு குளமும், குளிப்பதற்காக ஒரு
குளமும் இருக்கும். இந்தக் குளங்களில், கோடைக் காலத்திலும் ஓர் ஆளின் தோள் உயரத்திற்குமேல் நீர் இருக்கும். அங்கு, மூங்கிற் கழிகளை வரிசையாக நட்டு, வெண்மையான மரக்கொம்புகளை குறுக்காகப் பரப்பிவைத்து, தாழைநாரால் இரண்டையும் முடித்துத் தருப்பைப்புல்லை, அதன் மேல் வேய்ந்து வலைஞர்களின் குடிசைகள் கட்டப்பட்டிருக்கும். குறுகிய கூரைப்பகுதியையுடைய அந்தக் குடிசைகளின் முற்றத்தில் மீன்பிடிக்கும் பறி என்னும் கருவி
இருக்கும். அந்த முற்றத்தில், புன்னை மரத்தின் கொம்புகளை வெட்டி நட்டு, மணல் பரப்பப்பட்ட பந்தலில் பசுமையான
காய்கள் தொங்கும். அந்தப் பந்தலில் இளையவரும் முதியவர்களும் திரண்ட பிறகு, அனைவரும் கயல் மீனும் இறால் மீனும் புரளும் ஆழமான குளத்திற்குச் சென்று மீன் பிடிப்பர். குடிநீர்க் குளத்தில் எவரும் இறங்காதவாறு, வலைஞர்களில் சிலர் காவல் காப்பர்.
வலைஞர் குடியில் பெறும் உணவு
அவையா அரிசி அம் களித் துழவை 275
மலர் வாய்ப்
பிழாவில் புலர ஆற்றி,
பாம்பு உறை
புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம் புற நல் அடை
அளைஇ, தேம் பட
எல்லையும் இரவும்
இரு முறை கழிப்பி,
வல் வாய்ச்
சாடியின் வழைச்சு அற விளைந்த, 280
வெந் நீர், அரியல் விரல் அலை, நறும் பிழி,
தண் மீன் சூட்டொடு, தளர்தலும் பெறுகுவிர்.
அருஞ்சொற்பொருள்:
275. அவையா அரிசி = நன்றாகக் குத்தித் தீட்டப்படாத அரிசி; துழவை = துழாவிய கூழ்
276. மலர் வாய் = அகன்ற வாய்; பிழா = தட்டு; புலர = வெப்பம் போக;
277. குரும்பி = ஈசல், கரையான்; ஏய்க்கும் = ஒக்கும்
278. பூம் புற = பொலிவுடைய புறம்; அடை = நெல் முளை; அளைஇ = கலந்து; தேம் பட = இனிமையுண்டாதற் பொருட்டு
279. எல்லை = பகல்; கழிப்பி = போக்கி
280. சாடி = தாழி ; வழைச்சு = கள் நாற்றம்
281. அரியல் = கள்; நறும் பிழி = மணமுள்ள கள்
282. சூட்டு = சுடப்பட்டது; பெறுகுவிர் = பெறுவீர்கள்
பதவுரை:
275. அவையா அரிசி அம் களித் துழவை = நன்றாகக் குத்தித் தீட்டப்படாத அரிசியை அழகிய களியாகத் துழாவிச் சமைத்ததை
276. மலர் வாய்ப் பிழாவில் புலர ஆற்றி = அகன்ற வாயையுடைய தட்டில் உலரும்படி ஆற்றி
277. பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் = பாம்பு வாழும் புற்றிலிருக்கும் கரையானைப் போன்ற
278. பூம் புற நல் அடை அளைஇ, தேம் பட = அழகிய புறத்தினையுடைய நல்ல நெல்முளையை இடித்து அதில் கலந்து, இனிமை மிக
279. எல்லையும் இரவும் இரு முறை கழிப்பி = இரண்டு இரவும் இரண்டு பகலும் கழித்து,
280. வல் வாய்ச் சாடியின் வழைச்சு அற விளைந்த = கெட்டியான வாயினையுடைய சாடியில் இளங்கள்ளின் நாற்றம் அறும்படி முற்றிய பிறகு,
281. வெந் நீர், அரியல் விரல் அலை, நறும் பிழி = வெந்நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி, விரல்களால் அலைத்துப் பிழிந்தெடுத்த மணமுள்ள கள்ளை,
282. தண் மீன் சூட்டொடு, தளர்தலும் பெறுகுவிர் = பச்சை மீனைச் சுட்டதோடு, நீங்கள் பசியால் தளர்ந்தபொழுது
பெறுவீர்கள்
கருத்துரை:
வலைஞர்கள் நன்றாகக் குத்தித் தீட்டப்படாத அரிசியைக் கூழாகத் துழாவிச் சமைப்பார்கள்; சமைத்த கூழை அகன்ற வாயையுடைய தட்டில் உலரும்படி ஆற்றுவார்கள். அத்தோடு நெல்முளையை இடித்து அதில் கலந்து, இரண்டு இரவும் இரண்டு பகலும் கழித்துக் கெட்டியான வாயையுடைய சாடியில் வைத்து இளங்கள்ளின் நாற்றம் அறும்படி முற்றிய
பிறகு, வெந்நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி, விரல்களால் அலைத்துப் பிழிந்தெடுத்த மணமுள்ள கள்ளை, மீன் சூட்டோடு, நீங்கள் பசியால் தளர்ந்தபொழுது பெறுவீர்கள்.
காலையில் நீர்ப்பூக்களைச் சூடிப்
போதல்
பச்சூன் பெய்த சுவல் பிணி பைந் தோல்,
கோள் வல், பாண்மகன் தலை வலித்து யாத்த
நெடுங் கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ, 285
கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப,
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை
நீர் நணிப் பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம்
நீத்துடை நெடுங் கயம் தீப் பட மலர்ந்த
கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி, 290
உறை கால் மாறிய ஓங்கு உயர் நனந் தலை
அகல் இரு வானத்துக் குறை வில் ஏய்ப்ப,
அரக்கு இதழ்க் குவளையொடு நீலம் நீடி,
முரண் பூ மலிந்த முது நீர்ப் பொய்கை,
குறுநர் இட்ட கூம்பு விடு பல் மலர் 295
பெரு நாள் அமையத்துப் பிணையினிர் கழிமின்,
அருஞ்சொற்பொருள்:
283. பச்சூன் = பச்சை இறைச்சி (மீனுக்கான தூண்டில் இரை); சுவல் = தோள்; பிணித்தல் = கட்டுதல்; பைந்தோல் = பசுமையான தோல்
284. கோள் வல் = மீனைத் தப்பாமற் பிடிக்கும் வல்லமையுடைய; பாண்மகன் = பாணர்குடியிற் பிறந்தோன்; வலித்து = இறுக்கி; யாத்த = கட்டிய
285. கழை = மூங்கில்; கொளீஇய = கொள்ள வேண்டிய
286. கொடுவாய் = வளைந்த முனை; மடி தலை = வளைந்த இடம் (வளைந்த முனை); புலம்பு = தனிமை
287. பொதி இரை = பொதிந்து வைக்கப்பட்ட இரை; கதுவிய = கவ்விக்கொண்ட; போழ் வாய் = பிளந்த வாய்; வாளை = வாளை மீன்
288. நீர் நணிப் பிரம்பின் = நீரின் அருகே இருக்கும் பிரம்பு; கால் = காற்று; வெரூஉம் = அஞ்சும்
289. நீத்துடை நெடுங்கயம் = நீந்துதற்குரிய பெரிய குளம்
290. ஒண்பூ = ஒளிபொருந்திய பூ (தாமரைப் பூ); ஓம்பி = தவிர்த்து
291. உறை = மழைத்துளி; காலுதல் = வெளிப்படுதல்; மாறிய = இல்லாமற் போன; நனந்தலை = பரந்த இடம்
292. அகல் = அகன்ற; இரு = பெரிய; குறைவில் = வானவில் (நாண் இல்லாத வில்லைப்போல் இருப்பதால் வானவில் குறைவில் என்று அழைக்கப்பட்டது); ஏய்ப்ப = ஒப்ப
293. நீடி = வளர்ந்து
294. முரட்பூ = நிறத்தால் மாறுபட்ட பூ; மலிந்த = நிறைந்த
295. குறுநர் = பூப்பறிப்போர்
296. நாள் = விடியற் காலை; பெருநாள் = பெருமைக்குரிய விடியற் காலை; அமையம் = பொழுது; பிணையினிர் = சூடிக்கொண்டு; கழிமின் = செல்வீர்களாக
பதவுரை:
283. பச்சூன் பெய்த சுவல் பிணி பைந் தோல் = பச்சை இறைச்சியை வைத்த, தோளில் மாட்டிய, பதப்படுத்தாத தோலினால் செய்த பையையுடைய
284. கோள் வல், பாண்மகன் தலை வலித்து யாத்த = மீன் பிடிப்பதில்
வல்லமைபெற்ற பாணர்குடியில் பிறந்தவனுடைய, முனையில் இறுக்கிக் கட்டிய
285. நெடுங் கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ =நெடிய மூங்கில் கோலாகிய தூண்டில் நடுங்கும்படியும், கயிற்றிலே கட்டப்பட்ட
286. கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப = வளைந்த முனையயுடைய இரும்பாலான தூண்டில் முள்ளில் உள்ள இரை கவரப்பட்டுத் தனியே கிடக்க
287. பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை = தூண்டிலில் பொதிந்து வைக்கப்பட்ட இரையைக் கௌவிக்கொண்டு தப்பிப் போன, பிளந்த வாயையுடைய வாளைமீன்
288. நீர் நணிப் பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் = நீர் அருகிலுள்ள பிரம்புக் கொடியின் அசையும் நிழலுக்கு அஞ்சும்
289. நீத்துடை நெடுங் கயம் தீப் பட மலர்ந்த = நீந்திக்கடக்க வேண்டிய ஆழத்தையுடைய நெடிய குளத்தில், நெருப்பைப்போல் மலர்ந்த
290. கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி = கடவுள் விரும்பும் ஒளிரும் தாமரை மலரைப்
பறித்துச் சூடாமல்
291. உறை கால் மாறிய ஓங்கு உயர் நனந் தலை = மழை பெய்தலைக் கைவிட்ட ஓங்கி உயர்ந்த பரந்த இடத்தையுடைய
292. அகல் இரு வானத்துக் குறை வில் ஏய்ப்ப = அகன்ற பெரிய வானத்தில் தோன்றும் வானவில்லை ஒப்ப
293. அரக்கு இதழ்க் குவளையொடு நீலம் நீடி = செவ்வரக்குப் போன்ற இதழையுடைய குவளைப் பூவோடு நீலப்பூவும் மலர்ந்து
294. முரண் பூ மலிந்த முது நீர்ப் பொய்கை = ஒன்றற்கொன்று நிறத்தால் மாறுபட்ட பல மலர்களும் நிறைய மலர்ந்த வற்றாத
நீர் இருக்கும் குளத்தில்
295. குறுநர் இட்ட கூம்பு விடு பல் மலர் = பூப்பறிப்பார் உங்களிடம் குவித்த அரும்பு மலர்ந்த பல பூக்களையும்,
296. பெரு நாள் அமையத்துப் பிணையினிர் கழிமின் = பெருமைக்குரிய விடியற் காலத்தில் சூடிக்கொண்டு செல்வீர்களாக.
கருத்துரை:
பச்சை இறைச்சித் துண்டுகள் அடங்கிய
தோல்பை தோளில் தொங்க, மீன் பிடிப்பதில் வல்லமைபெற்ற, பாணர்குடியில் பிற்ந்தவன், அங்குள்ள
குளத்துக்கு மீன் பிடிக்கச் செல்வான். அவன் கையில் ஒரு மூங்கில் கோல் இருக்கும். அந்தக் கோலின் நுனியில் ஒரு கயிற்றை இறுக்கிக் கட்டியிருப்பான். அந்தக் கயிற்றின் மற்றொரு முனையில், இரும்பாலான, வளைந்த
தூண்டில் முள் கட்டப்பட்டிருக்கும். அந்தத் தூண்டில்முள் இறைச்சியால் மூடப்பட்டிருக்கும். பெரிய பிளந்த
வாயையுடைய வாளைமீன், அந்தத் தூண்டில் முள்ளில் சிக்கிகொள்ளாமல், இறைச்சியைக் கவ்விச் செல்லும். அந்தக் குளத்தில் உள்ள பிரம்புக் கொடி காற்றில் ஆடும்பொழுது, அதன் நிழல் அசைவதைக் கண்டு, அதையும் தூண்டில்
என்று நினத்து, வாளைமீன் அஞ்சும். நீர் நிறைந்த அந்தக் குளத்தில், தண்ணீரே தீப்பற்றிக்கொண்டதோ என்று நினைக்கும்படி, கடவுள் விரும்பும் செந்தாமரை மலர்கள் மலர்ந்திருக்கும். அந்த மலரைச் சூடிக்கொள்ளாதீர்கள். மழைபொழியும்பொழுது வானத்தில் தோன்றும் வானவில்லின் பல நிறங்களைப் போல்
செங்குவளை மலரும், நீல மலரும் வேறு நிறமுடைய மற்ற மலர்களும் அந்தக்
குளத்தில் இருக்கும். பூப்பறிப்பவர்கள் அந்த மலர்களைப் பறித்து உங்களுக்குத்
தருவார்கள். நீங்கள் அவற்றைச் சூடிக்கொண்டு அங்கிருந்து
செல்வீர்களாக.
அந்தணரது உறைவிடங்களில் பெறுவன
செழுங் கன்று
யாத்த சிறு தாள் பந்தர்,
பைஞ் சேறு மெழுகிய
படிவ நல் நகர்,
மனை உறை கோழியொடு
ஞமலி துன்னாது,
வளை வாய்க் கிள்ளை
மறை விளி பயிற்றும் 300
மறை காப்பாளர் உறை
பதிச் சேப்பின்
பெரு நல் வானத்து
வடவயின் விளங்கும்
சிறு மீன்
புரையும் கற்பின், நறு நுதல்,
வளைக் கை மகடூஉ
வயின் அறிந்து அட்ட,
சுடர்க்கடை, பறவைப் பெயர்ப் படு வத்தம், 305
சேதா நறு மோர்
வெண்ணெயின் மாதுளத்து
உருப்புறு பசுங்
காய்ப் போழொடு கறி கலந்து,
கஞ்சக நறு முறி
அளைஇ, பைந் துணர்
நெடு மரக்
கொக்கின் நறு வடி விதிர்த்த
தகை மாண் காடியின், வகைபடப் பெறுகுவிர். 310
அருஞ்சொற்பொருள்:
297. யாத்த = கட்டிய; பந்தர் = பந்தல்
298. பைஞ்சேறு = பசிய சாணம்; படிவம் = வழிபடுதெய்வம்; நகர் = வீடு
299. ஞமலி = நாய்; துன்னாது = நெருங்காமல்
300. வளை வாய் = வளைந்த வாய்; கிள்ளை = கிளி; மறை = வேதம்; விளித்தல் = சொல்லுதல்; பயிற்றும் = ஓதும்
301. மறை = வேதம்; காப்பாளர் = காவலர்; சேப்பின் = தங்கினால்
302. வடவயின் = வடபகுதி
303. புரையும் = ஒக்கும்; நறு நுதல் = மணமுள்ள நெற்றி
304. மகடூ = (பார்ப்பனப்)பெண்; வளைக் கை மகடூஉ = வளை அணிந்த பெண்; வயின் அறிந்து அட்ட = பதம் அறிந்து சமைத்த
305. சுடர் = ஒளி; கடை = காலத்தில்; பெயர்ப்படு = பெயர் பெற்ற; வத்தம் = நெல் (பறவை பெயர்ப்படு வத்தம் என்பது கருடன் சம்பா என்ற நெல் என்று பெருமழைப்புலவர்
பொ.வே. சோமசுந்தரனார்
குறிப்பிடுகிறார் – பெரும்பாணாற்றுபடை, பக்கம் 138)
306. சேதா = சேது + ஆ = செந்நிறப்பசு; மாதுளத்து = மாதுளங்காயின்
307. உருப்புறு = வதக்கிய; பசுங்காய் = பசிய காய்; போழ் = கீற்று, துண்டு; கறி = மிளகு
308. கஞ்சகம் = கறிவேப்பிலை; முறி = இலை; அளைஇ = கலந்து; பைந்துணர் = பசிய கொத்து
309. கொக்கு = மாமரம்; நெடு மரக் கொக்கின் = உயர்ந்த மாமரத்தின்; வடி = மாவடு; விதிர்த்தல் = சிதறுதல் (பிளத்தல்)
310. தகை = அழகு; மாண் = மாட்சிமை; காடி = ஊறுகாய்; வகைபட = வகைவகையாக
பதவுரை:
297. செழுங் கன்று யாத்த சிறு தாள் பந்தர் = கொழுத்த கன்றைக்
கட்டின சிறிய கால்களையுடைய
பந்தலினையும்,
298. பைஞ் சேறு மெழுகிய படிவ நல் நகர் = பசும் சாணத்தால் மெழுகிய, வழிபடும் தெய்வங்களின் உருவங்களையுடைய நல்ல வீடுகளையும்
299. மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது = மனைகளில் வளரும் கோழிகளும், நாய்களும் நெருங்காமல் இருக்கும்
300. வளை வாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும் =வளைந்த வாயினையுடைய கிளி வேதத்தை ஓதும்
301. மறை காப்பாளர் உறை பதிச் சேப்பின் = வேதத்தைக் காக்கின்ற அந்தணர்கள் வாழும் ஊரிடத்தே தங்குவீராயின்
302. பெரு நல் வானத்து வடவயின் விளங்கும் = பெரிய நல்ல வானத்தில் வடதிசைக்கண் நின்று விளங்கும்
303. சிறு மீன் புரையும் கற்பின், நறு நுதல் = சிறிய விண்மீனாகிய அருந்ததியை ஒக்கும் கற்பினையும், நல்ல மணம் வீசும் நெற்றியையும்
304. வளைக் கை மகடூஉ வயின் அறிந்து அட்ட = வளையல் அணிந்த கைகளையும் உடைய பார்ப்பனி பதம் அறிந்து ஆக்கிய
305. சுடர்க்கடை, பறவைப் பெயர்ப் படு வத்தம் =கதிரவன் மறையும் காலத்தில், பறவையினது பெயரைப் பெற்ற கருடன் சம்பா என்னும் நெல்லின் சோற்றையும்
306. சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து = சிவந்த பசுவின் மணம் மிக்க கடைந்து எடுத்த வெண்ணெயில் மாதுளையின்
307. உருப்புறு பசுங் காய்ப் போழொடு கறி
கலந்து = சிறுதுண்டுகளை வேகவைத்து, மிளகுப்பொடி கலந்து
308. கஞ்சக நறு முறி அளைஇ, பைந் துணர் = கறிவேப்பிலை மரத்தின் மணமுள்ள இலைகளைக்
கலந்து, பசிய கொத்துக்களையுடைய
309. நெடு மரக் கொக்கின் நறு வடி விதிர்த்த = நெடிய மரமாகிய மாவின் மணமுள்ள வடுவினைத் துண்டாக்கிப்போட்ட
310. தகை மாண் காடியின், வகைபடப் பெறுகுவிர் = நன்கமைந்த ஊறுகாயோடு வகை வகையாகப்
பெறுவீர்கள்.
கருத்துரை:
வலைஞர்களின்
குடியிருப்பிலிருந்து கச்சியை
நோக்கிச் செல்லும் வழியில்,
அந்தணர் குடியிருப்பைக் கடந்து
செல்ல வேண்டும். அந்தணர்
குடியிருப்பில் உள்ள வீடுகளின்
வாயிலில் சிறிய கால்களையுடைய
பந்தலில் கொழுத்த கன்றுகள்
கட்டப்பட்டிருக்கும். அந்த வீடுகள்
பசும் சாணத்தால் மெழுகப்பட்டிருக்கும். அந்த வீடுகளில்
உள்ளவர்கள் தாம் வழிபடும்
தெய்வங்களின் உருவங்களைத் தம்
வீடுகளில் வைத்திருப்பார்கள். அந்த
வீடுகளுக்கு அருகே, நாய்களையும்
கோழிகளையும் காண முடியாது.
அந்த வீடுகளில் வாழும்
கிளிகள் வேதத்தைப் பலமுறை
கேட்டுப் பழகியதால், அவையும்
வேதம் ஓதும். அங்கு
வாழும் அந்தணர்கள் வேதத்தைப்
பாதுகாக்கின்றவர்கள். அங்கு வாழும்
பார்ப்பனப் பெண்கள், வானத்தின்
வடதிசையில் காணப்படும் விண்மீனாகிய
அருந்ததியை ஒத்த கற்புடையவர்கள்;
நல்ல மணம் வீசும்
நெற்றியையும் வளையல் அணிந்த
கைகளையும் உடையவர்கள். நீங்கள் அங்குச்
சென்றால், அந்தப் பெண்கள்,
பறவையினது பெயரைப் பெற்ற
கருடன் சம்பா என்னும்
நெல்லின் சோற்றையும் சிவந்த
பசுவின் மணம் மிக்க
மோரைக் கடைந்து எடுத்த
வெண்ணையில் மாதுளையின் சிறுதுண்டுகளை
வேகவைத்து, மிளகுப்பொடியையும் மணமுள்ள
கறிவேப்பிலை இலைளையும் கலந்து
வகைவகையாகச் சமைத்த உணவை
மாவடு ஊறுகாயோடு, நீங்கள்
பெறுவீர்கள்.
சிறப்புக் குறிப்பு:
சங்க காலத்தில் தீண்டாமை
இல்லை என்பதற்கு இப்பாடல் சான்று. ஒரு பார்ப்பனர் இல்லத்தில் ஒரு பாணனுக்கு ஒரு
பார்ப்பனப் பெண் விருந்தளிக்கும் சாதி
ஏற்றத் தாழ்வற்ற நிலையை இப்பாடல் எடுத்துரைக்கிறது. வேதம் ஓதும் கிளிகளை வளர்க்கும் பார்ப்பனர் இல்லத்தில் கோழி, நாய் ஆகியன
வளர்க்கப்படுவதில்லை என்ற செய்தியும் இங்கு அறியப்படுகிறது.
நீர்ப்ப்பாயல் என்னும் ஊரின்
சிறப்பு
வண்டல் ஆயமொடு உண்துறைத் தலைஇ,
புனல் ஆடு மகளிர் இட்ட பொலங் குழை
இரை தேர் மணிச் சிரல் இரை செத்து எறிந்தென,
புள் ஆர் பெண்ணைப் புலம்பு மடல் செல்லாது,
கேள்வி அந்தணர் அருங் கடன் இறுத்த 315
வேள்வித் தூணத்து அசைஇ, யவனர்
ஓதிம விளக்கின், உயர்மிசைக் கொண்ட,
வைகுறு மீனின், பைபயத் தோன்றும்
நீர்ப்பெயற்று எல்லைப் போகி
அருஞ்சொற்பொருள்:
311. வண்டல்
= பெண்கள் விளையாட்டு; ஆயம்
= கூட்டம்; உண்துறை = உண்ணும்
துறை; தலைஇ = கூடி
312. புனல்
= நீர்; பொலம் = பொன்
313. சிரல்
= சிச்சிலிப் பறவை, மீன்
கொத்திப் பறவை; செத்து
= கருதி; எறிதல் = கொள்ளையடித்தல்
(எடுத்துக்கொள்ளுதல்)
314. புள்
= பறவை; ஆர்தல் = நிறைதல்;
பெண்ணை = பனை; புலம்பு
= தனிமை; செல்லாது = போகாமல்
315. கேள்வி
= சுருதி; அருங்கடன் = செய்தற்கரிய
கடன்; இறுத்தல் = (செய்து)
முடித்தல்
316. வேள்வி
= யாகம்; வேள்வித் தூண்
= யாகப் பசுவைக் கட்டும்
தூண்; அசைஇ = தங்கி;
யவனர் = சோனகர்
317. ஓதிமம்
= அன்னம்; மிசை = மேல்
318. வைகுறு
= வைகறைப் பொழுதில்; பைபய
= விட்டுவிட்டு
319. நீர்ப்பெயற்று
= நீர்ப்பாயல் என்னும் ஊர்;
போகி = சென்று
பதவுரை:
311. வண்டல் ஆயமொடு உண்துறைத் தலைஇ = உடன் விளையாடும் தோழியர்களுடன் நீர் உண்ணும் துறையில் தோழியருடன்
கூடி
312. புனல் ஆடு மகளிர் இட்ட பொலங் குழை = நீராடுகின்ற மகளிர்
விட்டுச்சென்ற பொன்னாற் செய்த
மகரக்குழையை
313. இரை தேர் மணிச் சிரல் இரை செத்து எறிந்தென = இரையைத்
தேடுகின்ற நீலமணி போன்ற
மீன்கொத்திப் பறவை, தனக்கு
இரையென்று எண்ணி எடுத்துக்கொண்டு போய்
314. புள் ஆர் பெண்ணைப் புலம்பு மடல் செல்லாது = பறவைகள்
நிறைந்திருக்கின்ற பனைமரத்தின்
தனித்த மடலில் சென்று
தங்காமல்,
315. கேள்வி அந்தணர் அருங் கடன் இறுத்த = கேள்வி அறிவு
மிக்க அந்தணர் செய்தற்கரிய கடனாகச்
செய்து முடித்த,
316.வேள்வித் தூணத்து அசைஇ, யவனர் =
வேள்விச்சாலையில் நட்ட
கம்பத்தின் மீது சென்று
தங்கி, யவனரின் மரக்கலத்துக்
கூம்பின் மேல் ஏற்றிய
317. ஓதிம விளக்கின், உயர்மிசைக் கொண்ட =
அன்னத்தைப் போன்ற விளக்கைப்போலவும்,
உயர்ந்த வானில் இடங்கொண்ட
318. வைகுறு மீனின், பைபயத் தோன்றும் =
வைகறைப்பொழுதில் தோன்றும் வெள்ளிமீன் போலவும், விட்டுவிட்டு
ஒளிவிட்டுத் தோன்றும்
319. நீர்ப்பெயற்று எல்லைப் போகி = நீர்ப்பாயல்
என்னும் ஊரின் எல்லைக்குள்
சென்று
கருத்துரை:
நீர் உண்ணும் துறையில் தோழியருடன் கூடி
நீராடுகின்ற மகளிர் விட்டுச்சென்ற
பொன்னால் செய்த மகரக்குழையை,
நீலமணி போன்ற மீன்கொத்திப்
பறவை இரையென்று எடுத்துக்கொண்டு போகும். அப்படிப்
போகும் பறவை, மற்ற
பறவைகள் நிறைந்திருக்கின்ற பனைமரத்தின்
தனித்த மடலில் சென்று
தங்காமல், அந்தணர் யாகசாலையில்
நட்ட கம்பத்தின் மீது
சென்று தங்கும். அவ்வாறு,
அந்த மீன்கொத்திப் பறவை
அந்தக் கம்பத்தின் மீது
இருப்பது, யவனரின் மரக்கலத்துக்
கூம்பின் மேல் ஏற்றிய
அன்னத்தைப் போன்ற விளக்கைப் போலவும்,
உயர்ந்த வானில் இடங்கொண்ட
வைகறைப் பொழுதில் தோன்றும்
வெள்ளிமீன் போலவும் விட்டுவிட்டு
ஒளிவிட்டு விளங்கும். அத்தகைய
நிகழ்ச்சிகள் நடைபெறும் நீர்ப்ப்பாயல்
என்னும் ஊரின் எல்லைக்குள்
சென்று . . . . . .
நீர்ப்பாயல் பட்டினத்தின் பெருமை
. . . . . . . . . . . . . . . . . . . . . . .பால்கேழ்
வால் உளைப் புரவியொடு வட வளம் தரூஉம் 320
நாவாய் சூழ்ந்த நளி நீர்ப் படப்பை,
மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின்,
பரதர் மலிந்த பல் வேறு தெருவின்,
சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின்,
நெல் உழு பகட்டொடு கறவை துன்னா, 325
ஏழகத் தகரோடு எகினம் கொட்கும்
கூழ் உடை நல் இல் கொடும் பூண் மகளிர்,
கொன்றை மென் சினைப் பனி தவழ்பவை போல்,
பைங் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க,
மால் வரைச் சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும் 330
பீலி மஞ்ஞையின் இயலி, கால
தமனியப் பொற்சிலம்பு ஒலிப்ப, உயர் நிலை
வான் தோய் மாடத்து, வரிப் பந்து அசைஇ,
கை புனை குறுந் தொடி தத்த, பைபய,
முத்த வார் மணல் பொற்கழங்கு ஆடும் 335
பட்டின மருங்கின் அசையின்
அருஞ்சொற்பொருள்:
319. கேழ் = நிறம்
320. வால் = வெண்மை; உளை = குதிரையின்
பிடரிமயிர்; புரவி = குதிரை; வடவளம் =வடநாட்டில் விளையும் நுகர் பொருள்; தரூஉம் = தருகின்ற
321. நாவாய் = மரக்கலம்; நளி = பெருமை; படப்பை = பக்கத்தில் உள்ள இடம் (கடற்கரைப் பக்கம்)
322. ஓங்கிய = உயர்ந்த; மலிதல் = நிறைதல்; மறுகு = தெரு
323. பரதர் = வணிகர்; மலிந்த = நிறைந்த
324. சிலதர் = தொழில் செய்வோர்; சேண் = உயர்ச்சி; சேண் உயர் = மிக உயர்ந்த; வரைப்பு = பண்டகசாலை
325. பகடு = காளை; கறவை = பசு; துன்னா = நெருங்காத
326. ஏழகம் = ஆட்டுக்கிடா; தகர் = ஆடு; எகினம் = நாய்; கொட்கும் = திரியும்
327. பூண் = அணிகலன்
328. கொன்றை = கொன்றை மலர்; சினை = கிளை
329. பைங்காழ் = பசிய மணிக்கோவை; அல்குல் =
இடை; துகில் = ஆடை; நுடங்க = அசைய
330. மால் =பெரிய ; வரை =மலை ; சிலம்பு = பக்க மலை; ஆலும் = ஆரவாரிக்கும்
331. பீலி =தோகை; மஞ்ஞை = மயில்; இயலி = உலவி ; கால = கால்களில் உள்ள
332. தமனியம் = பொன்
333. வரிப்பந்து = நூலால் வரியப்பட்ட பந்து; அசைஇ = இளைத்து
334. கைபுனை = கையில் அணிந்த; குறுந்தொடி = மெல்லிய தொடி; தத்த = அசைய; பைபய = மெல்லமெல்ல
335. முத்த = முத்தைப் போன்ற; வார்மணல் = பரப்பிய மணல்; கழங்கு = ஒரு விளையாட்டு, கழற்சிக்காய்;
336. மருங்கு = பக்கம்; அசையின் = இளைப்பாறுவீராயின்
பதவுரை:
319. பால்கேழ் = பால் போன்ற நிறமுள்ள
320. வால் உளைப் புரவியொடு வட வளம் தரூஉம் = வெண்மையான பிடரிமயிரையுடைய குதிரைகளுடன் வடதிசையின் வளங்களைக் கொண்டுவரும்
321. நாவாய் சூழ்ந்த நளி நீர்ப் படப்பை = மரக்கலங்கள் சூழ்ந்த பெருமை மிக்க கடற்கரைப் பக்கத்தினையும்,
322. மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின் = மாடங்கள் உயர்ந்து நின்ற மணல் நிறைந்த தெருக்களையும்,
323. பரதர் மலிந்த பல் வேறு தெருவின் = வணிகர் மிகுதியாக வாழும் பல்வேறு தெருக்களையும்,
324. சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின் = தொழில் செய்வோர் காக்கும் மிகவும் உயர்ந்த பண்டசாலைகளையும்,
325. நெல் உழு பகட்டொடு கறவை துன்னா = நெல்லிற்கு உழுகின்ற காளைகளோடு கறவை மாடுகளும் நெருங்காத
326. ஏழகத் தகரோடு எகினம் கொட்கும் = ஆட்டுக்கிடாயோடு நாயும் சுழன்று திரியும்,
327. கூழ் உடை நல் இல் கொடும் பூண் மகளிர் = உணவுடைய நல்ல வீடுகளையும், வளைந்த அணிகலன்களையுடைய மகளிர்
328. கொன்றை மென் சினைப் பனி தவழ்பவை போல் = கொன்றையின் மெல்லிய கொம்புகளில் பனிப்படலம் படிந்திருப்பதுபோல்
329. பைங் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க = பசிய மணிகளைக் கோர்த்த வடங்களையுடைய, அல்குலில் கிடக்கின்ற மெல்லிய ஆடை அசைய
330. மால் வரைச் சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும் = பெரிய பக்கமலையில் மகிழ்ச்சி மிகுந்து ஆரவாரிக்கும்
331.மஞ்ஞையின் இயலி, கால = தோகையையுடைய மயில்போல் உலாவி, கால்களில் உள்ள
332. தமனியப் பொற்சிலம்பு ஒலிப்ப, உயர் நிலை = செம் பொன்னால் செய்த சிலம்புகள் ஆரவாரிப்ப, மேல்நிலையாகிய
333. வான் தோய் மாடத்து, வரிப் பந்து அசைஇ = வானத்தைத் தீண்டுகின்ற மாடத்தில், நூலால் வரிந்து செய்யப்பட்ட பந்தையடித்து இளைத்து,
334. கை புனை குறுந் தொடி தத்த, பைபய = கையில் அணிந்த மெல்லியதொடி அசையும்படி, மெல்லமெல்ல
335. முத்த வார் மணல் பொற்கழங்கு ஆடும் = முத்துப்போல்
பரப்பிய மணலில் பொன்னாற் செய்த கழங்கைக் கொண்டு விளையாடும்
336. பட்டின மருங்கின் அசையின் = பட்டினத்திடத்தே இளைப்பாறுவீராயின்
கருத்துரை:
கடற்கரையில், பால் போன்ற வெண்மையான பிடரிமயிரை யுடைய குதிரைகளையும், வடதிசையின் வளங்களைக் கொண்டுவரும் பொருள்களையும் ஏற்றிவரும் மரக்கலங்கள் சூழ்ந்திருக்கும். அங்கு, உயர்ந்து நிற்கும் மாடமாளிகை -களையும், மணல் நிறைந்த தெருக்களையும், வணிகர் மிகுதியாக வாழும் பல்வேறு தெருக்களையும், தொழில் செய்வோர் காக்கும் மிகவும் உயர்ந்த பண்டசாலைகளையும் காணலாம். வயலில் உழும் காளைகளையும் கறவை மாடுகளையும் அங்கு காண முடியாது. காவல் காக்கும் நாய்களும், உணவுக்காக
வளர்க்கப்படும் ஆட்டுக்கிடாய்களும் அங்குச் சுற்றித் திரியும். சோற்று வளம் மிக்க நல்ல இல்லங்களும் அங்கு இருக்கும்.
வளைந்த அணிகலன்களையுடைய மகளிர், கொன்றையின் மெல்லிய கிளைகளில் பனிப்படலம் படிந்திருப்பதுபோல், பசிய மணிகளைக் கோர்த்த வடங்களையுடைய, அல்குலில் கிடக்கின்ற மெல்லிய ஆடை அசைய, மலையில் மகிழ்ச்சி மிகுந்து ஆரவாரிக்கும் மயில்போலக் காலில் அணிந்த பொன் சிலம்பு ஒலிக்கும்படி ஆரவாரிப்பர்; விண்ணை முட்டும் மாடத்தில், நூலால் வரிந்து செய்யப்பட்ட பந்தையடித்து விளையாடுவர்; கையில் அணிந்த மெல்லிய வளையல்கள் அசையும்படி, முத்துப்போல் பரப்பிய வெண்மணலில் பொன்னால் செய்த கழற்சிக்காயைக்கொண்டு
கழங்காடுவர். இந்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறும் பட்டினத்தில் தங்கி
இளைப்பாறுங்கள்.
சிறப்புக் குறிப்பு:
இன்றைய மாமல்லபுரமே சங்க காலத்தில்
நீர்ப்பாயல் என்று அழைக்கப்பட்ட புகழ்பெற்ற துறைமுகப்பட்டினமாக விளங்கியுள்ளது. பாடலில்
சிறப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கம் இன்றும் புதுப்பிக்கப்பட்ட நிலையில்
உள்ளது.
பட்டினத்து
மக்களின் உபசரிப்பு
. . . . . . . . . . . . . . . . . . . . . . . முட்டு இல்,
பைங் கொடி நுடங்கும் பலர் புகு வாயில்
செம் பூத் தூஉய செதுக்குடை முன்றில்,
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து உகு சில் நீர் வழிந்த கு…..ழம்பின் 340
ஈர்ஞ் சேறு ஆடிய இரும் பல் குட்டிப்
பல் மயிர்ப் பிணவொடு பாயம் போகாது,
நெல் மா வல்சி தீற்றி, பல் நாள்
குழி நிறுத்து, ஓம்பிய குறுந் தாள் ஏற்றைக்
கொழு நிணத் தடியொடு கூர் நறாப் பெறுகுவிர். 345
அருஞ்சொற்பொருள்:
336. முட்டு இல் = தடையின்றி, இடையூறின்றி
337. பை = அழகு; பைங்கொடி= அழகிய கொடி; நுடங்கும் = ஆடும் (பறக்கும்)
338. தூஉய =தூவப்பட்ட; செதுக்குடை = செதுக்கப்பட்ட; முன்றில் = முற்றம்
339. அடுதல் = சமைத்தல்; வள்ளம் = வட்டில் (கிண்ணம்); நுடக்கிய = கவிழ்த்த
340. வார்ந்து = கழழுவிய; உகுதல் = சிந்துதல்; சின்னீர் = சில நீர்
341. இரு= கரிய; பல் = பல
342. பிணவு = பெண்பன்றி; பாயம் = மனவிருப்பம்
343. வல்சி = அரிசி; தீற்றுதல் = உண்ணப் பண்ணுதல்; பன்னாள் = பலநாள்
344. நிறுத்து = வைத்து; ஓம்பிய = பாதுகாத்த; ஏறு =ஆண் பன்றி
345. கூர் = மிகுதி; நறா = கள்
பதவுரை:
336. முட்டு இல் = இடையூறில்லாமல்
337. பைங் கொடி நுடங்கும் பலர் புகு வாயில் = அழகிய கொடி பறக்கும் பலரும் நுழையும் வாயிலில்
338. செம் பூத் தூஉய செதுக்குடை முன்றில் = சிவந்த பூக்கள் தூவப்பட்ட புல் இல்லாமல் செதுக்கிய முற்றத்தில்
339. கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய = கள்ளைக் காய்ச்சுகின்ற மகளிர் வட்டில்களைக் கழுவிக் கவிழ்த்ததால்
340. வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் = சிந்திய சில நீர்
சேர்ந்து வழிந்த குழம்பில்,
341. ஈர்ஞ் சேறு ஆடிய இரும் பல் குட்டிப் = ஈரத்தையுடைய சேற்றில் புரண்ட கரிய பல குட்டிகளையுடைய
342. பல் மயிர்ப் பிணவொடு பாயம் போகாது = உடலெல்லாம் மயிரால் நிறைந்த பெண் பன்றியோடு கூட மனவிருப்பம் கொள்ளாமல்,
343. நெல் மா வல்சி தீற்றி, பல் நாள் = நெல்லை இடித்த மாவைத் தின்னச் செய்து, பலநாட்கள்
344. குழி நிறுத்து, ஓம்பிய குறுந் தாள் ஏற்றைக் = குழியிலே
வைத்துப் பாதுகாத்த குறுகிய கால்களையுடைய ஆண்பன்றியின்
345. கொழு நிணத் தடியொடு கூர் நறாப் பெறுகுவிர் = கொழுத்த தசைத் துண்டுகளோடு, களிப்பு மிக்க கள்ளைப் பெறுவீர்.
கருத்துரை:
நீர்ப்பாயல் பட்டினத்தில், பலரும் புகுகின்ற கள்ளுக்கடையின் வாயிலில் அழகிய கொடி பறக்கும். கடையின் முற்றத்தில், புல்லைச் செதுக்கி நீக்கி, சிவந்த பூக்கள் தூவப்பட்டிருக்கும்.
அங்குக் கள்ளைக் காய்ச்சுகின்ற மகளிர் வட்டில்களைக்
கழுவிக் கவிழ்த்ததால் சிந்திய நீர் வழிந்து நிலம் சேறாக
இருக்கும். அச் சேற்றில், பல குட்டிகளை ஈன்ற பெண் பன்றி புரளும். அச் சேற்றில் புரளும் பெண் பன்றியோடு
கூட மனவிருப்பம் கொள்ளாதவாறு, குழியிலே வைத்து, இடித்த மாவை உணவாகக் கொடுத்து, ஆண் பன்றி பலநாட்கள் பாதுகாக்கப்படும். அவ்வாறு, குழியிலே வைத்துப் பாதுகாத்த குறுகிய கால்களையுடைய ஆண் பன்றியின் கொழுத்த தசைத் துண்டுகளோடு, களிப்பு மிக்க கள்ளையும் நீங்கள் நீர்ப்பாயல் பட்டினத்தில் பெறுவீர்கள்.
ஓடும் கலங்களை அழைக்கும் கடற்கரைத்
துறை
வானம் ஊன்றிய மதலை போல,
ஏணி சாத்திய ஏற்று அருஞ் சென்னி,
விண் பொர நிவந்த, வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் 350
துறை பிறக்கு ஒழியப் போகி
அருஞ்சொற்பொருள்:
346. மதலை = பற்றுக்கோடு
347. சென்னி = தலை; ஏற்று அருஞ்சென்னி = ஏறுதற்கு அரிய உச்சி
348. நிவந்த = உயர்ந்த
349. மாட்டிய = கொளுத்திய; ஞெகிழி = விளக்கு
350. அழுவம் = பரப்பு; கரையும் =அழைக்கும்
351. பிறக்கு ஒழிய = கடந்து சென்றால்; போகி = சென்று
பதவுரை:
346. வானம் ஊன்றிய மதலை போல = வானம் விழாதபடி ஊன்றிவைத்த பற்றுக்கோல் போல
347. ஏணி சாத்திய ஏற்று அருஞ் சென்னி = ஏணியைச் சார்த்திய ஏறுதற்கரிய உச்சியையுடைய
348. விண் பொர நிவந்த, வேயா மாடத்து = விண்ணைத் தீண்டும்படி உயர்ந்த கழியும் கற்றையும் கொண்டு வேயாது, (கல்லும் சாந்தும் கொண்டு கட்டப்பட்ட) மாடத்தில்
349. இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி = இரவில் கொளுத்திய விளங்குகின்ற விளக்கு
350. உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் = பெருநீர்ப்பரப்பாகிய கடலில் ஓடும் மரக்கலங்களை அழைக்கும்
351. துறை பிறக்கு ஒழியப் போகி = நீர்ப்பாயல் துறையைக் கடந்து சென்று
கருத்துரை:
நீர்ப்பாயல் பட்டினத்தில் உள்ள
கலங்கரை விளக்கம் மிக உயரமானது. அது பார்ப்பதற்கு, வானம் விழாதபடி ஊன்றிவைத்த பற்றுக்கோல்போல் இருக்கும். கழியும் கற்றையும் கோண்டு வேயாது, அந்தக் கலங்கரை விளக்கம் கல்லும் சாந்தும் கொண்டு கட்டப்பட்டது. அதன் உச்சிக்குச் சென்று விளக்கை ஏற்றுவதற்கு ஏதுவாக ஏணி சார்த்தப்பட்டிருக்கும். ஏணி சார்த்தப்பட்டிருந்தாலும், அதில் ஏறிக் கலங்கரை விளக்கத்தின் உச்சியை அடைவது அரிது. அந்தக் கலங்கரை விளக்கத்தில், இரவில் கொளுத்திய விளக்கு, பெருநீர்ப்பரப்பாகிய கடலில் ஓடும் மரக்கலங்களை, ”வருக!, வருக! நீங்கள் சேர வேண்டிய கரை இதுதான்.” என்று அழைப்பதுபோல் இருக்கும். நீர்ப்பாயல் துறையைக் கடந்து சென்று . . . . . .
தோப்புக் குடிகளில் நிகழும் உபசாரம்
. . . . . . . . . . . . . . . . . . . . . கறை அடிக்
குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும்,
வண் தோட்டுத் தெங்கின் வாடு மடல் வேய்ந்த,
மஞ்சள் முன்றில், மணம் நாறு படப்பை,
தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின் 355
தாழ் கோள் பலவின் சூழ் சுளைப் பெரும் பழம்,
வீழ் இல் தாழைக் குழவித் தீம் நீர்,
கவை முலை இரும் பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும்
குலை முதிர் வாழைக் கூனி வெண் பழம்,
திரள் அரைப் பெண்ணை நுங்கொடு, பிறவும், 360
தீம் பல் தாரம் முனையின், சேம்பின்
முளைப் புற முதிர் கிழங்கு ஆர்குவிர்.
அருஞ்சொற்பொருள்:
351. கறை = உரல்
352. உறழ் = மாறுபட்ட; மருங்குல் = உடம்பு; ஏய்க்கும் = ஒக்கும்
353. வண் தோடு = வளமான மடல்; தெங்கு = தென்னை; வாடுமடல் = வற்றிய மடல்; வேய்ந்த = மூடப்பட்ட
354. முன்றில் = முற்றம்; படப்பை = தோட்டம்
355. தண்டலை = சோலை (தோப்பு); சேப்பின் = தங்கினால்
356. கோள் = குலை; பலவின் = பலாவின்
357. வீழ் = விழுது; தாழை = தென்னை; குழவி = இளமையான; தீம் நீர் = இனிய நீர்
358. கவை = இரட்டையான; இரு = கரிய; பிடி = பெண் யானை; மருப்பு = கொம்பு; ஏய்க்கும் = ஒக்கும்
359. கூனி = வளைவுடையது; வெண்பழம் = வெண்மையான பழம்
360. பெண்ணை = பனை
361. தீம் பல் = இனிய பல; தாரம் = பண்டம்; முனையின் = வெறுப்பின்; சேம்பு = ஒரு செடி
362. முளைப்புற = முளைக்கும்; ஆர்குவிர் = உண்பீர்கள்
பதவுரை:
351. கறை அடி = உரல் போன்ற அடியினையுடைய
352. குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும் = மலையோடு மாறுபடுகின்ற யானையின் உடம்பை ஒக்கும்
353. வண் தோட்டுத் தெங்கின் வாடு மடல் வேய்ந்த = வளவிய தோட்டினையுடைய தென்னை மரத்தின் வற்றிய மடலினை வேய்ந்த,
354. மஞ்சள் முன்றில், மணம் நாறு படப்பை = மஞ்சளையுடைய முற்றத்தினையும் மணல் கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய
355. தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின் =தோப்புகளில் வாழும் உழவர்களின் தனித்தனியாக அமைந்த மனைகளில் தங்கினால்
356. தாழ் கோள் பலவின் சூழ் சுளைப் பெரும் பழம் = தாழ்ந்த குலைகளையுடைய பலாவின், சூழ்ந்து அமைந்துள்ள சுளைகளையுடைய பெரிய பழத்தையும்,
357. வீழ் இல் தாழைக் குழவித் தீம் நீர் = விழுதில்லாத தாழையாகிய தென்னையின் இளநீரின் இனிய நீரையும்
358. கவை முலை இரும் பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும் = கவைத்த முலையையுடைய குறிய பெண்யானையின் கடைவாயின் கொம்புகளை ஒக்கும்,
359. குலை முதிர் வாழைக் கூனி வெண் பழம் = குலையில் முதிர்ந்த வாழையின் வளைந்த வெளுத்த பழத்தையும்,
360. திரள் அரைப் பெண்ணை நுங்கொடு, பிறவும் = திரண்ட அடியினையுடைய பனையின் நுங்கோடு, வேறுபிற
361. தீம் பல் தாரம் முனையின், சேம்பின் = இனிய பல பண்டங்களையும் வெறுப்பின், சேம்பின்
362. முளைப் புற முதிர் கிழங்கு ஆர்குவிர் = முளையைப் புறத்தேயுடைய முதிர்ந்த கிழங்குகளைத் தின்பீர்
கருத்துரை:
நீங்கள் செல்லும் வழியில், மணம் கமழும்
சுற்றுப்புறங்களையுடைய தோப்புகளில், தனித்னியாக அமைந்த வீடுகளில் உழவர்கள் வசிப்பர்.
உரல் போன்ற அடியையும், மலையிலிருந்து மாறுபட்ட தோற்றத்தையும் யானையின் உடலைப்போல் சொரசொரப்பும், வளமான மடல்களையும் உடைய தென்னையின் வற்றிய மடல்களால் அவர்களது வீடுகளின்
கூரைகள் வேயப்பட்டிருக்கும், அவர்கள் வீட்டின்
முற்றத்தில் மஞ்சள் செடிகள் இருக்கும். நீங்கள் அவர்களின் வீடுகளில் தங்கினால், சுளைகளையுடைய பெரிய பலாப்பழத்தையும், தென்னையின் இனிய இளநீரையும், வாழைப்பழத்தையும், பனையின் நுங்கையும், இனிய பல பண்டங்களையும் உண்பீர்கள். அவற்றை உண்பதை நீங்கள் வெறுத்தால், முளை முற்றிய சேப்பங்கிழங்கை உண்பீர்கள்.
ஒதுக்குப் புற நாடுகளின் வளம்
. . . . . . . . . . . . . . . . . . . . பகற் பெயல்
மழை வீழ்ந்தன்ன மாத் தாள் கமுகின்
புடை சூழ் தெங்கின் முப் புடைத் திரள் காய்,
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரச் 365
சோறு அடு குழிசி இளக, விழூஉம்
வீயா யாணர் வளம் கெழு பாக்கத்து,
பல் மரம் நீள் இடைப் போகி, நல் நகர்,
விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த,
வாடா வள்ளியின் வளம் பல தரூஉம் 370
நாடு பல கழிந்த பின்றை
அருஞ்சொற்பொருள்:
362. பெயல் = மழை
363. மழை வீழ்ந்தன்ன = மழை பொழிந்து வீழ்வதைப் போன்ற; தாள் = தண்டு;
மாத்தாள் = பருத்த தண்டு
364. புடை = பக்கம்; தெங்கு = தென்னை; முப்புடை = மூன்று புடைப்பு
365. ஆறு = வழி; வம்பலர் = புதியவர்; காய் பசி = மிக்க பசி
366. குழிசி = பானை, இளக = சரிய; விழூஉம் = விழும்
367. வீயா = இடையறாத; யாணர் = புது வருவாய்; பாக்கம் = ஊர்
368. இடைப் போகி = இடத்திலே போய்; நகர் = நகரம்
370. வாடா வள்ளி = வள்ளிக்கூத்து; தரூஉம் = தரும்; பின்றை = பின்னர்
பதவுரை:
362. பகற் பெயல் = பகல் மழையின்
363. மழை வீழ்ந்தன்ன மாத் தாள் கமுகின் = மேகங்கள் விழுந்ததைப் போன்ற பெரிய தண்டினையுடைய கமுகுகளின் (பாக்கு மரங்களின்)
364. புடை சூழ் தெங்கின் முப் புடைத் திரள் காய் = பக்கத்தே சூழ்ந்த தெங்கினுடைய மூன்று புடைப்பினையுடைய முற்றிய காய்,
365. ஆறு செல் வம்பலர் காய் பசி தீரச் =
வழிப்போக்கர்களின் மிக்க பசி தீரும்படி,
366. சோறு அடு குழிசி இளக = அவர்கள் சோற்றை ஆக்குகின்ற பானை அசையும்படி விழுகின்ற
367.வீயா யாணர் வளம் கெழு பாக்கத்து = கெடாத புதுவருவாயினையுடைய வளம் மிகுந்த ஊர்களில்
368. பல் மரம் நீள் இடைப் போகி, நல் நகர் = பல மரங்கள் வளர்ந்த நீண்ட வழியில் சென்று, நல்ல நகரங்களில்
369. விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த = விண்ணைத் தீண்டும் மாடங்களில் விளங்கிநின்ற மதில் சூழ்ந்த,
370. வாடா வள்ளியின் வளம் பல தரூஉம் = வாடாத வள்ளியாகிய வள்ளிக் கூத்து ஆடி மகிழ்வத்ற்குக் காரணமான வளங்கள் பலவற்றையும் தருகின்ற
371. நாடு பல கழிந்த பின்றை = நாடுகள் பலவற்றையும் கடந்த பின்னர்
கருத்துரை:
நீங்கள் கச்சியை நோக்கிச் செல்லும் வழியில், பகற்பொழுதில் மழைபெய்து, மேகங்கள் விழுந்ததைப் போன்ற பெரிய தண்டினையுடைய பாக்கு மரங்களும், அவற்றைச் சூழ்ந்து தென்னை மரங்களும் இருக்கும். வழிப்போக்கர்கள் தங்கள் கொடிய பசியைத் தீர்த்துக்கொள்வதற்காகச்
சமைக்கும்பொழுது, தென்னை மரங்களிலிருந்து மூன்று புடைப்பாக உள்ள
தேங்காய்கள் கீழே விழுவதால், சமைக்கும் பானைகள்
அசையும். அத்தகைய செல்வ வளம் மிக்க புதிய வருவாயையுடைய ஊர்களில்
பல சோலைகளைக் கடந்து சென்று, மதில் சூழ்ந்த, விண்ணைத் தீண்டும் மாடங்களை -யுடைய நல்ல நகரங்களில். மக்கள் வள்ளிக்கூத்து ஆடி மகிழ்வதற்குக் காரணமான வளங்கள் பலவற்றையும் தருகின்ற
பல நாடுகளைக் கடந்து சென்ற பிறகு
திருவெஃகாவின் சிறப்பும் திருமால் வழிபாடும்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . நீடு குலைக்
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு,
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்,
வெயில் நுழைபு அறியா, குயில் நுழை பொதும்பர்,
குறுங் கால் காஞ்சி சுற்றிய நெடுங் கொடிப் 375
பாசிலைக் குருகின் புன் புற வரிப் பூ,
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்,
நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்ப,
புனல் கால் கழீஇய பொழில்தொறும், திரள்கால் 380
சோலைக் கமுகின் சூல் வயிற்றன்ன
நீலப் பைங் குடம் தொலைச்சி, நாளும்
பெரு மகிழ் இருக்கை மரீஇ; சிறு கோட்டுக்
குழவித் திங்கள் கோள் நேர்ந்தாங்கு,
சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல், 385
நறவு பெயர்த்து அமர்த்த நல் எழில் மழைக் கண்,
மடவரல் மகளிரொடு பகல் விளையாடி;
பெறற்கு அருந் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூ மலி பெருந் துறை,
செவ்வி கொள்பவரோடு அசைஇ; அவ் வயின் 390
அருந் திறல் கடவுள் வாழ்த்தி, சிறிது நும்
கருங் கோட்டு இன் இயம் இயக்கினிர் கழிமின்.
அருஞ்சொற்பொருள்:
371. நீடு குலை = நீண்ட குலை
372. சிலம்பு = பக்கமலை; பள்ளி= படுக்கை
373. ஆங்கண் - இங்கு திருவெஃகா என்னும் ஊரைக் குறிக்கிறது
374. பொதும்பர் = சோலை
375. காஞ்சி = காஞ்சி மரம்
376. பாசிலை = பசிய இலை; குருகு = குருக்கத்தி என்னும் செடி; வரிப்பூ = வரிகளையுடைய மலர்
377. கார் அகல் = கரிய சட்டி; கூவியர் = அப்ப வாணிகர்
379. வார் மணல் = பரந்த மணல்; உறைதல் = முழுகல் (நீரில் மிதத்தல்)
380. புனல் = நீர்; கழீஇய = தூய்மையாக்கிய; பொழில் = சோலை; திரள்கால் = திரண்ட கால் (பருத்தஅடிமரம்)
381. கமுகு = பாக்கு; சூல் = கருவுற்ற வயிறு
382. பைங்குடம் = பையாகிய குடம்; தொலைச்சி = காலிசெய்து
383. மரீஇ = தழுவுதல் (மேற்கொள்ளுதல்)
384. கோள் = இராகு அல்லது கேது; நேர்ந்தாங்கு = கிட்டல் (தீண்டுதல்)
385. சுறவுவாய் = மகரவாய் என்னும் தலைக்கோலம் (சுரா மீன் போன்ற
உருவத்தில் உள்ள தலையில் அணியும் அணி); சுரும்பு = வண்டு; சுடர்நுதல் = ஒளி பொருந்திய நெற்றி
386. நறவு = தேன்
387. மடவரல் = மடப்பம்; எழில் = அழகு; மழைக்கண் = குளிர்ச்சியையுடைய கண்
388. சீர் = புகழ்; துறக்கம் = சுவர்க்கம்; ஏய்க்கும் = ஒக்கும்
389. பூமலி = பூக்கள் நிறைந்த
390. செவ்வி = நுகர்ச்சி; அசைஇ = காத்திருந்து; அவ்வயின் = அங்கிருக்கும்
391. திறல் = வல்லமை, ஆற்றல்
392 கருங்கோடு = கரிய தண்டு; இயம் = இசைக்கருவி (யாழ்); இயக்கி = வாசித்து; கழிமின் = கடந்து செல்லுங்கள்
பதவுரை:
371. நீடு குலை = நீண்ட கொத்துகளையுடைய
372. காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு = காந்தளையுடைய அழகிய பக்கமலையில், யானை படுத்திருந்தாற்போல
373. பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண் = பாம்பணையாகிய படுக்கையில் விரும்பித் துயில் கொண்டோனுடைய திருவெஃகாவில்,
374. வெயில் நுழைபு அறியா, குயில் நுழை பொதும்பர் = வெயில் நுழைந்து அறியாத, குயில் நுழையும் சோலையில்,
375. குறுங் கால் காஞ்சி சுற்றிய நெடுங் கொடி = குறுகிய காலையுடைய காஞ்சிமரத்தைச் சூழ்ந்த நெடிய கொடியையும்,
376. பாசிலைக் குருகின் புன் புற வரிப் பூ = பசிய இலையினையும் உடைய குருக்கத்தியின் பொலிவிழந்த புறத்தினையும் வரிகளையும் உடைய பூக்கள்,
377. கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த = கரிய சட்டியில் அப்ப வாணிகர் பாகுடன் கலந்து பிழிந்து எடுக்கப்பட்ட
378. இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல் = நூல்போல் வட்ட வடிவத்தில் சூழ்ந்து கிடக்கின்ற அப்பம் (இடியாப்பம்) பாலில் மிதப்பதைப்போல்,
379. நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்ப = நிழல் படிந்த பரந்த மணலில் உள்ள குழிகளில் உள்ள நீரில் மிதக்க
380. புனல் கால் கழீஇய பொழில்தொறும், திரள்கால் = வெள்ளநீர் தூய்மைப்படுத்திய பொழில்கள்தோறும், திரண்ட தண்டினையுடைய
381. சோலைக் கமுகின் சூல் வயிற்றன்ன = சோலையிடத்து நிற்கும் பாக்கு மரத்தின் சூல்கொண்ட வயிற்றைப்போலும்
382. நீலப் பைங் குடம் தொலைச்சி, நாளும் = நீலநிறம் அமைந்த தோல் பையிலுள்ள கள்ளையுண்டு, நாள்தோறும்
383. பெரு மகிழ் இருக்கை மரீஇ; சிறு கோட்டு = பெரிய மகிழ்ச்சியையுடைய இருக்கைகளில் தங்கி, சிறிய கோடு போன்ற
384. குழவித் திங்கள் கோள் நேர்ந்தாங்கு = இளைய திங்களைச் பாம்பு தீண்டினாற்போல
385. சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல் =மகரவாய் என்னும் தலைக்கோலத்தை அணிந்த, வண்டுகள் சூழும் ஒளிவீசும்
நெற்றியையும்,
386. நறவு பெயர்த்து அமர்த்த நல் எழில் மழைக் கண் = தேனை உருப்பெயர்த்துக் அமைத்ததைப் போன்ற நல்ல அழகிய குளிர்ச்சியுடைய கண்ணையும் கொண்ட
387. மடவரல் மகளிரொடு பகல் விளையாடி = மடப்பம் மிக்க மகளிரோடு பகற்பொழுதில் விளையாடி
388. பெறற்கு அருந் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும் = பெறுதற்கரிய பழைமையான புகழினையுடைய சுவர்க்கத்தை ஒக்கும்
389. பொய்யா மரபின் பூ மலி பெருந் துறை = பொய்க்காத மரபினையுடைய பூக்கள் மிகுகின்ற பெரிய துநீர்த்றையில்
390. செவ்வி கொள்பவரோடு அசைஇ; அவ் வயின் =இன்பத்தை நுகர்வாரோடு இளைப்பாறி; அவ்விடத்தில் உள்ள
391. அருந் திறல் கடவுள் வாழ்த்தி, சிறிது நும் = அரிய வல்லமைபெற்ற கடவுளை வாழ்த்தி, சிறிதே உம்முடைய
392. கருங் கோட்டு இன் இயம் இயக்கினிர் கழிமின் = கரிய தண்டினையுடைய இனிய இசைக்கருவியை இயக்கியவராய், அவ்விடத்தைவிட்டுச் செல்லுங்கள்
கருத்துரை:
நீண்ட பூங்கொத்துகளையுடைய காந்தள் வளர்கின்ற
மலையில் யானை படுத்திருந்தாற்போலப் பாம்பணையில் திருமால் பள்ளிகொண்டிருக்கின்ற திருவெஃகாவை
அடைவீர்கள். அங்குள்ள சோலையில் குயில்கள் வாழும்; ஆனால், வெயில் நுழைய முடியாது. அந்தச் சோலையில் உள்ள குறுகிய காலையுடைய காஞ்சி மரத்தைக் குருக்கத்திக் கொடிகள் சூழ்ந்திருக்கும். அங்கு, மணலிடத்தே உள்ள குழிகளில் தேங்கி நிற்கும் நீரில் குருக்கத்தியின் வரிகளையுடைய பூக்கள் விழுந்து கிடப்பது, கரிய சட்டியில் அப்ப வாணிகர் சுட்ட அப்பம் பாலிலே
கிடந்தாற்போல் தோன்றும். வெள்ளநீர் தூய்மைப்படுத்திய பொழில்கள்தோறும், திரண்ட தண்டினையுடைய சோலையிடத்து நிற்கும் பாக்கு மரத்தின் சூல்கொண்ட வயிற்றைப்போல் இருக்கும் நீலநிறமுள்ள தோல்பையில் உள்ள கள்ளைக் குடித்து
மகிழுங்கள். பின்னர், பெரிய மகிழ்ச்சியையுடைய இருக்கைகளில் தங்கி, சிறிய கோடு போன்ற இளைய திங்களைப் பாம்பு தீண்டினாற்போல மகரவாய் என்னும் தலைக்கோலத்தைச் சூடிய அழகிய நெற்றியும், தேனை உருப்பெயர்த்து அமைத்ததைப் போன்ற நல்ல அழகிய குளிர்ச்சியுடைய கண்களையும் கொண்ட மடப்பம் மிக்க மகளிரோடு பகற்பொழுதில் விளையாடி, சுவர்க்கத்தைப் போன்ற நீர்த்துறையில் இன்பத்தை
நுகர்வாரோடு இளைப்பாறுங்கள். பின்னர், அவ்விடத்தில் உள்ள அரிய வல்லமைபெற்ற கடவுளை வாழ்த்தி, சிறிதே உம்முடைய கரிய தண்டினையுடைய இனிய இசைக்கருவியை இயக்கியவராய், அவ்விடத்தைவிட்டுச் செல்லுங்கள்.
கச்சி மூதூரின் சிறப்பு
காழோர் இகழ் பதம் நோக்கி, கீழ,
நெடுங் கை யானை நெய்ம் மிதி கவளம்
கடுஞ்சூல் மந்தி கவரும் காவில், 395
களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின்,
திண் தேர் குழித்த குண்டு நெடுந் தெருவில்,
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ்,
கடை கால்யாத்த பல் குடி கெழீஇக்
கொடையும் கோளும், வழங்குநர்த் தடுத்த 400
அடையா வாயில், மிளை சூழ் படப்பை,
நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்
தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றி,
சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின்,
405
இழுமென் புள்ளின் ஈண்டு கிளைத் தொழுதிக்
கொழு மென் சினைய கோளியுள்ளும்
பழம் மீக் கூறும் பலாஅப் போல,
புலவுக் கடல் உடுத்த வானம் சூடிய
மலர் தலை உலகத்துள்ளும் பலர் தொழ,
410
விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர்
அருஞ்சொற்பொருள்:
393. காழ் = குத்துக்கோல், அங்குசம்; இகழ்பதம் = அயர்ந்த சமயம்
394. மிதித்தல் = கலத்தல்; நெய்ம்மிதி கவளம் = நெய் கலந்த சோற்றுருண்டை
395. கடுஞ்சூல் = நிறைசூல்; கா =சோலை.
396. கதன் = கதம் (கடுஞ்சினம்); வெளிறு = மரத்தின் முதிராத இளந்தன்மை; கந்து = யானைகட்டுந் தறி
398. தொலைபு = கெடுதல்; மைந்து = வலிமை; மலிதல் = நிறைதல்
399. யாத்த = கட்டிய; கெழீஇ = பொருந்திய
400. கொடையும் = விற்றலும்; கோளும் = வாங்குதலும், கொள்ளுதலும்
401. மிளை = காவற்காடு; படப்பை = பக்கம்
402. கொப்பூழ் = தொப்புள்
403. பயந்த = பெற்ற
404. பொகுட்டு = மொட்டு; காண்வர = விளங்க
405. சுடுமண் = செங்கல்; ஓங்கிய = உயர்ந்த; நெடுநகர் = உயர்ந்த பெரிய அரண்மனை; வரைப்பு = மதில்
406. இழும் = ஒலிக்குறிப்பு; ஈண்டுதல் = கூடுதல்; தொழுதி = கூட்டம்
407. கொழுமென் = கொழுத்த மெல்லிய; சினை = கிளை; கோளி = பூவாமல் காய்க்கும் மரம்
408. மீக் கூறும் = மேலாகச் சொல்லும்
409. புலவு = புலால்
410. மலர்தலை = பரந்த இடம்
411. விறல் = பெருமை; மூதூர் = பழைய ஊர்
பதவுரை:
393. காழோர் இகழ் பதம் நோக்கி, கீழ = அங்குசத்தையுடைய பாகன் அயர்ந்த சமயம் பார்த்து, கீழே
394. நெடுங் கை யானை நெய்ம் மிதி கவளம் = நெடிய கைகளையுடைய யானைக்கு இடும் நெய்யிட்டுக் கலந்த கவளத்தை
395. கடுஞ்சூல் மந்தி கவரும் காவில் = நிறைசூல் கொண்ட
மந்தி கவர்ந்துகொண்டுபோகும் சோலையினையும்
396. களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின் = களிற்றின் கடுஞ்சினத்தை அடக்கிய முதிராத தன்மை இல்லாத தறிகளையும்.
397. திண் தேர் குழித்த குண்டு நெடுந் தெருவில் = திண்ணிய தேர்கள் ஓடியதால் பள்ளங்களுள்ள நெடிய தெருக்களையும்.
398. படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ் = பகைவரின் படையின்முன் தோல்வியடையாத வலிமை மிகுந்த பெரிய புகழின்
399. கடை கால்யாத்த பல் குடி கெழீஇ = எல்லையை அழித்த, பல மறவர் குடியிருப்புகளைச் சேர்ந்து,
400. கொடையும் கோளும், வழங்குநர்த் தடுத்த = விற்பதும் வாங்குவதும் நிறைந்து நடந்து செல்வோரைத் தடுத்து நிறுத்துவதும்,
401. அடையா வாயில், மிளை சூழ் படப்பை = பரிசிலர்க்கு அடைக்காத வாயிலையும்; காவற்காடு சூழ்ந்த பக்கத்தினையும்
402. நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ் = நீல நிறத்தையுடைய திருமாலின் உந்தியாகிய
403. நான்முக ஒருவற் பயந்த பல் இதழ் = நான்முகன் என்ற ஒருவனைப் பெற்ற பல இதழ்களையுடைய
404. தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றி = தாமரையின் பொகுட்டைப் போன்று அழகுவிளங்கத் தோன்றி,
405. சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின் = செங்கல்லால் செய்யப்பட்டு உயர்ந்த அரண்மனையைச் சூழ்ந்த மதிலினையும்
406. இழுமென் புள்ளின் ஈண்டு கிளைத் தொழுதி = இழுமென்னும் ஒலி எழுப்பும் பறவையினங்களின் கூட்டம் வந்து
தங்கும்
407. கொழு மென் சினைய கோளியுள்ளும் = கொழுவிய மெல்லிய கொம்புகளையுடைனவாகிய, பூவாமல் காய்க்கும் மரங்களுள்ளும்
408. பழம் மீக் கூறும் பலாஅப் போல = பழத்தால் பகழ்பெற்ற பலாமரத்தைப் போன்று,
409. புலவுக் கடல் உடுத்த வானம் சூடிய = புலால் நாற்றத்தையுடைய கடல்சூழ்ந்த வானம் கவிந்த
410. மலர் தலை உலகத்துள்ளும் பலர் தொழ = அகன்ற இடத்தையுடைய உலகத்து நகரங்கள் பலவற்றுள்ளும் பலவேறு சமயத்தாரும் தொழும்படி,
411. விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர் = எடுத்த விழாக்களால் மேம்பட்ட பழைய பெருமை வாய்ந்த மூதூர் (காஞ்சிநகர்)
கருத்துரை:
தொடர்ந்து சென்றால், அங்குசத்தையுடைய பாகன் அயர்ந்த சமயம் பார்த்து, நீண்டு தொங்கும் துதிக்கையை உடைய யானைக்கு இடும் நெய்யிட்டுக் கலந்த சோற்றுருண்டையை நிறைசூல் கொண்ட மந்தி கவர்ந்து சென்று தங்கும் சோலைகளையும், யானைகளின் சினம் அடங்க, அவைகளைக் கட்டும் கட்டுத்தறி நடப்பட்ட இடங்களையும்
காண்பீர்கள். அங்கு, வலிமையான தேர்கள் ஓடியதால் பள்ளங்களுள்ள நெடிய தெருக்களும், பகைவரின் படையின்முன் தோல்வியடையாத வலிமை மிகுந்த, பெரிய புகழையுடைய மறவர்களின் குடியிருப்புகளும் இருக்கும். அங்குப் பொருள்களை விற்பவர்களும் வாங்குபவர்களும் நிறைந்து இருப்பர். அதைக் கடந்து சென்றால், காவற் காட்டையும், அதை அடுத்து அரண்மனை வாயிலையும் அடையலாம். பரிசிலரின் வருகைக்காக அந்த வாயில் எப்பொழுதுமே திறந்தே இருக்கும். வாயிலைக் கடந்தால், அரசனின் அரண்மனை இருக்கும். பல வீதிகளுக்கு நடுவே, செங்கல்லால் கட்டப்பட்டு வானளாவ உயர்ந்ததாக இருக்கும்
அந்த அரண்மனை, இதழ்கள் விரிந்திருக்க இடையே கொட்டை புடைத்திருக்கும்
தாமரை மலரை நினைவூட்டும். அவ்வாறு அந்த அரண்மனை அமைந்திருப்பது, நீல நிறமான திருமாலின் உந்தியில் தோன்றிய பிரமன் இருக்கும் பல இதழ்கள் சூழ்ந்த
தாமரை மொட்டைப்போல் காட்சி அளிக்கும். அந்த அரண்மனை உள்ள கச்சி மாநகரம், புலால் நாற்றமுடைய கடல் சூழ்ந்த இவ்வுலகில், பூவாவாமல் காய்க்கின்ற மரங்களுள் சிறந்த பலாவைப் போன்று, இவ்வுலகில் உள்ள நகரங்கள் அனைத்தையும்விட மிகுந்த சிறப்புடையது; பல சமயத்தாரும் தொழும்படி எடுக்கப்படும் விழாக்களால் சிறந்தது.
இளந்திரையனின் போர் வெற்றி
அவ் வாய் வளர் பிறை சூடிச் செவ் வாய்
அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப,
வெண் கோட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப,
ஈர் ஐம்பதின்மரும், பொருது, களத்து அவிய, 415
பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந் தேர்
ஆராச் செருவின் ஐவர் போல,
அடங்காத் தானையோடு உடன்று மேல்வந்த
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்து,
கச்சியோனே, கை வண் தோன்றல், 420
அருஞ்சொற்பொருள்:
412. வாய் = இடம்; அவ்வாய் = அழகிய இடம்; செவ்வாய் = சிவந்த இடம்
413. ஆடு மழை = அசையும் மேகம்; கடுப்ப = போல
414. இரும் = கரிய; குருதி = இரத்தம்; ஈர்ப்ப = இழுத்துச் செல்லுமாறு
415. ஈர் ஐம்பதின்மர் = நூற்றுவர் (கௌரவர்); பொருது = சண்டையிட்டு; அவிய = இறக்கும்படி
416. கொடுஞ்சி = தேர்முன் உள்ள அலங்காரவுறுப்பு
417. ஆராச்செரு = தொலையாத போர்; ஐவர் = பாண்டவர் ஐவர்
418. உடன்று = சினந்து
419. ஒன்னா = பொருந்தாத; தெவ்வர் = பகைவர்; உலைவு = தோல்வி; ஆர்த்து = ஆரவாரித்து
420. கச்சியோன் = காஞ்சிபுரத்தில் உள்ளவன்; தோன்றல் = தலைவன்.
கை வண் தோன்றல் = கைகளால் வழங்கும் தலைவன் (தொண்டைமான் இளந்திரையன்)
பதவுரை:
412. அவ் வாய் வளர் பிறை சூடிச் செவ் வாய் = அழகிய
வடிவுடைய வளர்பிறையைச் சூடிச்,
சிவந்த இடத்தையுடைய
413. அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப = அந்திப்பொழுதின் சிவந்த
வானத்தில் அசைகின்ற மேகங்களைப்போல்
414.
வெண் கோட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப = வெண்மையான
கொம்பையுடைய கரிய யானையின்
பிணத்தைக் இரத்த ஆறு
இழுத்துச்செல்லும்படி,
415. ஈர் ஐம்பதின்மரும், பொருது, களத்து அவிய = துரியோதனன் முதலான நூற்றுவரும்
போரிட்டுப் போர்க்களத்தே அழியும்படி,
416. பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந் தேர் = பெரிய
போரினை வென்று கடந்த,
கொடுஞ்சி என்ற அலங்கார அமைப்புடன் கூடிய நெடிய தேர்ப்படையையுடைய
417.
ஆராச் செருவின் ஐவர் போல = தோற்காத
போரினையுடைய தருமன் முதலான
ஐவரைப்போல்
418.
அடங்காத் தானையோடு உடன்று மேல்வந்த = எண்ணில்
அடங்காத படையுடன் சினந்து
தன்மேல் வந்த
419. ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்து = தன்
ஏவலுக்கு அடங்காத பகைவர்கள்
தோற்றவிடத்தே வெற்றிக்களிப்புத் தோன்ற
ஆரவாரித்து,
420, கச்சியோனே, கை வண் தோன்றல் = காஞ்சிபுரத்துள்ளான்,
கையால் வழங்கும் வண்மையில்
சிறந்தவன் தொண்டைமான் இளந்திரையன்
கருத்துரை:
துரியோதனன் முதலான
நூற்றுவரையும் தருமன் முதலான
ஐவர் போரிட்டுப் போர்க்களத்தில் அழித்தபொழுது, இரத்த
ஆற்றில் கரிய யானை
இழுத்துக்கொண்டு செல்லப்பட்டது
சிவந்த அந்திவானத்தில் மேகம்
அசைவதைப்போல் இருந்தது. அதுபோல், அடங்காத
பெரிய படையுடன் சினந்து
தன்மேல் வந்த, தன்
ஏவலுக்கு அடங்காத பகைவர்கள்
தோற்றபொழுது, வெற்றிக்களிப்போடு ஆரவாரித்தவன்
காஞ்சிபுரத்தில் உள்ள
தொண்டைமான் இளந்திரையன்.
சிறப்புக் குறிப்பு:
கொடுஞ்சி நெடுந்தேர்: இது தேர்களில் ஒரு வகை. கொடுஞ்சி என்பது தேரின்
முன்புறம் அமைக்கப்படும் ஓர் அலங்கார அமைப்பாகும். மேலும் தேரில் பயணிப்போர் அதைப்
பிடித்துக்கொள்ளவும் பயன்படும்.
அரசனது முற்றச் சிறப்பு
நச்சிச் சென்றோர்க்கு ஏமம் ஆகிய
அளியும் தெறலும் எளிய ஆகலின்,
மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ் பட,
நயந்தோர் தேஎம் நன் பொன் பூப்ப,
நட்புக் கொளல் வேண்டி, நயந்திசினோரும், 425
துப்புக் கொளல் வேண்டிய துணையிலோரும்,
கல் வீழ் அருவி கடல் படர்ந்தாங்கு,
பல் வேறு வகையின் பணிந்த மன்னர்
இமையவர் உறையும் சிமையச் செவ் வரை,
வெண் திரை கிழித்த, விளங்கு சுடர் நெடுங் கோட்டுப்
430
பொன் கொழித்து இழிதரும், போக்கு அருங் கங்கைப்
பெரு நீர் போகும் இரியல் மாக்கள்
ஒரு மரப் பாணியில் தூங்கியாங்கு
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ,
செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து, 435
அருஞ்சொற்பொருள்:
421. நச்சி = விரும்பி; ஏமம் = பாதுகாவல்
422. அளி = அருள்; தெறல் = அழித்தற்குரிய மறப்பண்பு
423. மலைந்தோர் = போரிட்டவார்கள்; தேஎம் = தேசம்; மன்றம் = பொதுவிடம்
424, நயந்தோர் =தன்னை விரும்பியவர்; பூப்ப = விளங்கித் தோன்ற
425. நயந்திசினோர் = நட்புக்கொள்ளுதலை விரும்பி அவனை விரும்பினவர்கள்
426. துப்பு
= வலிமை
427. கல்
= மலை;
படர்ந்தாங்கு = சென்று கலந்தாற்போல்
429. இமையவர்
= இமைத்தல் இல்லாத இமையினையுடைய
தேவர்கள்; உறையும் = வாழும்;
சிமையம் = சிகரம்; செவ்வரை
= இமய மலை
430. திரை
= அலை;
விளங்கு சுடர் = விளங்கும்
ஒளி;
நெடுங்கோடு = நெடிய மலை
431. கொழித்தல்
= ஒதுக்குதல், வாருதல்; இழிதரும்
= குதிக்கும்; போக்கு அரும்
= கடத்தற்கரிய
432. இரியல்
= கெடுதல்
433. ஒரு
மரம் = மரக்கலம்; பாணி
= காலம்
434. தொய்யா = கெடாதா;
வெறுக்கை = செல்வம்; துவன்று
= நெருங்கி நின்று; குழீஇ
= திரண்டு
435. செவ்வி
= சமயம்; செழுநகர் = வளமான
அரண்மனை
பதவுரை:
421.
நச்சிச் சென்றோர்க்கு ஏமம் ஆகிய = அவன் தன்னை விரும்பித் தன்னிடம்
வந்தோர்க்குப் பாதுகாவல் ஆகிய
422. அளியும் தெறலும் எளிய ஆகலின் =
அருள்செய்தலும், தன்னைப் பகைத்தவர்களை
அழித்தலும் தனக்குச் செய்தற்கு
எளிய செயல்கள் ஆதலால்,
423. மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ் பட = தன்னை
எதிர்ப்போரின் ஊர்களிலுள்ள மக்கள்
கூடும் பொதுவிடங்கள் பாழ்பட்டுப்
போகவும்,
424. நயந்தோர் தேஎம் நன் பொன் பூப்ப = தன்னை
விரும்பியவர்களின் நாட்டில்
நல்ல பொன் பூத்துத்
திகழவும்,
425. நட்புக் கொளல் வேண்டி, நயந்திசினோரும் = நட்புக் கொள்ளுதலை வேண்டி
அவனை விரும்பினவர்களும்,
426. துப்புக் கொளல் வேண்டிய துணையிலோரும் = அவன்
வலிமையைத் துணையாகக் கொள்ளக்
கருதிய வேறோர் துணை
இல்லாதவர்களும்
427. கல் வீழ் அருவி கடல் படர்ந்தாங்கு = மலையிலிருந்து
விழுகின்ற அருவி கடலில்
கலந்தாற்போல
428. பல் வேறு வகையின் பணிந்த மன்னர் = பலவேறு
வகைகளாலும் கீழ்ப்படிந்த அரசர்கள்
429. இமையவர் உறையும் சிமையச் செவ் வரை = தேவர்கள்
வாழும் உச்சியையுடைய இமய
மலையில்
430. வெண் திரை கிழித்த, விளங்கு சுடர் நெடுங் கோட்டு = வெண்மையான அலைகளையுடைய
நீர் பிளந்து பாய்வதால்
விளங்கும் ஒளியையுடைய உச்சியிலிருந்து
431. பொன் கொழித்து இழிதரும், போக்கு அருங் கங்கை =
பொன்னைக் கொழித்துக்கொண்டு ஓடி
வரும் கடத்தற்கரிய கங்கையாற்றில்
432. பெரு நீர் போகும் இரியல் மாக்கள் = பெரிய
நீரைக் கடந்துபோகும் தங்கள்
நாடு இழந்து கெட்ட
மக்கள்
433. ஒரு மரப் பாணியில் தூங்கியாங்கு = கங்கையைக் கடக்க உதவும் தோணி ஒன்றே ஆதலால், அந்தத் தோணி வரும் காலத்திற்காகக் காத்திருத்தலைப் போல
434. தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ = கெடாத
செல்வத்தோடு நெருங்கித் திரண்டு,
435. செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து = திரையனைக் காணும் நேரத்தை எதிர்பார்த்துக்கும் வளம் மிகுந்த
முற்றத்தில்
கருத்துரை:
தொண்டைமான் இளந்திரையன்
வள்ளன்மையில் சிறந்தவன்; தன்னை
நாடி வந்தவர்களுக்குப் பாதுகாவலாக
இருப்பவன். அருள்செய்தலும், தன்னைப்
பகைத்தவர்களை அழித்தலும் அவனுக்கு
எளிய செயல்கள். அதனால்,
அவனை எதிர்ப்பவர்களின் ஊர்களிலுள்ள
மக்கள் கூடும் பொதுவிடங்கள்
பாழடையும். அவனை விரும்பியவர்களின் நாட்டில் நல்ல
பொன் பூத்துத் திகழும்.
நட்புக் கொள்ளுதலை வேண்டி
விரும்பினவர்களும், அவன் வலிமையைத்
துணையாகக் கொள்ளக் கருதிய
வேறோர் உதவியில்லாதவர்களும், மலையினின்று
விழுகின்ற அருவி கடலில்
கலப்பதுபோல் அவனை நோக்கி
வருவர். இவ்வாறு
பலவேறு வகைகளிலும் அவனுக்குக்
கீழ்ப்படிந்த அரசர்கள் வந்து அவனைக்
காண்பதற்காகக் காத்திருப்பது, தேவர்கள்
வாழும் இமய
மலையிலிருந்து ஓடிவரும் கடத்தற்கரிய
கங்கையாற்றின் பெரிய நீரைக்
கடந்துசெல்ல விரும்பும் நாடு
இழந்து கெட்ட மக்கள்,
கங்கையைக் கடக்க உதவும் தோணி ஒன்றே ஆதலால், அந்தத் தோணி வரும் காலத்திற்காகக் காத்திருப்பதைப்போல் இருக்கும்.
திரையன் அமைச்சர்களோடு அரசு
வீற்றிருக்கும் காட்சி
பெருங் கை யானைக் கொடுந் தொடி படுக்கும்
கருங் கைக் கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த
கூடத் திண் இசை வெரீஇ, மாடத்து
இறை உறை புறவின் செங் கால் சேவல்,
இன் துயில் இரியும் பொன் துஞ்சு வியல் நகர் 440
குண கடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
பகல் செய் மண்டிலம் பாரித்தாங்கு,
முறை வேண்டுநர்க்கும், குறை வேண்டுநர்க்கும்,
வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி,
இடை தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி, 445
கொடைக் கடன் இறுத்த கூம்பா உள்ளத்து,
உரும்பு இல் சுற்றமோடு இருந்தோற் குறுகி,
அருஞ்சொற்பொருள்:
436. கொடுந் தொடி = வளைந்த அணி; படுக்கும் = சேர்க்கும், செய்யும்
437. விசைத்து = கடுமையாக; எறிந்த = அடித்த
438. வெரீஇ = அஞ்சி; மாடத்து = வீட்டின்
439. புறவு = புறா
440. இரியும் = பறக்கும்; பொன் = செல்வம்; பொன் துஞ்சும் = பயன்படுத்தப் படாமல் செல்வம் மிகுந்து கிடக்கும்; வியல் = அகன்ற; நகர் = அரண்மனை
441. குண கடல் = கிழக்குக் கடல்; வரைப்பு = எல்லை; முந்நீர் = கடல்; நாப்பண் = நடுவே
442, மண்டிலம் = கதிரவன்; பாரித்து = பரப்பி
443. முறை = நீதி; வேண்டுநர் = வேண்டியவர்
444. வேண்டுப = வேண்டியவற்றை; அருளி = கொடுத்து
445. இடை = காரணம்; இருள்= மயக்கம்; இருள் தீர் காட்சி = மயக்கமில்லாத அறிவு
446. கொடைக் கடன் = கொடை என்னும் கடமை; இறுத்த =முடித்த; கூம்பா = குறுகாத
447. உரும்பு = கொடுமை; குறுகி =அணுகி
பதவுரை:
436. பெருங் கை யானைக் கொடுந் தொடி படுக்கும் = பெரிய துதிக்கையையுடைய யானையின் தந்தத்திற்கு வளைந்த பூணைச் செய்யும்
437. கருங் கைக் கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த = வலிய கைகளையுடைய கொல்லன் இரும்பாலான சம்மட்டியை ஓங்கி அடித்த
438. கூடத் திண் இசை வெரீஇ, மாடத்து = பட்டடையிலிருந்து எழுந்த பெரிய ஓசைக்கு அஞ்சி, மாடத்தின்
439. இறை உறை புறவின் செங் கால் சேவல் = குறுகிய கூரைப்பகுதியில் வாழும் புறாவின் சிவந்த கால்களையுடைய சேவல்
440. இன் துயில் இரியும் பொன் துஞ்சு வியல் நகர் = இனிய உறக்கத்தை இழக்கின்ற, பயன்படுத்தப்படாமல் செல்வம் மிகுந்து கிடக்கும் அகன்ற அரண்மனையில்
441. குண கடல் வரைப்பின் முந்நீர் நாப்பண் = கிழக்குக் கடலின் அடிவானத்தின் நடுவில்
442. பகல் செய் மண்டிலம் பாரித்தாங்கு = பகற்பொழுதைச் செய்யும் ஞாயிறு தன் கதிர்களைப் பரப்பித் தோன்றினாற் போல,
443. முறை வேண்டுநர்க்கும், குறை வேண்டுநர்க்கு = நீதி கேட்டுவந்தவர்க்கும், வறுமையோடு வந்து இரப்போர்க்கும்
444. வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி = வேண்டியவற்றை எல்லாம் வேண்டியவர்க்கு வழங்கி
445. இடைத் தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி =கூறாமலே குறிப்பால் தெரிந்து உணரும் மயக்கமற்ற அறிவுடையவனாய்
446. கொடைக் கடன் இறுத்த கூம்பா உள்ளத்து = கொடை எனும் கடமையைச் செய்துமுடித்த பரந்த உள்ளத்துடன்
447. உரும்பு இல் சுற்றமோடு இருந்தோற் குறுகி = குடிமக்கட்குக் கொடுமை செய்ய நினைக்காத அமைச்சர் சுற்றத்தோடு அரியணையில் அமர்ந்திருக்கும் தொண்டைமான் இளந்திரையனை அணுகி
கருத்துரை:
தொண்டைமான் இளந்திரையனின்
அரண்மனைக்கு அருகில் உள்ள
கொல்லன் பட்டடையில், கொல்லன்
யானைக்குப் பூண் செய்வதற்காக
இரும்பைச் சம்மட்டியால் அடிக்கும்
ஓசை கேட்டு, அரண்மனையின்
குறுகிய கூரைப்பகுதியில் வாழும்
புறா பறந்து ஓடும்.
அந்த அரண்மனையில் பயன்படுத்தப்படாமல் செல்வம் குவிந்து
கிடக்கும். அந்த அரண்மனையில்
இருக்கும் இளந்திரையன் கடலின்
நடுவே ஞாயிறு தோன்றி
ஒளி செய்தாற்போன்று மயக்கமில்லாத
அறிவுடையவன். அவன், நீதி
கேட்டு வந்தவர்க்கும், வறுமையோடு
வந்து இரப்பவர்க்கும் அவர்கள்
கேட்காமலேயே குறிப்பால் உணர்ந்து
அவர்கள் விரும்பியதை வழங்கும்
சிறந்த அறிவுடையவன். இவ்வாறு
கொடை என்னும் கடமையைச் செய்துமுடித்த பரந்த உள்ளத்துடன், குடிமக்கட்குக் கொடுமை செய்ய நினைக்காத அமைச்சர் சுற்றத்தோடு உள்ள இளந்திரையனை அணுகுவீராக!
பாணன் அரசனைப் போற்றிய வகை
பொறி வரிப் புகர்முகம் தாக்கிய வய மான்
கொடு வரிக் குருளை கொள வேட்டாங்கு,
புலவர் பூண் கடன் ஆற்றி, பகைவர் 450
கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும்
வென்றி அல்லது, வினை உடம்படினும்,
ஒன்றல் செல்லா உரவு வாள் தடக் கை,
கொண்டி உண்டி, தொண்டையோர் மருக!
மள்ளர் மள்ள! மறவர் மறவ! 455
செல்வர் செல்வ! செரு மேம்படுந!
வெண் திரைப் பரப்பின் கடுஞ் சூர் கொன்ற
பைம் பூண் சேஎய் பயந்த மா மோட்டு,
துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு,
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி, 460
வந்தேன், பெரும! வாழிய நெடிது!' என,
இடனுடைப் பேர் யாழ் முறையுளிக் கழிப்பி,
கடன் அறி மரபின் கைதொழூஉப் பழிச்சி,
நின் நிலை தெரியா அளவை அந் நிலை
அருஞ்சொற்பொருள்:
448.
பொறி = புள்ளி; வரி
= வண்டு; புகர் = புள்ளி;
வயமான் = சிங்கம்
449.
கொடு வரி = வளைந்த
கோடுகள்; குருளை = புலிக்குட்டி;
வேட்டாங்கு = வேட்டையாடியதுபோல்
450. பூண்
கடன் = பொன் அணி
பூட்டுதல் போன்ற கடமை
451. கடி
மதில் = காவல் உள்ள
மதில்; எறிந்து = அழித்து;
குடுமி = மணிமுடி
452. வென்றி
= வெற்றி; உடம்படுதல் = (சந்துசெய்வதற்கு)
உடன்படுதல்
453. ஒன்றல்
= ஒத்துப்போதல்; உரவு = வலிமை;
தடக்கை = பெரிய கை
454. கொண்டி
= கொள்ளை; மருகன் = வழித்தோன்றல்
455. மள்ளர்
= வீரர்; மறவர் = கொடியவர்
456. செரு
= போர்; மேம்படுநன் = மேம்பாடு
உற்றவன், சிறந்தவன்
457, வெண்திரை
= வெண்ணிற அலை; கடுஞ்சூர்
= கடிய சூரன்
458. பைம்பூண்
= பசும்பொன்னாற் செய்யப்பட்ட அணிகலன்;
சேய் =முருகன்; பயந்த
= பெற்ற; மா = பெருமை;
மோடு = வயிறு
459. துணங்கு
- இங்கு காளிக்கு முன்னர்
பேய்கள் ஆடும் கூத்து
என்று பொருள்; நொடி
= புதுச்செய்தி
460. தண்டா
= குறையாத; ஏத்தி = புகழ்ந்து
462. இடன்
உடை
= இடப்பக்கத்தில் உள்ள; முறையுளி
= முறைப்படி; கழிப்பி = இயக்கி
463. தொழூஉ
= வணங்கி; பழிச்சி = பாராட்டி
பதவுரை:
448. பொறி வரிப் புகர்முகம் தாக்கிய வய மான் = புள்ளிகளையுடைய வண்டுகள் மொய்க்கும்
புள்ளிகள் பொருந்திய முகத்தையுடைய
யானையைத் தாக்கிய சிங்கம்
449. கொடு வரிக் குருளை கொள வேட்டாங்கு = வளைந்த கோடுகளையுடைய புலிக்குட்டியைப் பாய்ந்து
கொல்ல விரும்பியதுபோல்
450. புலவர் பூண் கடன் ஆற்றி, பகைவர் = புலவர்க்குப் பொன்னாலான அணிகலன்கலன்களைச் சூட்டுவது போன்ற
கடமைகளைச் செய்து முடித்து,
பகைவருடைய
451. கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும் = காவலமைந்த
மதில்களை அழித்து, அந்த
மன்னர்களின் மணிமுடி (கிரீடம்)
முதலியவற்றைக் கைப்பற்றிக் கொள்ளும்
452. வென்றி அல்லது, வினை உடம்படினும் =
வெற்றியையே அல்லது அந்த
பகைமன்னர்கள் பணிந்து உடன்படினும்
453. ஒன்றல் செல்லா உரவு வாள் தடக் கை = அதை
ஏற்றுக்கொள்ளாமல் வலிய
வாளினையுடைய பெரிய கையினையும்
454. கொண்டி உண்டி, தொண்டையோர் மருக! = பகைவர் நாடுகளை வென்று,
கொண்ட கொள்ளைப் பொருளாகிய
உணவையும் உடைய தொண்டையோர்
குடியிற் பிறந்தவனே,
455. மள்ளர் மள்ள! மறவர் மறவ! = வீரர்க்கு வீரனே! கொடியவர்க்குக் கொடியவனே!,
456. செல்வர் செல்வ! செரு மேம்படுந! =
செல்வர்க்குச் செல்வனே, போர்த்தொழிலில் மிக்கவனே!
457. வெண் திரைப் பரப்பின் கடுஞ் சூர் கொன்ற = வெண்மையான
அலைகளையுடைய கடலில் சென்று
கடிய சூரனைக் கொன்ற
458. பைம் பூண் சேஎய் பயந்த மா மோட்டு = பொன்னாலான
அணிகளை அணிந்த முருகனைப்
பெற்ற பெருமையுடைய வயிற்றையும்,
459. துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு = பேய்கள்
ஆடும் துணங்கைக்கூத்தையும் உடைய
அழகிய இறைவிக்குப் பேய்மகள்
சில புதிய செய்தி
சொல்லியதைப் போன்று
460. தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி = குறையாத கொடையினையுடைய
உன் பெரும் புகழைப்
பாராட்டி
461. பெரும! வாழிய நெடிது!' என = வந்தேன் பெருமானே,
நீ நெடுங்காலம் வாழ்வாயாக'
என்று சொல்லி
462. இடனுடைப் பேர் யாழ் முறையுளிக் கழிப்பி = இடப்பக்கத்தே
உடைய பேரியாழை முறைப்படி
இயக்கி
463. கடன் அறி மரபின் கைதொழூஉப் பழிச்சி = மன்னர்களை
வாழ்த்தும் முறைப்படி, கையால்
தொழுது நாவால் புகழ்ந்து
464. நிலை தெரியா அளவை அந் நிலை = உனது நிலையை
இளந்திரையன் தெரிந்துகொள்வதற்கு முன்னரே,
கருத்துரை:
”மதநீர் ஒழுகுவதால்
வண்டுகள் மொய்க்கும் யானையின்
முகத்தைத் தாக்கிய சிங்கம்,
புலிக்குட்டியைப் பாய்ந்து
கொல்ல விரும்பியதுபோல், புலவர்களுக்குப் பொன்னாலான அனிகலன்களைச்
சூட்டுவது போன்ற கடமைகளைச்
செய்து முடித்துப் பகைவருடைய காவலமைந்த மதில்களை அழித்து,
அந்த மன்னர்களின் மணிமுடி
(கிரீடம்)
முதலியவற்றைக் கைப்பற்றிக்கொண்டு, போரில்
வெற்றி பெறுவதைத் தவிர,
சந்துசெய்வதை நோக்கமாகக் கொள்ளாத
வேந்தனே! வலிய வாளினையுடைய
பெரிய கையினையும் பகைவர்
நாடுகளை வென்று, கொண்ட
கொள்ளைப் பொருளாகிய உணவையும்
உடைய தொண்டையோர் குடியிற்
பிறந்தவனே! வீரர்க்கு வீரனே! கொடியவர்க்குக் கொடியவனே! செல்வர்க்குச்
செல்வனே! போர்த்தொழிலில் மிக்கவனே!
கடலில் சென்று கடிய
சூரனைக் கொன்ற பொன்னாலான
அணிகளை அணிந்த முருகனைப்
பெற்ற பெருமையுடைய வயிற்றையும்,
பேய்களாடும் துணங்கைக்கூத்தையும் உடைய
அழகிய இறைவிக்குப் பேய்மகள்
சில புதிய செய்தி
சொல்லியதைப் போன்று, குறையாத
கொடையினையுடைய உன் பெரும்
புகழைப் பாராட்டி வந்தேன்
பெருமானே, நீ நெடுங்காலம்
வாழ்வாயாக” என்று சொல்லி,
பேரியாழை முறைப்படி இயக்கி,
மன்னர்களை வாழ்த்தும் முறைப்படி,
கையால் தொழுது நாவால்
புகழ்ந்து வாழ்த்துவாயாக! உனது
நிலையை இளந்திரையன் தெரிந்துகொள்வதற்கு முன்னரே,
சிறப்புக் குறிப்பு:
இறைவிக்குமுன் பேய்கள்
துணங்கைக் கூத்து ஆடுவதாகக்
கூறப்படுகிறது. பேய்கள் ஆடும்
துணங்கைக் கூத்தை இறைவி
கண்டுகளிப்பதாகவும் கூறப்படுகிறது.
இறைவிக்குத் தெரியாதது ஒன்றும்
இல்லை. ஆகவே, பேய்கள்
இறைவிக்குத் தெரியாத எதையும்
கூற முடியாது. அதுபோல்,
பலராலும் புகழப்படும் தொண்டைமான்
இளந்திரையனைப் பாணன் புகழ்ந்து
பாடுவது, எல்லாம் அறிந்த இறைவிக்கு
முன் பேய்கள் அவளுக்கு
ஒரு புதிய செய்தி
சொல்வதைப் போன்றது என்று
ஆற்றுப்படுத்தும் பாணன்
கூறுகிறான்.
பாணர்க்கு விருப்புடன் உணவளித்தல்
நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க, 465
நில்லா உலகத்து நிலைமை தூக்கி,
அந் நிலை அணுகல் வேண்டி, நின் அரைப்
பாசி அன்ன சிதர்வை நீக்கி,
ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ, 470
கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை
வல்லோன் அட்ட பல் ஊன் கொழுங் குறை,
அரி செத்து உணங்கிய பெருஞ் செந்நெல்லின்
தெரி கொள் அரிசித் திரள் நெடும் புழுக்கல்,
அருங் கடித் தீம் சுவை அமுதொடு, பிறவும், 475
விருப்புடை மரபின் கரப்புடை அடிசில்,
மீன் பூத்தன்ன வான் கலம் பரப்பி,
மகமுறை, மகமுறை நோக்கி, முகன் அமர்ந்து,
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி,
மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும் 480
அருஞ்சொற்பொருள்:
465. நாவலம் தண் பொழில் = நாவல் மரத்தால் பெயர்பெற்று சம்புத் தீவு என்று அழைக்கப்படும் குளிர்ந்த
இவ்வுலகம்; வீவு = கேடு
466. தூக்கி = ஆராய்ந்து
467. அரை = இடை
468. பாசி – பாசியின் வேர்க்கு ஆகுபெயர்; சிதர்வை = கந்தலுடை
469. ஆவி – இங்குப் பாலாவியைக்
குறிக்கிறது; அவிர்தல் = ஒளிதல்; கலிங்கம் =ஆடை
470. ஒக்கல் = சுற்றம்; உடீஇ = உடுத்து
471. கொடு வாள் = அரிவாள்; கதுவிய = பிடித்த; நோன் = வலிய
472. அட்ட = சமைத்த; குறைத்தல் = துண்டு செய்தல்
473. அரி = நெற்கதிரை
அரிந்திட்ட குவியல்; செத்து = வற்றிப்போகும்படி; உணங்கிய = உலர்ந்த
474. தெரித்தல் = கொழித்தல்; புழுக்கல் = சோறு
475. அருங்கடி = அரிய காவல்; தீம் = இனிய
476. விருப்பு = விருப்பம்; கரப்பு = மூடிவைத்த; அடிசில் = உணவு
477. வான் = வெண்மையான (வெள்ளி)
478. மகமுறை = தாய் தன் பிள்ளையைப் பார்ப்பதுபோல்; முகன் அமர்ந்து = முகம் இனிது காட்டி
479. ஆனா = குறையாத; விருப்பு = விருப்பம்
480. மங்குல் = திசை; ஏய்க்கும் = போன்ற
பதவுரை:
465. நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க = நாவலால் பெயர்பெற்ற
அழகிய குளிர்ந்த இந்த
உலகமெல்லாம் கேடில்லாமல் விளங்கும்படி
466. நில்லா உலகத்து நிலைமை தூக்கி = நிலையற்ற
இவவுலகில் நிலையானது எது
என்று ஆராய்ந்து, புகழ்
ஒன்றே என்று ஆறிந்து,
467. அந் நிலை அணுகல் வேண்டி, நின் அரை =
அந்தப் புகழை அடையும்
பொருட்டு, உன் இடுப்பில்
கிடந்த
468. பாசி அன்ன சிதர்வை நீக்கி = பாசியின்
வேரைப்போல் சிதைந்து அழிந்த
கந்தையை அகற்றி,
469. ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம் = பாலாவியைப்
போன்ற, ஒளிரும் நூலால்
செய்த ஆடைகளை
470. இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ = உன் மிகப் பெரிய சுற்றத்தார் அனைவரையும்
உடுக்கச் செய்து,
471. கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை = வளைந்த
அரிவாளைக் கொண்ட வடு
அழுந்தின வலிவுள்ள கையினையுடைய
472. வல்லோன் அட்ட பல் ஊன் கொழுங் குறை = திறமையான
சமையல்காரன் ஆக்கிய பலவகை
இறைச்சியின் கொழுத்த தசைத்
துண்டுகளை
473. அரி செத்து உணங்கிய பெருஞ் செந்நெல்லின் = அரியப்பட்ட
கதிர்க்குவியல்கள் ஈரமற்றுப்போக
உலரவிட்ட பெரிய செந்நெல்லினுடைய
474. தெரி கொள் அரிசித் திரள் நெடும் புழுக்கல் = கல்லும்
பிறவும் போகப் பொறுக்கி
எடுத்த அரிசியால் ஆக்கின
திரண்ட நெடிய சோற்றையும்,
475. அருங் கடித் தீம் சுவை அமுதொடு, பிறவும் = அரிய
காவல்மிக்க இடத்தில் வைத்துக்
காப்பாற்றிய இனிய சுவையுடைய
அமிழ்தம் போன்ற உணவும்
பிறவும் ஆகிய
476. விருப்புடை மரபின் கரப்புடை அடிசில் = காண்பவர் விரும்பும் கலங்களில் மூடிவைத்துக்
காப்பாற்றிய உணவு வகைகளை
477. மீன் பூத்தன்ன வான் கலம் பரப்பி = விண்மீன்கள்
இரவில் மலர்ந்தாற் போன்ற
வெள்ளிக் கலங்களைப் பரப்பி,
478. மகமுறை, மகமுறை நோக்கி, முகன் அமர்ந்து = தாய் பிள்ளையைப்
பார்க்குமாறு திரும்பத்திரும்பப் பார்த்து,
முகம் இனிது காட்டி,
479. ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி = குன்றாத
விருப்பத்துடன் தான் எதிர்நின்று
உண்ணச்செய்து
கருத்துரை:
நிலையில்லாத
இவ்வுலகில் நிலையானது எது
என்று ஆராய்ந்து, புகழ்
ஒன்றே என்று அறிந்து, பாசியின் வேரைப் போல் சிதைந்து
அழிந்த கந்தையை அகற்றி,
பாலாவியைப் போன்ற ஒளிரும்
நூலால் செய்த ஆடைகளை
உனக்கும் உன் சுற்றத்தார்
அனைவருக்கும் கொடுத்து உடுக்கச்
செய்வான். வளைந்த அரிவாளை
அடிக்கடிப் பயன்படுத்துவதால் காழ்ப்பேறிய
கையையுடைய சமையல்காரன் சமைத்த
பலவகை இறைச்சியின் கொழுத்த
தசைத் துண்டுகளை, அரியப்பட்ட கதிர்க்குவியல்கள் ஈரமற்றுப்போக உலரவிட்ட
செந்நெல்லின் பெரிய கல்லும்
பிறவும் போகப் பொறுக்கி
எடுத்த அரிசியால் ஆக்கின
சோற்றையும், இனிய சுவையுடைய
பிற உணவுகளையும் வெள்ளிக்கலங்களில் இட்டு, தாய்
பிள்ளையைத் திரும்பத்திரும்பப் பார்த்து,
முகம் இனிது காட்டி
குன்றாத விருப்பத்துடன் ஊட்டுவதுபோல்
கொடுத்து உங்களை உண்ணச்செய்வான்.
பரிசு வழங்குதல்
மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும் 480
ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை
நீடு இரும் பித்தை பொலியச் சூட்டி;
உரவுக் கடல் முகந்த பருவ வானத்துப்
பகற் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்தாங்கு,
புனை இருங் கதுப்பகம் பொலிய, பொன்னின் 485
தொடை அமை மாலை விறலியர் மலைய;
நூலோர் புகழ்ந்த மாட்சிய, மால் கடல்
வளை கண்டன்ன வால் உளைப் புரவி,
துணை புணர் தொழில, நால்கு உடன் பூட்டி,
அரித் தேர் நல்கியும் அமையான், செருத் தொலைத்து 490
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஒழித்த
விசும்பு செல் இவுளியொடு பசும் படை தரீஇ,
அன்றே விடுக்கும் அவன் பரிசில்.
அருஞ்சொற்பொருள்:
480. மங்குல்
= இருள்; ஏய்க்கும் = போன்ற
481. இமிரா
= மொய்க்காத; அழல் = தீ; அவிர்
= ஒளி
482. இரும்
= கரிய; பித்தை = மயிர்;
பொலிய = அழகு பெற
483. உரவு
= வலிமை
484. பெயல்
= மழை
485. புனைதல்
= அழகு படுத்தல்; இரும்
= கரிய; கதுப்பு = மயிர்;
பொலிய = அழகு பெற
486. தொடை
அமை
= தொடுக்கப்பட்ட; மலைய = சூடிக்
கொள்ள
487. மாட்சிய
= மாண்புடையனவாக; மால் = கருமை
488. வளை
= சங்கு; வால் = வெண்மை;
உளை = குதிரையின் பிடரி
மயிர்; புரவி = குதிரை
489. துணை
புணர் = தன்னோடு இணையாகப்
பூட்டுதல்; தொழில =தொழில்
செய்யும்; நால்கு = நான்கு
490. அரி
= பொன்; நல்கி = கொடுத்து;
அமையான் = மன நிறைவு
கொள்ளாதவன்; செரு = போர்
491. ஒன்னா = பொருந்தாத;
தெவ்வர் = பகைவர்; உலைவிடம்
= புறமுதுகு காட்டி ஓடியவிடம்
492. விசும்பு
= ஆகாயம்; இவுளி = குதிரை;
பசும்புடை = பசிய சேணம்;
தரீஇ = தந்து
பதவுரை:
480.மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும் = இருண்ட வானத்தின்கண்
தோன்றும் திங்களைப் போன்ற
481. ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை = பறக்கும்
வண்டுகள் மொய்க்காத தீயில்
மலர்ந்த பொற்றாமரையை
482. நீடு இரும் பித்தை பொலியச் சூட்டி = நீண்ட
கரிய மயிரில் அழகுபெறச்
சூட்டி
483. உரவுக் கடல் முகந்த பருவ வானத்து = வலிய
கடலின்கண் நீரை முகந்துகொண்டு
பருவ கால வானத்தில்
484, பகற் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்தாங்கு = பகலில்
பெய்கின்ற துளிமழையின்கண் மின்னல்
தோன்றினாற் போல,
485. புனை இருங் கதுப்பகம் பொலிய, பொன்னின் = அலங்கரித்த கரிய
மயிரிடம் அழகு பெறும்படிப்
பொன்னால் செய்து
486. தொடை அமை மாலை விறலியர் மலைய = தொடுத்த
மாலையை ஆடும் மகளிர்
சூடிக்கொள்ள
487. நூலோர் புகழ்ந்த மாட்சிய, மால் கடல் = குதிரை இலக்கண நூல்கற்றோர்
புகழ்ந்த மாண்புடையனவாய், கரிய
கடலில்
488. வளை கண்டன்ன வால் உளைப் புரவி = சங்கைக்
கண்டாற் போன்ற வெண்மையான
பிடரி மயிரை உடைய
குதிரைகள்
489. துணை புணர் தொழில, நால்கு உடன் பூட்டி = தன்னுடன் சேர்ந்தவையோடு
ஒத்துத் தொழில்செய்யும், நான்கினை
ஒருசேரப் பூட்டி,
490. அரித் தேர் நல்கியும் அமையான், செருத் தொலைத்து =
பொன்னால் செய்த தேரைத்
தந்தும் மனநிறைவு கொள்ளாதவனாய்ப் போர்களில் பகைவர்களை
அழித்து
491. ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஒழித்த = தன்னோடு
பொருந்தாத பகைவர் புறமுதுகிட்டு
ஓடியவிடத்தே விட்டுப்போன
492. விசும்பு செல் இவுளியொடு பசும் படை தரீஇ = விண்ணில்
பறப்பதுபோல் பாய்ந்து செல்லும்
குதிரைகளுடன் பசிய சேணமும்
தந்து
493. அன்றே விடுக்கும் அவன் பரிசில். = நீ
சென்ற அன்றே, உனக்குப்
பரிசில் அளித்து வழி
அனுப்புவான்.
கருத்துரை:
பொற்றாமரை மலர்களை
உங்கள் நீண்ட கரிய
தலைமுடியில் அழகுபெற அணிவிப்பான்.
கடலிலிருந்து நீரை முகந்துகொண்டுவந்து,
பருவ கால வானத்தில்
பகலில் பெய்கின்ற மழையில்
மின்னல் தோன்றினாற்போல், அலங்கரித்த
கரிய மயிரில் அழகு
பெறும்படி, பொன்னால் செய்து
தொடுத்த மாலையை விறலியர்
சூடிக்கொள்ளக் கொடுப்பான். குதிரை
இலக்கணநூல் கற்றோர் பாராட்டும்
வெண்மையான பிடரி மயிரையுடைய
நான்கு குதிரைகள் பூட்டிய,
பொன்னால் செய்த தேரைத்
தருவான். அதைக் கொடுத்தும்
மனநிறைவு கொள்ளாமல், போர்களில்
பகைவரை அழித்தபொழுது, அவர்கள்
விட்டுச் சென்ற, விண்ணில்
பறப்பதுபோல் பாய்ந்து செல்லும்
குதிரைகளையும் சேணங்களையும் தருவான்.
இத்தகைய பரிசில்களை, நீ
சென்ற அன்றே, உங்களுக்குக்
கொடுத்து, உங்களை வழி
அனுப்புவான்.
இளந்திரையனது மலையின் பெருமை
. . . . . . . . . . . . . . . . . . . . இன் சீர்க்
கின்னரம் முரலும் அணங்குடைச் சாரல்,
மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின், 495
கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின்,
மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில்,
செந் தீப் பேணிய முனிவர், வெண் கோட்டுக்
களிறு தரு விறகின் வேட்கும்,
ஒளிறு இலங்கு அருவிய மலைகிழவோனே. 500
அருஞ்சொற்பொருள்:
493. இன் சீர் = இனிய தாளம்
494. கின்னரம் = ஒருவகைப் பறவை; முரல = ஒலிக்க; அணங்கு = தெய்வம்; சாரல் = மலைச்சாரல்
495. மஞ்ஞை = மயில்; ஆலும் = ஆடும்; இறும்பு = இளமரக்காடு (சோலை)
496. கலை = கருங்குரங்கு; புறவு = காடு
497. சீக்கும் = வாரும்; மா = விலங்கு; துஞ்சும் = தூங்கும்; முன்றில் = முற்றம்
498. பேணிய = பாதுகாத்த; கோடு = கொம்பு (தந்தம்)
499. வேட்கும் = வேள்வி செய்யும்
500. ஒளிறு = ஒளி பெறும்; இலங்குதல் = விளங்குதல்; அருவிய = அருவிகளைக் கொண்ட; கிழவோன் = உரிமையுடையவன்.
பதவுரை:
493. இன் சீர் =
இனிய தாளம்
494. கின்னரம் முரலும் அணங்குடைச் சாரல் = கின்னரம்
என்னும் பறவைகள் பாடும்,
தெய்வங்கள் உறையும் மலைச்சாரலில்
495. மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின் = மயில்கள்
ஆடும் மரங்கள் அடர்ந்த
சோலையில்
496. கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின் = ஆண்
கருங்குரங்குகள் பாய்ந்து
உதிர்த்த மலர்கள் சிந்தின
காட்டில்,
497. மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில் = மந்திகள்
அம்மமலர்க் குப்பைகளை வாரும்,
விலங்குகள் தம் பகை
மறந்து உறங்கும் முற்றத்தில்,
498. செந் தீப் பேணிய முனிவர், வெண் கோட்டு =
சிவந்த தீயைக் இடைவிடாமல்
வளர்த்துவந்த முனிவர்கள், வெண்மையான
தந்தங்களையுடைய
499. களிறு தரு விறகின் வேட்கும் = களிறுகள்
முறித்துக் கொண்டுவந்த விறகால்
வேள்வி செய்யும்
500. ஒளிறு இலங்கு அருவிய மலைகிழவோனே. = ஒளிறுகின்ற
விளங்கும் அருவிகளையுடையவாகிய மலையை
ஆளும் உரிமையுடையவன் தொண்டைமான்
இளந்திரையன்.
கருத்துரை:
தொண்டைமான் இளந்திரையனின் நாட்டில்
உள்ள மலைச்சாரலில் இனிய இசையைத் தாளத்திற்கேற்ப கின்னரப் பறவைகள் பாடும். அங்குத் தெய்வங்கள் வாழும். அங்குள்ள மரங்கள் அடர்ந்த சோலையில் மயில்கள் ஆடும். அந்தச் சோலையில் கருங்குரங்குகள் பாய்ந்து உதிர்த்த மலர்களை மந்திகள் வாரும். விலங்குகள் தம் பகை மறந்து உறங்கும். களிறுகள் முறித்துக் கொண்டுவந்த விறகால் முனிவர்கள் தீயை வளர்த்து வேள்வி
நடத்துவர். ஒளிறுகின்ற அருவிகளையுடைய இத்தகைய மலையை ஆளும்
உரிமையுடையவன் தொண்டைமான் இளந்திரையன்.
Comments
Post a Comment